பெண்களுக்கு பாதுகாப்பு சட்டங்கள் அப்பாவி ஆண்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்ற நீதிபதி வைத்யநாதனின் கருத்தை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப்பெற்றுள்ளது.
சென்னை தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மாணவிகள் கடந்த ஜனவரி மாதம் பெங்களூரு, மைசூர் மற்றும் கூர்க் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
அப்போது சில மாணவிகள் தங்களுக்கு 2 பேராசிரியர்கள் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சாமுவேல் என்ற பேராசிரியரை பணி நீக்கம் செய்வதற்கான நோட்டீஸ் பிறப்பித்தது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி சாமுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.வைத்யநாதன் முன் பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க கல்லூரி நிர்வாகம் வாய்ப்பு அளிக்கவில்லை என வாதிடப்பட்டது. ஆனால் கல்லூரி நிர்வாகம் தரப்பில் மனுதாரருக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி எஸ். வைத்யநாதன், ‘‘தற்போது ஆண், பெண் என இரு பாலர் பயிலும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் படிப்பது பெண் குழந் தைகளுக்கு பாதுகாப்பானது அல்ல என்ற கருத்து அவர் களது பெற்றோர்கள் மத்தியில் நிலவுகிறது. அதேபோல கட்டாய மதமாற்றத்திலும் சில நிறுவனங்கள் ஈடுபடுவதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன. தரமான கல்வியை வழங்கினாலும், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் நன்னெறியைப் போதிக்கின்றனவா என் பது மில்லியன் டாலர் கேள்வி என்றார்.
பெண்களின் பாதுகாப்புக்கு பல சட்டங்கள் உள்ளன என்றாலும், சில நேரங்களில் அப்பாவி ஆண்களுக்கு எதிராகவும் துஷ் பிரயோகம் செய்யப்படுகிறது. வரதட்சணை சட்டமே அதற்கு சிறந்த உதாரணம்.
எனவே பெண்களி்ன் பாதுகாப்புக்கான சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்கவும், அப்பாவி ஆண்களை பாதுகாக்கவும் மத்திய அரசு உரிய சட்டத்திருத்தங்களை கொண்டு வர வேண்டும்’ என அவர் தனது உத்தரவில் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சென்னை கிறிஸ்தவ கல்லூரி சார்பில் நீதிபதி வைத்யநாதனின் கருத்துகளுக்கும் வழக்குக்கும் சம்பந்தம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதி வைத்யநாதன் கருத்துக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் செவ்வாயன்று நீதிபதி வைத்யநாதன் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் குறித்த தனது கருத்தை திரும்ப பெற்றார். இதைத்தொடர்ந்து
இதையடுத்து பெண்கள் மற்றும் கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் குறித்த வழக்குகளை இனி நீதிபதி வைத்யநாதன் முன்பு பட்டியலிடக்கூடாது என வலியுறுத்தி தலைமை நீதிபதியிடம் சென்னை உயர்நீதிமன்றம் மூத்த வழக்கறிஞர் வைகை தலைமையில் 64 பேர் வழக்கறிஞர்கள் மனு அளித்தனர். இதையடுத்து இன்று பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் அப்பாவி ஆண்களுக்கு எதிராக பயன்படுகிறது என்ற நீதிபதி வைத்யநாதன் கூறியிருந்த கருத்தை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப்பெற்றுள்ளது.