tamilnadu

img

தங்கக் கடத்தல் வழக்கில் தலையிட முடியாது முதல்வருக்கு எதிராக விசாரணை தேவையில்லை

கேரள உயர்நீதிமன்றம் அதிரடி

கொச்சி, ஜூலை 22- தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் மீது தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் வழக்கை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தங்கக் கடத்தல், ஸ்பிங்ளர், இ மொபிலிட்டி ஆகியவற்றில் முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப் பட்டிருந்தது. தலைமை நீதிபதி எஸ்.மணிக்குமார் தலைமையிலான உயர்நீதிமன்ற அமர்வு புதனன்று இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.   தங்க கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) விசாரித்து வருகிறது. அவர்களால் அந்த வழக்கின் அனைத்து அம்சங்களையும் விசாரிக்க முடியும். என்ஐஏ விசாரணைக்கு மாநில அரசின் பரிந்துரை கூட தேவையில்லை என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. தங்க கடத்தல் வழக்கில் என்ஐஏ விசாரணை துவங்கி விட்டதாக  மத்திய அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த வழக்கில் தலையிட வேண்டியதில்லை என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இந்த வழக்கு முதல்வர் மற்றும் பிற முக்கிய பிரமுகர்களை எதிரிகளாக சித்தரிப்பதால் மட்டும் விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று நீதிமன்றம் கூறியது. இந்த மனுவை சேர்த்தலாவைச் சேர்ந்த மைக்கேல் வர்கீஸ் என்பவர் தாக்கல் செய்திருந்தார்.