திண்டுக்கல். ஆக.31- கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்கள். அது போலத்தான் புவிசார் குறியீடு வழங்கும் திட்டமும். பாரம்பரிய பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு கொடுத்து வருகிறது. புவிசார்குறியீடு பொருட்கள் சட்டம் 2003ம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. நமது நாட்டில் தனிச் சிறப்பு, தனி வரலாறு, தனி அடையாளம், தயாரிப்பு முறை ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு கொடுப்பது வழக்கம். இந்த சட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமுக்காளம், சின்னாளபட்டி சுங்குடி, ஆரணி பட்டு, தஞ்சை ஓவியம் என பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டு உள்ளது. கொடைக்கானல் மலைப்பூண்டுக்கும், பழனி பஞ்சாமிர்தத்திற்கும் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காரைக்குடி கண்டாங்கி சேலைக்கும், திண்டுக்கல் பூட்டுக்கும் புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பொருட்களுக்கு ஒரு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதாக கூறப்படுகிறது. உண்மையில் இந்த புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய ஏமாற்றத்தையே கொடுக்கிறது. சின்னாளபட்டியில் சாயப்பட்டறைகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக சுங்குடிச்சேலை உற்பத்தியும் குறைந்துள்ளது. இங்குள்ள சாயப்பட்டறை தொழிற்சாலைகளை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் போதிய உதவி செய்யாத காரணத்தால் சுங்குடிச்சேலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு தொழில் முனைவோர்களுக்கு வங்கி கடன் உள்ளிட்ட எந்த உதவியையும் செய்யவில்லை. உண்மை இப்படி இருக்க, சுங்குடிச் சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்தவுடன் அரசும் மாவட்ட நிர்வாகமும் பெருமை கொள்வதில் என்ன பயன் இருக்கப் போகிறது?
இரண்டாவது, கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. ஆனால் பூண்டு விவசாயிகளுக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை. இந்த புவிசார் குறியீடு அறிவித்தவுடன் உள்ளுர் மார்க்கெட்டில் கிலோவிற்கு ரூ.100 வரை உயர்ந்துள்ளதே தவிர பெரிய மாற்றம் ஏற்படவில்லை. ஏனெனில் வடுகபட்டியில் உள்ள பூண்டு வியாபாரிகள் மலைப்பூண்டு விவசாயிகளிடம் அடித்துப் போட்ட விலையில் பிடுங்கிக்கொள்வது தொடர்கதையாக உள்ளது. மேலும் ஒரு குவிண்டாலுக்கு 10 கிலோவுக்கு மேல் எடை மோசடியில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இந்த பூண்டு விவசாயத்தில் வெள்ளைப்பூச்சி உள்ளிட்ட பூச்சிகளின் தாக்குதலால் ஏராளமான அழிமானங்களும் உண்டு. விவசாயிகள் பல லட்சம் கடன் பெற்று பயிரை காக்கிறார்கள். ஆனால் அரசுத் தரப்பில் கடனுதவி இல்லை. பூண்டு கொள்முதல் செய்ய அரசு முன்வரவில்லை. அரசு தரப்பில் மார்க்கெட்டிங் செய்து தரவும் நடவடிக்கை இல்லை. விவசாயிகள் வத்தலகுண்டு, அல்லது கொடைக்கானலில் பூண்டு மார்க்கெட் வைத்து தர வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை அரசு கிடப்பில் போட்டு வருவதாகவும் புகார் கூறப்படுகிறது. இந்த பூண்டுக்கு மருத்துவ குணம் உள்ளது என்று கூறி ஆன் லைனில் பெரிய பெரிய கம்பெனிகள் கிலோ ரூ.500 வரை கொள்ளையடிப்பதற்குத்தான் இந்த புவிசார் குறியீடு பயன்படுகிறதே ஒழிய சாதாரண விவசாயிகளுக்கு பயன்படவில்லை.
அதேபோல, திண்டுக்கல் பூட்டுக்கு இப்போது புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பூட்டு மிக உறுதியானது என்று பெயர் பெற்றது தான். ஆனால் இந்த தொழிலில் தற்போது 75 பேர் கூட இல்லை. ஒரு காலத்தில் திண்டுக்கல் நகரத்தில் குடிசைத் தொழிலாக நாகல் நகர் பகுதியில் வேடபட்டி, சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் பூட்டு தொழில் நடைபெற்று வந்தது. ஆனால் இன்றைக்கு 3 பட்டறைகளே உள்ளன. அந்த பட்டறையிலும் 7 பேர் மட்டுமே பணியாற்றுகிறார்கள். கூட்டுறவு பூட்டுத் தொழிற்சாலையில் 200க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றினார்கள். இப்போது 5 பேர் கூட வேலை பார்க்கவில்லை. இந்த தொழில் மிகவும் நலிவடைந்தது மட்டுமல்ல, இந்த தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களும் அருகிப் போயுள்ளார்கள். கண் கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் என்பார்களே அந்த பழமொழி பூட்டுத் தொழிலுக்கு பொருந்தும். இந்த தொழிலுக்கு அரசு எந்த உதவியும் செய்யவில்லை. தொழிலாளர்களுக்கு வங்கிக்கடன் வழங்க முன்வருவதில்லை. தொழிலாளர் நலனில் அரசுக்கு அக்கறை இல்லை. ஆனால் தொழிலாளி உற்பத்தி செய்யும் பொருளுக்கு புவிசார் குறியீடு கொடுத்து வெற்று பெருமை அடித்துக்கொள்கிறதே ஒழிய வேறொன்றுமில்லை. எனவே கோமாவில் உள்ள திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு என்ற பூ மாலையை அரசு கொடுத்துள்ளது. இது பாராட்டவா அல்லது மலர்வளையமாக வைக்கவா என்பதை அரசு செய்யும் உதவியிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
இலமு, திண்டுக்கல்