tamilnadu

img

‘செங்கொடியே எங்கள் வழிகாட்டி’ - என்.சிவகுரு

வெண்மணி… தமிழக பொதுவுடமை இயக்கத்தின் வரலாற்றின் மிக முக்கிய இடம். இன்றைய நாகை மாவட்டத்தில் உள்ள இச்சிறு கிராமம் தான் இந்திய சமூகத்தில் இன்றும் நிலவும் வர்க்க மற்றும் சாதிய வேறுபாடுகளை உணர்த்தும் சாட்சி. அதெல்லாம் எங்க இருக்குங்க? மறைஞ்சு ரொம்ப வருசமாச்சு என சொல்லுவோருக்கு சாட்சி. ஒரு அரை நூற்றாண்டு கால போராட்டத்தை இன்னமும் பலர் சொந்தம் கொண்டாடும் நேரத்தில், லட்சக்கணக்கான மக்களுக்கு இன்னும் உத்வேகமாய் ,கிரியா ஊக்கியாய், நெஞ்சுரம் கொடுக்கும் விசயமாக இருப்பது வீர வெண்மணி என்று சொன்னால் மிகையாகாது. அந்த வெண்மணி கிராமத்தில் தோழர் இராமையாவின் குடிசையில் இறந்து போன (கொலை செய்யப்பட்ட) 44 தியாகிகளின் வாரிசுகள் இன்னும் வாழும் சாட்சிகளாக , கம்பீரமாக செங்கொடி இயக்கத்தின் புதல்வர்களாக அம்மண்ணில் இருக்கின்றனர். 

அதில் ஒரு சில தோழர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு பக்கம் செங்கொடி இயக்கம் அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவர்க ளுக்காக செய்த அரும் பணிகள், செய்ய முடியாமல் போன விசயங்கள், என பல பேச்சுகள் உரையாடலில் இருந்தது. ஆனாலும் செங்கொடி இயக்கத்தின் மகத்தான தலைவர் கள், வெண்மணியின் வாரிசுகளுக்காக அவர்கள் எடுத்து கொண்ட தனிக் கவனம் , அக்கறை, உழைப்பு என அனைத்தையும் நெகிழ்ச்சியோடு பகிர்ந்தனர்.  நெஞ்சை உறைய வைக்கும் ஒரு கொடூரமான கொலை, மனித உரிமை மீறல், சாதிய - வர்க்க வன்மம் என பல கோணங்களில் தாக்குதலுக்கு ஆளான அப்பாவி விவசாயத் தொழிலாளிகள், செங்கொடி சங்கத்தில் இணைந்து செயல்பட்டதற்காக அனுபவித்த துயரங்கள், தாக்குதல்கள் என பல வகைகளில் அன்றாட வாழ்வே கேள்விக்குறியாகும் நிலை என அனைத்தையும் தங்க ளுக்கே உரிய மொழியில் உரையாடினர். 

ஒரு தோழர் யதார்த்தமாக சொன்னார். அப்ப இருந்த நிலை இப்ப இல்லை. சமூக மரியாதையும் உறவும் மாறி யிருக்கு. ஆனால் பொருளாதாரமா ஒன்றும் பெருசா மாறல. உண்மை தான். கிராமப்புற பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்கள் இன்னும் நிகழவில்லை. உருக்குலைந்து தான் வருகிறது எனும் உண்மையை நாம் அறிகிறோம்.  வெண்மணி குறித்த ஏராளமான பதிவுகள், புதினங்கள், வழிகாட்டிய தலைவர்களின் வரலாறுகள் என ஏராளம் இருக்கின்றது.  ஆய்வு நூல்கள், வெவ்வேறு அரசியல் கண் ணோட்டங்களிலிருந்து உருவாக்கப்பட்ட நூல்கள் என இன்னும் அந்த சம்பவம் பலரின் ஆய்வுக் களமாக இருக்கி றது அறிவு தளத்தில். ஆனாலும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் ஏராளம் உள்ளன. நான் சந்தித்த தோழர்கள் அனைவரும் வெண்மணி சம்பவத்தின் போது பத்து ,பதிமூன்று, பன்னிரெண்டு வயதில் இருந்தவர்கள். ஆனாலும் அந்த கோர படுகொலையை கண் முன்னே காட்சிப்படுத்தினார்கள், அதே குழந்தைமை அப்பாவி தனத்தோடு.

