புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே 20 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக பணிபுரிந்த 16 குழந்தைகள் உட்பட 37 பேர் மீட்கப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள வீரடிப்படியில் பிச்சை என்பவருக்கு சொந்தமான கரும்புத் தோட்டங்களில் கொத்தடிமைகளாக பலர் பணிபுரிந்து வருவதாக புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி மற்றும் குழந்தைகள் நல காப்பகத்துக்கு தகவல் வந்தது.
இதன் அடிப்படையில் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி உள்ளிட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது 16 குழந்தைகள் உட்பட 37 பேர் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து கொத்தடிமைகளாக பணி புரிந்து வந்த 37 பேரை மீட்ட அதிகாரிகள், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மீட்கப்பட்ட அனைவரும் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த 20 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து மீட்கப்பட்ட அனைவரையும் உணவு, உடை அளித்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியிடம் ஒப்படைத்தனர். பின்னர் அனைவரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.