புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை முன்னாள் பேராசிரியர், தேசிய ஆரோக்கிய முறை ஆதாரங்கள் மைய முன்னாள் செயல் இயக்குநர், மக்கள் ஆரோக்கிய இயக்கத்தின் உலக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆரோக்கியக் குழு உறுப்பினர் மருத்துவர் டி.சுந்தரராமன் கொரோனா நிலைமைகள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்.
- இணைய வழி சந்திப்பு : அ.குமரேசன்
உலக அளவில் கொரோனா பரவலை மட்டுப் படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா? தடுப்பு மருந்து சோதனைகள் தொடங்கியுள்ளதாக வரும் செய்திகள் நம்பிக்கையளிக்கும் வளர்ச்சியாக எடுத்துக்கொள்ளலாமா?
தடுப்பு மருந்து சோதனைகள் மூன்றாவது கட்டத்தி ற்குச் சென்றிருப்பது நல்ல முன்னேற்றம்தான். சாதாரண மாக இந்த மூன்றாவது கட்டச் சோதனைக்கு ஆறு மாதங்கள் ஆகும்.அதன் பிறகு அந்த மருந்துக்கு அங்கீகா ரம் வழங்கப்படுகிற நடைமுறை தொடங்கும்.அதற்குரிய வல்லுநர்கள் குழு பொறுப்பேற்பது உள்பட ஒன்பது மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகக்கூடும். அங்கீ காரம் வழங்கப்பட்ட பிறகுதான் உற்பத்திக்கான அனுமதி யளிக்கப்பட்டு, விநியோகத்துக்கான ஏற்பாடு செய்யப் பட்டு, மக்களுக்குத் தடுப்பு மருந்து செலுத்தும் நடை முறைக்கு வந்து சேரும். இப்படியான கால அளவு இருக்கிறதென்றாலும் இது ஒரு முக்கியமான வளர்ச்சிப் போக்கு. தடுப்பு மருந்து வந்துவிடும் என்ற ஒரு உத்தர வாதம் ஏற்பட்டிருக்கிறது. அதற்காக, நாம் கவனமாக இருப்பதை எந்த விதத்திலும் தளர்த்திவிடக்கூடாது.உரிய முன்னெச்ச ரிக்கைகளைப் பின்பற்றுவதைத் தவிர்த்துவிடக்கூடாது.
“ஹெர்ட் இம்யூனிட்டி” என்ற நிலை உருவானால் கோவிட்-19 நோய் தொற்றுவது மருந்து இல்லாமலே தடுக்கப்பட்டுவிடும் என்ற ஒரு கருத்து முன்வைக்கப்படுகி றது. அப்படி நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறதா?அதற்கு எவ்வளவு காலமாகும்?
சமூக அளவிலேயே தடுப்புத் திறன் உருவாவ தைத்தான் “ஹெர்ட் இம்யூனிட்டி” என்கிறோம். ஒருவரி டமிருந்து இன்னொருவருக்குத் தொற்ற முடியாத அளவுக்கு ஏற்கெனவே தொற்று பரவியிருக்கும். அந்த நிலை உருவாவதற்கு மக்கள் தொகையில் 60 முதல் 65 சதவீதம் பேர் வரையிலாவது தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும். இன்று உலக அளவில் சுமார் 20 சதவீதம் பேருக்குத்தான் பரவியிருக்கிறது. பெரிய அளவில் பரவுவதற்கு முன் தடுப்பு மருந்து வந்துவிடும் என்று எதிர்பார்ப்போம். ஆயினும், குறைந்தது ஓராண்டுக் காலத் திற்காவது மிகுந்த கவனத்தோடு இருந்தாக வேண்டும். இந்தியாவில் பல இடங்களில் பல அளவுகளில் பரவியிருக்கிறது. சில இடங்களுக்கு இப்போதுதான் போயிருக்கிறது. தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் இதே போன்ற நிலைதான். சென்னையில் ஓரளவு மட்டுப்படத் தொடங்கிவிட்டது என்றாலும் மற்ற மாவட்டங்க ளில் அதிகரித்து வருகிறது. சில பகுதிகளில் இப்போது தான் நுழைந்திருக்கிறது. தமிழகத்தில் சராசரியாக ஒரு நாளுக்கு 5,000 பேருக்கும், அகில இந்திய அளவில் சராசரியாக 40,000 பேருக்கும் தொற்று ஏற்படுகிறது. தொற்று ஏற்படுவோர் எண்ணிக்கை குறையத் தொடங்கி விட்டது. தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருப்போரி டையே மட்டும்தான் அதிகரிக்கிறது என்கிற கட்டத்திற்கு வந்த பிறகுதான் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது என்று சொல்ல முடியும்.
