tamilnadu

img

பொது சுகாதாரத்திற்கு இப்போதும் முன்னுரிமை இல்லையா?

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பொது சுகாதார அமைப்புமுறை போதுமான அளவிற்கு இல்லாதிருப்பதையும், அதனை ஆட்சியாளர்கள் புறக்கணித்து வருவதையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. சமூக முடக்கம் பிறப்பித்து 50 நாட்கள் கழிந்தபின்னரும், மோடி அரசாங்கம் இந்த மிக நாசகர வைரஸ் தொற்றைச் சமாளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், அனுபவத்திலிருந்து எதையும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. அநேகமாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசாங்க மருத்துவமனைகள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாலும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் போதுமான அளவிற்கு இல்லாததாலும் திணறிக்கொண்டிருக்கின்றன. மும்பை நகரில் உள்ள அரசாங்க மருத்துவமனைகள் இத்தகையக் கடுமையான காட்சிகளைக் காட்டுகின்றன.

மோடி அரசாங்கம், நாட்டின் எதார்த்தமான நிலைமைகளைப் பார்ப்பதிலிருந்து கண்ணை மூடிக்கொண்டிருப்பதன் மூலமாக ஓர் அற்பத் திருப்தியைக் காட்டிக்கொண்டிருக்கிறது. இதுவரை செய்யப்பட்டிருக்கின்ற சோதனைகள் என்பவை செய்ய வேண்டிய எண்ணிக்கைகளை விட மிகவும் குறைவாகும். அதாவது ஆயிரத்திற்கு 1.8 என்ற அளவில் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது. பல இடங்களில் விரிவான முறையில் சென்று தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் எனச் சந்தேக நிலையில் இருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்தும் வேலை நடைபெறவே இல்லை.  இதற்கு, கேரளா மட்டுமே குறிப்பிடத்தக்க அளவிற்கு விதிவிலக்காக இருக்கிறது. சமூகமுடக்கம் தொடங்கி ஐம்பது நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டபோதிலும், நோய்த்தொற்று பரவியிருப்பது தொடர்பாக இன்னமும் ஒரு தெளிவான சித்திரம் கிடைக்கவில்லை. கோவிட்-19இன் காரணமாக இறப்போர் எண்ணிக்கை குறித்தும், மிகப்பெரிய அளவில் குறைந்த மதிப்பீடே வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது உள்ள கணக்கு, லட்சத்திற்கு 0.2 என்றிருக்கிறது. இது கணக்கிடும் முறையில் உள்ள பலவீனம் மற்றும் தவறான முறை என்பதால் மட்டுமல்ல, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தவறான கொள்கை முடிவுகளும் காரணமாகும். 

கோவிட்-19 நெருக்கடி நாட்டில் தனியார் சுகாதாரத் துறை எந்த அளவிற்கு சமூகப் பொறுப்பின்றி இருக்கின்றது என்பதையும், இதில் முழுமையாகத் தோல்வி அடைந்திருக்கிறது என்பதையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. ஒருசில விதிவிலக்குகள் தவிர, பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் இந்தத் தருணத்தில் தொற்றை சமாளித்திடுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து, மக்களுக்கு உதவிடும் விதத்தில் செயல்படவில்லை. நாட்டில் மொத்தம் உள்ள மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகள் 93 சதவீதம் இருக்கும் நிலையில், நாட்டில் மொத்தம் உள்ள மருத்துவமனை படுக்கைகளில் தனியார்வசம் 64 சதவீதம் இருக்கும் நிலையில், இவை இவ்வாறு செயலற்றதன்மையில் இருப்பது இத்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நேரடியாகவே பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எதார்த்த நிலைமைகள் இவ்வாறிருக்கையில், மத்திய அரசாங்கம் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை அவசரகதியில் எடுத்திடும் என்றும், அத்தகைய நடவடிக்கைகளை வலுப்படுத்திடும் என்றும் அதன்மூலம் பொது சுகாதார அமைப்புமுறையை விரிவாக்கிடும் என்றும்தான் எவரொருவரும் எதிர்பார்த்திருப்பார்கள். இதற்கு சுகாதாரத்திற்கு போர்க்கால அடிப்படையில் பொது செலவினத்தைக் கணிசமான அளவிற்கு உடனடியாக அதிகரித்திட வேண்டியது அவசியமாகும். ஆனால் இந்தத் திசைவழியில் எதுவுமே நடக்கவில்லை.

பிரதமரால் அறிவிக்கப்பட்ட 20 லட்சம் கோடி ரூபாய் நிதித்தொகுப்பு என்பது ஒரு ஏமாற்று மோசடி என்பது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அரசாங்கம் கூடுதலாக செலவு செய்திருப்பது என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1 சதவீதம் மட்டுமேயாகும். அது உறுதியளித்திருந்ததுபோன்று 10 சதவீதம் கிடையாது. மேலும், இந்தத் தொகுப்பில், சுகாதாரத்திற்கான ஒதுக்கீடு வெறும் 15 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமேயாகும். இதுவும் சென்ற ஏப்ரலில் அறிவித்த 1.7 லட்சம் கோடி ரூபாய் நிதித்தொகுப்பில் முதல் தவணையாகும்.

