tamilnadu

img

வரும் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டம் மாற்றி அமைக்க திட்டம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுகலை பாடத்திட்டத்தை, வரும் கல்வியாண்டில் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக நிர்வாகக்குழு கூட்டத்தில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வரும் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகம் உட்பட, அதன் நான்கு வளாக கல்லூரிகளான எம்.ஐ.டி வளாகம், ஏசி டெக், ஃபி.ஆர் ஆகிய கல்லூரிகளில் அனைத்து இளநிலை மற்றும் சில முதுகலை படிப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைப்பு கல்லூரிகளுக்கான பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், செமஸ்டர் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தால், அவர்களை நேரடியாக அழைத்து, அவர்கள் முன்னிலையில் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யப்படும் எனவும், இறுதி செமஸ்டர் தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தோல்வி அடைந்தால் ஒரு மாதத்திற்குள்ளாக சிறப்பு துணைத்தேர்வு நடத்தும் முறையும் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாக குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.