இந்த நிலைமையில் பரிசோதனைகள் மிக முக்கியம் இல்லையா?
ஆம். இந்தியாவிலும் தமிழகத்திலும் சில இடங்க ளில் ஓரளவுக்கு மட்டுப்பட்டிருக்கலாம் என்றாலும் பல இடங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பரிசோதனைகள் விரிவாக நடைபெறுவதுதான் உண்மை நிலவரத்தைக் காட்டும், அதுதான் சிகிச்சை கிடைப்பதையும் உறுதிப்படுத்தும்.பரிசோதனை முடிவு “பாசிட்டிவ்” என்று வந்தவர்களைத் தனிமைப் படுத்துவது அவசியம்.அதற்கேற்ப பரிசோதனை வசதி களை உறுதிப்படுத்தியாக வேண்டும்.அதில் பற்றாக்குறை இருந்தால் பலனில்லாமல் போய்விடும். எந்தவொரு காய்ச்சலும் இரண்டு நாளுக்கு மேல் இருக்கிறதென்றால் அது கொரோனாவாக இருக்கும் என்று சந்தேகப்பட்டு பரிசோதனைக்கு ஏற்பாடு செய்வது அவசியம். பரிசோதனைக் கருவிகள் மட்டு மல்லாமல், ஆம்புலன்ஸ் போன்ற வசதிகளும் பற்றாக் குறையின்றி கிடைக்கச் செய்தாக வேண்டும். ஒரு மாவட்டத்தில் தொற்று ஏற்பட்ட நோயாளிகளே பதிவாகவில்லை. அந்த மாவட்டத்திலும் பரிசோதனை நடத்த வேண்டுமா என்றால், ஆமாம், நிச்சயமாக நடத்த வேண்டும். அப்படி நடத்தினால்தான் 10 பேருக்கு இருக்கிறபோதே கட்டுப்படுத்த முடியும்.வெளியே இருந்து வந்தவர்களை மட்டும் பரிசோதிப்பது, காய்ச்சல் வந்தவர்களை மட்டும் பரிசோதிப்பது என்பதெல்லாம், நிலைமை கையை மீறிப்போவதைத் தடுக்க உதவாது. சென்னையில் ஒப்பீட்டளவில் வெற்றிகரமாக அமைந்தி ருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் பல இடங்களில் காய்ச்சல் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டதும், வீட்டுக்கு வீடு காய்ச்சல் சோதனைக் கருவியோடு ஊழியர்கள் சென்று வருவதும்தான். இதே போன்ற அணுகுமுறை எல்லா இடங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
உலக அளவிலும் இதே அணுகுமுறை பொருந்தும், இல்லையா?
நிச்சயமாக. எங்கேயெல்லாம் முன்கூட்டியே தயார் நிலையில் இருந்தார்களோ அங்கேயெல்லாம் வெற்றிகர மாக சமாளித்திருக்கிறார்கள். சீனாவின் வுஹான் பகுதி யில் தொற்று கடுமையானவுடனேயே, இது தங்கள் நாடுகளுக்கும் பரவும் என்று ஊகித்து, தென்கொரியா, ஐஸ்லாந்து, நியூசிலாந்து இங்கேயெல்லாம் என்ன செய்தார்கள் என்றால், பரிசோதனைக் கருவிகள், சிகிச்சைக் கருவிகள், மருந்துகள், பாதுகாப்பு உடைகள் தயாரிக்கிற நிறுவனங்களை அழைத்து, போதிய அளவில் உற்பத்தி செய்து தயார் நிலையில் வைத்தி ருக்கக் கூறி, தேவையான பணத்தையும் கொடுத்து விட்டார்கள். இதனால், அந்த நாடுகளில் தொற்று ஏற்படத் தொடங்கிய உடனேயே பரிசோதனைகளை விரிவாக நடத்தி, ஆரம்ப நிலையிலேயே பெருமளவுக்கு சமாளிக்க முடிந்தது. சாதாரணமான சந்தேகமாக இருந்தால் கூட பரிசோதனை செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டது. கடுமையான ஊரடங்கு இல்லாமலே இதையெல்லாம் அவர்களால் செய்ய முடிந்தது. கூட்டமாகக் கூடக்கூடிய இடங்களும் ஓரளவுக்குப் போக்குவரத்தும்தான் கட்டுப்படுத்தப்பட்டன.