பொதுவுடைமை இயக்கம் வெண்மணிக்காக செய்திட்ட பல பணிகளை நெகிழ்ச்சியோடு பகிர்ந்தனர். வெண்மணிச் சம்பவத்தின் போது, முதலில் நடந்த தாக்குதலில் தப்பித்துச் சென்று, நீண்ட நேரம் கழித்து ஊருக்கு வந்த போது தோழர் இராமய்யாவின் குடிசைக்கு மிக அருகில் நடந்து சென்ற போது  குண்டர்கள் அந்த சின்ன ஒலை குடிசையை சுற்றி வளைத்து நின்னாங்க. நான் ஒரு சிறுவனாக இருந்ததால் எதுவுமே செய்ய முடியல. வெறும் குடிசைக்குத் தான் தீ வைக்கிறாங்கன்னு நெனச்சேன்.  ஆனா அந்த குடிசைக்குள்ள தான் எல்லோ ரும் இருந்தாங்கன்னு ரொம்ப நேரம் கழிச்சு தான் தெரிஞ்சுச்சு என தன் குடும்பத்தினர் 12 பேரை இழந்த சோகத்தை இன்றும் கண்ணீரோடு பகிர்ந்தார் தோழர் கணேசன். ஒடிப் போய் காப்பாத்தக் கூட முடியல தோழர். ஏன்னா பல தோழர்கள் அந்த சமயம் ஊரிலே இல்ல. மொதல்ல அடியாட்கள் வந்து தாக்குனாங்க. தோழர்கள் திருப்பி தாக்குனாங்க. ஒடிட்டாங்க.

பின்னாடி நெறைய ஆள தெரட்டிட்டு வந்தாங்க. மொரட்டுத் தனமா தாக்குனாங்க. குருவி சுடுற துப்பாக்கிய வெச்சு சுட்டாங்க. பெரிய கல்லால அடிச்சாங்க. நாங்களும் பதிலுக்கு அடிச்சோம். ஆனாலும் முடியல. முக்கியமான தோழர்கள் இல்லாததால் ரொம்ப கஷ்டமாயிடுச்சு. செதறி ஒடிட்டோம். ஒரே குடிசையில் ஒளிஞ்சிட்டு இருந்ததை தெரிஞ்ச அடியாள் கூட்டம் கொளுத்திட்டானுவ.  அப்புறம் போலீசு வந்தது. அதெல்லாம் தான் உங்களுக்கு தெரியுமே தோழர் என அவர் சொல்லி முடித்து விட்டு “ இருக்குற வரைக்கும் அத மறக்கவே மாட்டோம்” அமைப்பை விட்டும் போகவும் மாட்டோம். என் குடும்பம் இன்னும் கட்சியில இருக்கு என்றார். தனிப்பட்ட முறையில் என் குடும்பத்துல்ல பெரிய மாற்றம் ஒன்னும் இல்ல என சொல்லிட்டு ரேசன் கட மூடுற நேரத்துக்குள்ள போகணும்.  இல்லாட்டி ஒன்னும் கெடைக்காது எனச் சொல்லி சைக்கிளை மிதிக்க துவங்கினார். 

அம்பது வருசத்துல பெரிய மாற்றம் ஒன்னும் ஆகல தோழர். கிராமம் அப்படியே தான் இருக்கு. எதோ கெடச்ச நிலத்துல வெவசாயம் பண்றோம், ஓடிகிட்டிருக்கு. அரசியல் முன்ன மாதிரியும் இல்ல. அன்னைக்கு காவல் துறையும் ஆட்சியில் இருந்தவங்களும் செஞ்ச துரோகத்த இன்னும் மறக்க முடியல தோழர். படுகொலை நடந்த பிறகு நாகப்பட்டினம் போலீசு வந்து நேரில் பார்த்த சாட்சின்னு என்ன கூட விசாரிச்சாங்க எனச் சொல்லும் தோழர் ராமலிங்கம் நான் சொன்ன தெல்லாம் எழுதிக்கிட்டாங்க. என்ன மட்டுமில்ல பல பேரை விசாரிச்சாங்க. ஆனா கடைசியில் என்ன பண்ணு னாங்கன்னு தெரியுமே தோழர். ஒரு பக்கம் பூந்தோட்டத்தி லிருந்து அடியாள். இன்னோரு பக்கம் நாயுடுவின் அடியாட்கள் என ரெண்டு பக்கமும் தாக்குனாங்க.  நேரடியா பாத்தேன். போலீசு கிட்ட சொன்னேன். ஆனா நியாயம் கெடைக்கல. 

அன்னிக்கு ( டிசம்பர் 25) ராத்திரியே மத்த கிளை தோழர்கள், தலைவர்கள் மீயென்னா ( மீனாட்சி சுந்தரம்). அன்றைய  வட்டச் செயலாளர்), ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் எல்லாம் வந்துட்டாங்க. பல தோழர்கள் தலைவர்கள் வந்தாங்க. பி.ஆர், ஜி.வி.,எம்.எஸ்., எஸ்.கே ( கணேசன்) எல்லோரும் வந்தாங்க. எங்க ஊருமேல, தோழர்கள் மேல ஜி.விக்கும் எம்.எஸ்க்கும் ரொம்பக் கரிசனம். அதனால் அடிக்கடி வரு வாங்க. அதுவும் குறிப்பா எமர்ஜென்சி காலத்துல ரெண்டு  பேரும் வேசம் போட்டுட்டு சைக்கிள்ள கிராமத்துல யாருக்கும் தெரியாத மாதிரி வருவாங்க. நெறைய உதவி செஞ்சாங்க. மறக்கவே முடியாது. 

