tamilnadu

img

இணையதளக் குற்றங்களை தடுக்க நடவடிக்கை

சென்னை,ஏப்.25-இணையதளக் குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூக வலைதள பிரதிநிதிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை நடத்தி ஜூன் 6 அன்று அறிக்கை தர வேண்டும் என்றுசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இணையதளங்களில் நடைபெறும் சைபர் குற்றங்களை தடுக்க பயனாளர்களின் சமூகவலைதள கணக்குகளில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு கடந்த ஆண்டு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.இந்நிலையில் இணையதளக் குற்றங்களை தடுப்பது தொடர்பாக சமூகவலைதள பிரதிநிதிகளுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை நடத்தி ஜூன் 6 ஆம் தேதியன்று அறிக்கை தரவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணிபிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழனன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இணையதளக் குற்றங்களை தடுப்பது தொடர்பாக பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் மற்றும் யூ ட்யூப் உள்ளிட்ட சமூக வலைதள பிரதிநிதிகளுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். இதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் உயரதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை ஏப்ரல் 27-ஆம் தேதிக்குள் உருவாக்க வேண்டும்.அந்த குழுவானது பேச்சுவார்தை நடத்திய விபரங்களை தலைமைச்செயலாளர் ஜூன் 6 அன்று நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.