உலகப் பேரழிவின் ஆரம்பமே இந்தக் கொரோனா என்று சிலர் சொல்கிறார்கள். மிகையாகச் சொல்கிறார்களா அல்லது அவர்களுடைய அச்சத்தில் நியாயம் இருக்கி றதா?
இது அளவுகடந்த மிகையான கணிப்புதான்.எதுவுமே செய்யவில்லை என்றால் கூட இறப்பு விகிதம் வழக்கமானதை விட ஒரு சதவீதம் அல்லது இரண்டு சத வீதமே கூடுதலாக இருக்கும்.அதையும் நாம் அனுமதிக் கக்கூடாதுதான் என்றாலும், இது உலகப் பேரழிவு என்று சொல்வதற்கில்லை. நூறு ஆண்டுகளுக்கு முன் இதைவிடக் கொடுமை யான ஸ்பானிஷ் ஃபுளூ ஏற்பட்டது. கோடிக்கணக்கில் மக்கள் உயிரிழந்தார்கள். கடுமையான பிளேக் பாதிப்பு கள் ஏற்பட்டிருக்கின்றன. அப்போதும் உலகத்தின் அழிவு என்று சொன்னவர்கள் உண்டு.ஆனால் மனிதர்கள் அவற்றை வென்று காட்டினார்கள். முகக் கவச ஏற்பாடுகள், சமூக இடைவெளி, பரிசோதனைகள், ஆக்சிஜன் கருவிகள் போன்ற அறிவியல், மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சிகள் இன்று போல இல்லாத காலத்திலேயே இது சாத்தியமானதென்றால் இன்று பல மடங்கு சாத்தியம். இந்த வளர்ச்சிகளும் வாய்ப்பு களும் எல்லோருக்கும் கிடைக்கச் செய்வதைத்தான் வலி யுறுத்த வேண்டுமே தவிர, உலக அழிவு என்ற கலக்கம் தேவையில்லை.
கொரோனா நிர்ப்பந்தத்தால் இன்று ஏற்பட்டுள்ள வீட்டி லிருந்தே வேலை செய்வது போன்ற ஏற்பாடுகள் இனி நிரந்தரமான வாழ்க்கை முறைகளாகிவிடும் என்ற ஒரு அனுமானம் முன்வைக்கப்படுவது பற்றி என்ன கருதுகிறீர்கள்?
மனிதர்களுடைய இயல்பே கூடி வாழ்வதுதான். அதாவது சமூகமாக வாழ்வதுதான். சமூகமாக வாழத் தொடங்கியதால்தான் மனிதகுலம் இந்த வளர்ச்சிக ளைக் கண்டது. வேலைக்குச் செல்வது சம்பளத்திற்காக மட்டுமில்லையே – அது ஒரு சமூகத் தொடர்பு அல்லவா? பிள்ளைகள் பள்ளிக்குப் போவது பாடப்புத்தகம் படிப்பதற்காக மட்டுமில்லையே – அங்கே நண்பர்கள் கிடைக்கிறார்கள் என்ற சமூக உறவுக்காகவும் தான் அல்லவா? இதிலிருந்து மனிதகுலம் ஒருபோதும் விலகிவிடாது, விலகியிருக்க முடியாது. சில வகை வேலைகளை வீட்டிலிருந்தே செய்ய முடியும் என்பதைக் கற்றுக்கொண்டு விட்டோம் என்பது உண்மைதான். ஆனால் அது தகவல் தொழில்நுட்பத் துறை போன்ற சில வகைத் தொழில்களில்தான் சாத்தியம். பொருள் உற்பத்தி சார்ந்த தயாரிப்புத் தொழில்களை எப்படி வீட்டிலி ருந்தே செய்வது? எவ்வளவு தொழில்நுட்பம் வளர்ந்தி ருந்தாலும் நேரில் சந்தித்து, தொட்டுப்பேசி, அன்பைப் பரிமாறி, விவாதித்து வளர்த்துக் கொள்கிற உறவு சுகமா னது, அடிப்படையானது. ஆகவே இந்தக் கோணத்தில் பார்த்தாலும் தற்போதைய ஏற்பாடுகள் தற்காலிக மானவைதான்.
தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு, பின்னர் நோயைக் குணமாக்கும் மருந்து வருவதற்கு இட்டுச்செல்லுமா?
