உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடி
புதுதில்லி, ஜன. 17- மகாத்மா காந்திக்கு ‘பாரத் ரத்னா’ வழங்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய் துள்ளனர். ‘பாரத் ரத்னா’ விருதுக்கும் மேலானவர் மகாத்மா காந்தி என அவர் கள் கூறியுள்ளனர். “மகாத்மா காந்தி மிகப்பெரிய ஆளுமை மற்றும் எந்தவொரு முறையான அங்கீகாரத்திற்கும் அப்பாற்பட்டவர்” எனவும் குறிப்பிட்டுள்ளனர். நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது மகாத்மா காந்திக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், இதுதொடர்பாக மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை, தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு, வெள்ளிக்கிழமையன்று விசாரித்தது. அப்போதுதான், “மகாத்மா காந்தி தேசத்தின் தந்தை. அவர் ‘பாரத ரத்னா’ விருதை விட உயர்ந்தவர்” என்று கூறி, மனுவை, நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர். மனுதாரர் விரும்பும்பட்சத்தில், அவர் தனது கோரிக்கைக்கு மத்திய அரசை அணுகி தீர்வு காணலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.