அப்புறம் 72ல்லன்னு நெனக்கிறேன். கட்சியோட அகில இந்திய மாநாடு மதுரையிலே நடந்தது. முதல் முறையா வெண்மணி தியாகிகளின் நினைவாக “சுடர்ப் பயணம்” நிகழ்ச்சி ஏற்பாடு நடந்தது. மதுரைக்கு நடந்தே சென்றோம். எல்லா ஊரிலும் பெரிய ஏற்பாடு பண்ணி வரவேற்பு கொடுத்தாங்க. அந்த சுடரை தோழர் சுந்தரய்யா கையில கொடுத்தது மறக்கவே முடியாது என கண் கலங்க தன் நினைவுகளை பகிர்ந்தார் தோழர் இராமலிங்கம். சுத்தி நாலா பக்கமும் ரவுடிங்க. அடிங்கடா..ஒதைங்க டான்னு ஒரே சத்தம். வயல்ல உட்கார்ந்துட்டு இருந்தேன். 100 பேர் வந்தாங்க. ஓடி போனேன். தப்பிச்சு போகாம இருக்க மரத்துல கட்டி போட்டாங்க. விடியற்காலையிலே 4மணிக்கு தான் போலீசு வந்து அவுத்து வுட்டாங்க. 6 மணிக்கு மேல தான் தீயணைப்பு வண்டி வந்துச்சு. திருக்குவ ளையில் இருந்து வந்துச்சுன்னு சொன்னாங்க. குடிசைக் கிட்ட நெருங்கவே முடியல. சுத்தி போலீசு. எங்க சொந்த மெல்லாம் கரிக்கட்டையா இருந்தாங்க. ஊருல இல்லாத வங்கன்னு கணக்கு பண்ணும் போது அடையாளம் தெரிஞ்சுச்சு. வெவசாயத்த நம்பி தான் இருக்கோம். இந்த வருசம் பரவாயில்ல தோழர். ஜி.வி, பி.எஸ்.தனுஷ்கோடி, எம்.செல்லமுத்து அடிக்கடி வருவாங்க. தோழர் ஜோதி பாசு கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுனாங்க.

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் லாப்டி இயக்கம் சார்பாக வந்தாங்க. நெலம் கொஞ்சம் கெடைச்சுச்சு. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எங்களுக்கு தோழர் ஜி. வி., உதவி செய்வாங்க. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய கிடைத்த அரிசி மூட்டையை தலயில தூக்கிட்டு வருவாரு. மறக்க முடியாது தோழர். அன்னிக்கு நாங்க பார்த்த அரசியலுக்கும் இன்னிக்கு இருக்குற “ சோக்கு” அரசியலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. ஆனா என்ன பண்றது. இன்னிக்கு அது தானே பலருக்கு புடிக்குது என சலிப்போடு சொன்னார் இராமையன் தம்பி.

1968க்கு முன்னாடியே பிரச்சனை ஆரம்பமாயிடுச்சு.சுத்து வட்டாரத்துல எல்லா இடத்திலும் நமக்கும் அவங்க ளுக்கும் கொடி ஏத்தறதுல பிரச்சனை தான். நாம தைரி யமா தான் இருந்தோம். கிராமங்கள்ள தோழர்கள் தான் பாதுகாத்தாங்க. சம்பவத்தன்னிக்கு நான் ஊருல இல்ல. எரு அடிக்க கூட்டிட்டு போயிட்டாங்க. நைட்டு தான் வந்தேன். விசயமே அப்ப தான் தெரிஞ்சுச்சு. சின்ன வயசா இருந்ததால் பெரிய வெவரம் இல்ல தோழர். ஆனால் ஊரே அழுதுச்சு . பக்கத்து ஊர் தோழரெல்லாம் அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா வந்தாங்க. தலைவர்களெல்லாம் வந்தாங்க. (தோழர் மீயென்னா, ஏ.ஜி,கே,ஏ.எஸ்.ரெத்தி னம், தேவூர் தங்கராஜ்).  ஒரே சத்தமா இருந்துச்சு. அப்புறம், கட்சி தான் எல்லாத்தையும் பார்த்துகிச்சு. சின்ன சின்னதா பல உதவிகளை செய்தாங்க. எங்க கிராமத்துல பலருக்கு அப்ப கட்ட துணி கூட இல்லாம போச்சு. கிழிஞ்ச துணிமணி தான் இருந்துச்சு. புது துணிமணியெல்லாம் தோழர் ஜி.வி தலைமையில பல தோழர்கள் வந்து கொடுத்தாங்க. ரொம்ப நாளைக்கு எங்க கிராமத்துல வழக்கு, விசார ணைன்னு போயிடுவோம். மக்கள் கஷ்டத்துல இருப்பாங்க. சாப்பாட்டுக்குக் கூட சிரமம். அப்பல்லாம் தோழர் ஜி.வி தோளில் மூட்டையை  சுமந்து வந்து கொடுத்ததல்லாம் ஞாபகம் இருக்கு. 