தடுப்பு மருந்துகள் பெருமளவுக்குப் பயன்படுத்தப் படுகிறபோது நோய் இயல்பாகவே ஒழிந்துவிடும். அதே நேரத்தில், நோயை ஒழிப்பதற்கான மருந்தைக் கண்டு பிடிப்பதற்கான ஆராய்ச்சிகளும் நடந்துகொண்டேதான் இருக்கும். வேறு நோய்களைக் குணப்படுத்துவதற்காகக் கண்டுபிடித்த மருந்துகளை கோவிட்-19க்கும் கொடுத்துப் பார்க்கிறார்கள். இந்த ஆராய்ச்சிகள் முழு வெற்றி பெறுமா, எப்போது வெற்றி பெறும், இனி பய மில்லாமல் இருக்கலாம் என்று சொல்கிற நிலைமை வருமா என்று இப்போது சொல்ல முடியாதுதான். வெற்றி பெற வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பம். அப்படி வந்தபிறகும் தடுப்பு மருந்துகளின் பங்களிப்பு தொடரும். தற்போதைய ஆராய்ச்சிகள் வேறு நோய்களைக் குணப்படுத்தவும் இட்டுச் செல்லக்கூடும். நம்பிக்கையோடு காத்திருப்போம்.
ஊரடங்கு இல்லாமலே சமாளித்த நாடுகள் பற்றிச் சொன்னீர்கள். இவ்வளவு கடுமையான, கறாரான ஊரடங்கு தேவைதானா?
தொற்றை வெற்றிகரமாகச் சமாளிப்பதற்கான ஒரு தற்காலிக முன்தயாரிப்பாக ஊரடங்கு தேவைதான். ஆனால், குறைந்தது மூன்று வார காலம் அவகாசம் கொடுத்து, விரும்புகிறவர்கள் அவரவர் ஊர்களுக்குச் செல்ல வாய்ப்புகள் அளித்து, இப்படியிப்படிச் செய்யப் ்போகிறோம், வேண்டிய முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுங்கள் என்று மக்களைத் தயார்ப்படுத்தி அறி வித்திருக்க வேண்டும். அப்போது பல துயரங்களைத் தவிர்த்திருக்க முடியும்.புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்ப அனுமதித்து உரிய வசதி செய்து கொடுத்திருக்க வேண்டும். இப்படி திட்டமிட்ட முறையில் செய்யாததால் ஊரடங்கு உரிய பலனைத் தரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கோயம்பேடு சந்தையிலிருந்து பரவியது, மீன் சந்தையிலிருந்து பரவியது என்றெல்லாம் சொல்லப் பட்டது. மருத்துவமனைகளிலிருந்தே கூட பரவக் கூடும். அப்படியான இடங்களைக் கண்டறிந்து, அந்தப் பகுதிகளில் தேவையான கட்டுப்பாடுகளை விதித்து, அந்தக் கட்டுப்பாடுகளைக் கறாராகச் செயல்படுத்தியி ருந்தால் பெரிய அளவுக்குப் பலன் கிடைத்திருக்கும். சாலைப் போக்குவரத்தையே முடக்குவது, தெருவில் ஒருவருக்கு வந்திருந்தால் தெருவையே மூடுவது போன்ற நடவடிக்கைகள் தேவையில்லை. ஞாயிறு மட்டும் முழு ஊரடங்கு, மாலை 7 மணிக்கு மேல் ஊரடங்கு போன்றவற்றாலும் பெரிய நன்மையில்லை. இப்படி யான அறிவிப்புகள்தான் கடைகளில் கூட்டம் அதிகரிக்க இட்டுச்செல்கிறது.
வெற்றிகரமாக சமாளித்துள்ள நாடுகளில் அப்படி என்ன தான் செய்தார்கள்?
ஏற்கெனவே சொன்ன நாடுகளோடு பின்லாந்து, ஸ்வீடன், நார்வே, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளையும் சேர்த்துக்கொள்ளலாம். அங்கே யெல்லாம் ஊரடங்கை நம்பிக் கொண்டிருக்காமல், எல்லோருக்கும் பரிசோதனை என்பதை உறுதிப்படுத்தி னார்கள். பரிசோதனைக்கான வழிகளை எளிதாக்கி னார்கள். யார் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று ஊக்குவித்தார்கள். பாசிட்டிவ் என்று வந்தவர்களை உடனடியாகத் தனிமைப்படுத்தி, முழுமையான சிகிச்சை கிடைப்பதை உறுதிப்படுத்தி னார்கள்.அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும் தனியாக இருக்க வைத்தார்கள். அவ்வளவுதான். ஐஸ்லாந்திலும் ஸ்வீடனிலும் கொஞ்சம் கூட ஊரடங்கு கிடையாது. சீனாவில், பாதிப்புக்குள்ளான வுஹானையும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களையும் தவிர்த்து நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கவில்லை. ஊரடங்கு நடைமுறைகளையும் போலீசை வைத்துச் செய்ய வைக்கவில்லை, சமூகப் பணியாளர்களையும், தொண்டில் ஈடுபட முன்வந்தவர்களையும் நல்ல முறை யில் பயன்படுத்தினார்கள். ஜப்பானில் பொதுப் ்போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்படவே இல்லை. இங்கே என்ன நடந்தது என்பதோடு இதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.