மத்திய அமைச்சரவை ஏப்ரல் 22 அன்று, கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதற்காக அவசர மற்றும் சுகாதாரத் தயாரிப்புக்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுத் தொகுப்புக்கு ஒப்புதல் அளித்தது. இந்தத் தொகையை மூன்று கட்டங்களாகச் செலவிடவேண்டும் என்றும் தீர்மானித்தது. 7,774 கோடி ரூபாய் உடனடிப் பயன்பாட்டிற்கும் மீதத் தொகை, அடுத்த நடுத்தர கால ஆதரவுக்கு, அதாவது ஓராண்டிலிருந்து நான்கு ஆண்டு காலத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானித்திருந்தது. இதில் மாநில அரசாங்கங்களுக்கு இந்த முதல் கட்டத்தில் மூவாயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதியாக அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. நாட்டில் உள்ள 28 மாநிலங்களுக்கும் எட்டு யூனியன் பிரதேசங்களுக்கும் இதனைப் பிரித்துக்கொடுக்கும்போது அவை பெறும் தொகை மிகவும் அற்ப அளவிலேயே இருக்கும். சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியலில் வருகிறது. தொற்றைக் கையாளுவதற்கான செலவினங்களை முழுமையாக மாநில அரசுகள்தான் தாங்கிக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றன. ஆனால் அவற்றுக்கு மிகவும் அற்ப அளவில் தொகைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்தொகுப்பு தொடர்பாக ஐந்தாவதாகவும் மற்றும் இறுதியாகவும் அளித்திட்ட அறிவிப்புகளில், ஏராளமான வாக்குறுதிகளை அள்ளிவீசியிருக்கிறார். ஆனாலும் நிதி தொடர்பாக உருப்படியான உறுதிமொழி எதுவும் இல்லை. சுகாதாரம் மீதான பொது செலவினம் அதிகரிக்கப்படும் என்றார். கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள சுகாதாரம் மற்றும் நல மையங்கள் வலுப்படுத்தப்படுவதற்கு முதலீடுகள் அளிக்கப்பட இருக்கின்றன என்றார். அனைத்து மாவட்டங்களும் தொற்றுநோய் மருத்துவமனைத் தொகுதிகளைப் பெற இருக்கின்றன என்றார். (ஆனால் இதற்கெல்லாம் எந்தக் காலக்கெடும் அவர் நிர்ணயிக்கவில்லை.) பொது சுகாதார ஆய்வுக்கூடங்கள் ஒன்றிய அளவில் அமைக்கப்படும் என்றார்.

பாஜக ஆட்சியாளர்கள், கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து முறியடிப்பதற்கு மிகவும் அவசியமானது ஓர் விரிவான மற்றும் திறமையான பொது சுகாதார அமைப்பு முறை என்கிற அடிப்படைப் படிப்பினையை கற்றுக்கொள்ளாமல் இருக்கின்றனர். சுகாதாரத்துறையைத் தனியார் வசம் தாரை வார்க்கும் திசைவழியிலேயே பாஜக அரசாங்கம் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. பொது செலவினத்திற்கு மோடி அரசாங்கம் எந்த அளவிற்கு கூடுதலாக செலவு செய்திடும் என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். மோடி அரசாங்கத்தால் 2017இல் அறிவிக்கப்பட்ட தேசிய சுகாதாரக் கொள்கை சுகாதாரம் மீதான பொது செலவினத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பில் ஒதுக்கப்பட்டுள்ள 1.15 சதவீதத்திலிருந்து, 2.5 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் இது 2025க்குள் எட்டப்படும் என்றும்  முன்மொழிவினை அளித்திருந்தது.    மேலும் மாவட்ட மருத்துவமனைகள் அரசு-தனியார்-கூட்டு அடிப்படையில் விரிவாக்கப்படும் என்றும் கூறியது. ஆகையால், இவ்வாறு இவர்கள் உறுதியளித்துள்ளபடியே தொற்றுநோய் மருத்துவ மனைகள் மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டாலும் அவை தனியார் நடத்தும் மருத்துவ மனைகளின் அடிப்படையிலேயே அமைந்திடும்.   

மோடி அரசாங்கம், தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்களின் அறிவுரைகளின்படி கோவிட்-19 தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் சொதப்பியிருப்பதற்குப் பொறுப்பாகும். தொற்றுக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என்றும், இதர நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா நன்றாகவே செய்துகொண்டிருக்கிறது என்றும் அது தொடர்ந்து கூறிவந்தது. தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மிகவும் வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்கிற உண்மையை அது உதாசீனம் செய்தது அல்லது அடக்கி வாசித்தது. சமூக முடக்கம் முடிவடையும் சமயத்தில் அது மிகப்பெரிய அளவிற்கு அதிகரித்திருப்பதை எதிர்கொள்ளத் தயாராயில்லாமல் இருக்கிறோம். மோடி, ஆரம்பத்தில், மார்ச் 25 அன்று மகாபாரதத்தில் எப்படி  “வெற்றி பெற்றார்களோ” அதேபோன்று 21 நாட்களில் வெற்றிபெற வேண்டும் என்பதில்தான் அவர்களுக்குக் கவலை இருந்தது. 

விரிவான மற்றும் வலுப்படுத்தப்பட்ட பொது சுகாதார அமைப்புமுறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும். அத்தகையதொரு பொது சுகாதார அமைப்பு முறைக்கான போராட்டம் ஓர் அரசியல் பிரச்சனையாகும். ஏனெனில், இது நாட்டு மக்களின் அடிப்படை நலன்கள் சம்பந்தப்பட்டதாகும்.

(மே 21, 2020) 
தமிழில்: ச.வீரமணி