ரொம்ப கொடுமை தோழர். எங்க குடும்பத்திலிருந்து 11 பேர் எரிஞ்சு போயிட்டாங்க. அம்மா, தம்பி, பாட்டி, சொந்தம் ஒரு எட்டு பேர். சாயந்திரமே கலவரம் ஆரம்பமா யிடுச்சு. ரவுடிக் கூட்டம் வந்து வெறியாட்டம் போட்டாங்க. குருவி சுடுற துப்பாக்கி வச்சு சுட்டாங்க. 100 பேருக்கு மேல இருக்கும். வெரட்டி வெரட்டி அடிச்சாங்க. நாங்களும் திருப்பி அடிச்சோம். மொதல்ல ஒடிட்டாங்க. அப்புறம் கூட்டமா வந்து தாக்கிட்டாங்க.  குடிசைக்கு தீ வச்சாங்க. சனம் பூரா உள்ள மாட்டிகிட்டு தப்பிச்சு வெளிய வர முடியாம போய்,  நைட்டு அப்புறமா போலீசு வந்துச்சு. நாங்க தான் கலவரம் பண்ணி னோம்ன்னு எங்கள கைய பின்னாடி கட்டி அடிச்சாங்க. காலையிலே பெரிய போலீஸ் வந்து அவர் ஏன் இவங்கள கட்டிப் போட்டு வச்சு வச்சிருக்கீங்கன்னு கேட்ட போது அவிழ்த்து விட்டாங்க. தண்ணி குடிக்க போன போது தான் எல்லா உடலையும் பார்த்து, என் தம்பி கருகின கட்டையா இருந்தத பார்த்து மயக்கமாயிட்டேன் தோழர் என கண் கலங்கினார் தோழர் பாலையன். ஒரு கொடூரத்த பார்த்த சாட்சிகள்ள நானும் ஒருத்தன் தோழர்.

அப்புறம் அடையாள அணிவகுப்பு. விசாராணை, குறுக்கு விசாரணை. கோர்ட் கேஸ். நடந்ததெல்லாம் தெரி யுமே, தோழர். என்ன பண்ணுறது. அரசும் கோர்ட்டும் அவங்களுக்கு சாதகமா இருந்துச்சு. அப்ப கட்சிக் குடும்பங்கள தலைவர்கள் கண்ணும் கருத்துமா பார்த்து கிட்டாங்க. தோழர்கள் ஜி.வீரய்யன், பி.எஸ்.தனுஷ்கோடி, எம்.செல்லமுத்து, ஜி.வி.யோட தம்பி தோழர் மோகன் இவங்கெல்லாம் எங்க கிராமத்தோட நல்லது கெட்டது எல்லாத்திலும் இருப்பாங்க. இப்ப எல்லாம் கவர்ச்சி அரசி யலா போச்சு. சாதிவாரியா தான் எல்லாமே நடக்குது.   நாங்க மாறமாட்டோம். கூலி பிரச்சனை இன்னிக்கு பெருசா இல்ல. ஆனா அன்னிக்கு அரைப்படி நெல் கூலி கூடுதலா கேட்டதால சொந்த பந்தங்கள இழந்தேன். அவங்க காணாம போயிட்டாங்க. நாம இருக்கோம். என்னிக்கும் இருப்போம் என அவர் சொல்லி முடித்த போது வெண் மணியின் வாரிசுகளின் குரலில் ஒரு கம்பீரம் தெரிந்தது. 

அந்த மகத்தான தியாகிகளின் பூமியில் ஒவ்வொரு முறை மிதிக்கும் போது புது உத்வேகமும் ,சமூக ஒடுக்கு முறைக்கு எதிராக போராட வேண்டிய எழுச்சியும் கிடைக்கி றது. அதனால் தான் இன்றும் பல தோழர்கள் வெண் மணிக்கு போயிட்டு வந்தா “ ரீசார்ஜ்” ஆயிடும் என்பதை பேசிக் கொள்வதை கேட்க முடிகிறது. பாசிச அபாயச் சூழல், பொருளாதாரச் சுரண்டல்கள், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான களம் காண வெண்மணி என்றும் நமக்கு வழி காட்டும் என்பது திண்ணம்.