சோசலிச நாடுகளில் கொரோனா பாதிப்பு எப்படிக் கையாளப்பட்டது?
குறிப்பாக வியட்நாமில், கிட்டத்தட்ட கொரோனா வால் மரணம் இல்லை என்ற நிலைமையை ஏற்படுத்தி னார்கள். அங்கேயும் இப்படிப்பட்ட நடவடிக்கைகள்தான் மேற்கொள்ளப்பட்டன. கியூபாவில் சிறப்பான முறையில் கையாண்டு வருகிறார்கள். இதர லத்தீன் அமெரிக்க நாடு களோடு ஒப்பிட்டால் அந்த நாடு பெரும் சாதனை நிகழ்த்தியிருக்கிறது. சீனாவில் தொற்று தொடங்கிய சில மாநிலங்கள் தவிர்த்து வேறு எங்கும் பரவவில்லை.
இந்த நாடுகள் வெற்றிகரமாகச் செயல்பட்டதில் இயற்கைச் சூழல் ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கிறது என்று சொல்லப்படுவது பற்றி…
அப்படிச் சொல்வதற்கு அடிப்படை இல்லை.இந்தியாவில் இந்த அளவுக்குப் பாதிப்பு இருக்கிறது. இதே சூழல்கள் உள்ள இலங்கையில் இதே போன்ற பாதிப்புகள் இல்லை. ஒரே மாதிரியான சூழல்கள் உள்ள பல மேற்கத்திய நாடுகளில் ஒரே மாதிரியான பாதிப்பு கள் இல்லை. இந்திய மக்களுக்கு இயற்கையான எதிர்ப்புத் திறன் இருப்பதாகக் கூறப்பட்டதும் தவறு. இறப்பு விகிதம் உட்பட மற்ற பல நாடுகளைப் போ லத்தான் இங்கேயும்.கொரோனா எந்தப் பாகுபாடும் பார்க்காமல்தான் தாக்குகிறது.கவனிப்பும் சிகிச்சையும் பாகுபாடின்றிக் கிடைப்பதே முக்கியம்.
இந்தியாவில் இனியாவது என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை விவாதித்து, என்ன செய்ய வேண்டும் என்று அரசுக்கும் மக்களுக்கும் ஆலோசனை முன்வைக்கிற அறிக்கைகளை வெளியிட்டு வருகிறோம். உடனடியாகச் செய்ய வேண்டியது காய்ச்சல் முகாம்க ளைப் பரவலாக்குவது, அங்கெல்லாம் மருத்துவர் கள், உதவியாளர்கள் இருப்பதை உறுதிப்படுத்துவது, பரி சோதனைளை விரிவாக்கி எளிதாகக் கிடைக்கச் செய்வது, தன்னார்வத் தொண்டர்களுக்குப் பயிற்சிய ளித்து ஈடுபடுத்துவது, நோய் பற்றிய அச்சத்தை விட உரிய சிகிச்சை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற கலக்கத்திலிருந்து விடுவிப்பது, விழிப்புணர்வோடு மக்கள் பங்கேற்பைக் கோரிப்பெறுவது, இப்படியான கொள்கைகளும் நடவடிக்கைகளும் தேவை. கேரளம் போன்ற முன்தயாரிப்புகள் நாடெங்கும் செயல் படுத்தப்பட வேண்டும்.தமிழகத்தில் உள்ளாட்சிகளை ஈடுபடுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள், சோதனைக் கூடங்களில் பயிற்சி பெற்ற ஊழியர்கள் போதுமான எண்ணிக்கையில் நியமிக்கப்பட வேண்டும். ஆஷா ஊழியர்கள் நியமிக்கப்பட்டு வீடுவீடாக சேவைகள் கிடைக்கச் செய்ய வேண்டும். புதுச்சேரியில் மருத்துவ வசதிகள் கூடுதலாக இருப்பது ஒரு நல்ல வாய்ப்பு.ஆனால் துணை நிலை ஆளுநர் பிரச்சனையால் உதவிப் பணிகளை அரசு மேற்கொள்வதில் ஏற்பட்டிருக்கிற சிக்கல்கள் போன்ற நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.