“தமிழகத்தில் நடந்துள்ள இயக்கம் மிக அற்புதமா னது. எங்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது. உலகுக்கே தமிழகம் வழிகாட்டியுள்ளது.” -இது மார்க்சிய சிந்தனையாளரும் பேராசிரியரும் லெப்ட் வேர்டு /புக்ஸ் நிறுவனத்தின் முதன்மை ஆசிரியரு மான விஜய் பிரசாத் அவர்கள் அனுப்பியுள்ள செய்தி. ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ வாசிப்பு உலகம் முழுதும் நடந்தது குறித்து சிறு பிரசுரம் தயாரிக்கப்படுவதாகவும் அதில் தமிழகம் முக்கிய இடத்தைப் பிடிக்கும் எனவும் விஜய் பிரசாத் கூறியுள்ளார். தமிழக மார்க்சிய இயக்கத்திற்கு கிடைத்துள்ள இந்த பெருமைக்கு காரணம் அனைவரின் கூட்டு முயற்சிதான்; இதன் முதன்மைப் பெருமை பாரதி புத்தகாலயத்தையே சாரும் எனில் மிகை அல்ல.
தயாரிப்புப் பணிகள்
லெப்ட் வேர்டு புக்ஸ், இத்தகைய உலகளாவிய முயற்சியை முன்வைத்த பொழுது தமிழகத்தில் பத்தாயிரம் வாசிப்பு முகாம்கள் நடத்துவது எனவும் ஒரு இலட்சம் பிரதிகள் விற்பது எனவும் பாரதி புத்தகாலயம் முன்மொழிந்தது. இது அதீதமான இலக்கு என ஐயம் எழுவது இயற்கையானதுதான்! எனினும் தற்பொழுது பின்னோக்கி பார்த்தால் இந்த இலக்கு சாத்தியமான ஒன்றுதான் என நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த இயக்கத்திற்காக புதிய மொழி பெயர்ப்பை திட்டமிடுவது என பாரதி புத்தகாலயம் முடிவு செய்தது. இதற்கான பணியை மு.சிவலிங்கம் ஏற்றுக் கொண்டார். மொழி பெயர்ப்பு பணியை சிவலிங்கம் சிறப்பாக செய்து முடித்தார். இதுவரை எடுக்கப்பட்ட முயற்சிகளில் இந்த மொழிபெயர்ப்பு எளிமையானது எனக் கூறலாம். சிவலிங்கம் அவர்கள், சில முக்கியமான சொற்றொடர்க ளை புரிந்து கொள்ள ஜெர்மனி மொழியையும் கற்றார். பல மாவட்டங்களுக்குச் சென்று கருத்தாளர்களுக்கு பயிற்சியும் அளித்தார். இந்த மகத்தான பணிக்கு செல்லும் பொழுது பயணப்படி கூட வாங்குவதை தவிர்த்துவிட்டார் என்பதை குறிப்பிடுவது தவறாகாது. மு.சிவலிங்கம் அவர்களின் பணி மிக மிக பாராட்டுக்குரியது.
மாநில அளவிலான தயாரிப்பு கூட்டம் உதக மண்டலத்தில் முதலில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எம்.ஏ.பேபி மற்றும் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோருடன் சிவலிங்கமும் கலந்து கொண்டு வழிகாட்டினர். இதன் தொடர்ச்சியாக அநேகமாக அனைத்து மாவட்டங்களிலும் தயாரிப்பு பணிகள் நடைபெற்றன. மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கு பயிற்சியும் வழிகாட்டுதலும் தரப்பட்டது. இயக்கத் தோழர்கள் கம்யூனிஸ்ட் அறிக்கையை உள்வாங்க முயற்சி செய்தது மட்டுமல்ல; பல்வேறு கட்டுரை களை தேடிப்பிடித்து வாசித்தனர். ஏனெனில் அறிக்கை யின் முக்கிய கோட்பாடுகளை விளக்குவதற்கு தற்கால சூழல்களை கூறுவது அவசியமான தேவையாக முன்வந்தது. உற்பத்திக் கருவிகளில் தனது இலாபக் கொள்ளைக்காக முதலாளித்துவம் உருவாக்கியுள்ள பிரம்மாண்டமான முன்னேற்றமும் நான்காவது தொழிற் புரட்சி குறித்தும் கிளை அளவில் உள்ள தோழர்களுக்கு விளக்குவது அவசியமாக முன்வந்தது. அதே சமயத்தில் இதன் பிரிக்கமுடியாத அம்சமாக உருவாகியுள்ள சொத்துக் குவிப்பும் வறுமையும் இப்பொழுதும் நிகழ்கின்றன என்பதற்கு தோழர்கள் தற்கால விவரங்களை திரட்டினர்.
தீக்கதிர் இதழ் பலசிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டது. தமிழ் மார்க்சிஸ்ட் இதழ் சிறப்பு இதழைக் கொண்டு வந்தது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒலி வடிவத்திலும் வெளி யிடப்பட்டது. இந்த முயற்சிகள் தோழர்களிடத்தில் மேலும் உந்துதலையும் ஆர்வத்தையும் உருவாக்கின.
முன்வந்த சில கேள்விகள்
இத்தகைய தயாரிப்பு கூட்டங்கள் பல பயனுள்ள கருத்துப் பரிமாற்றங்களுக்கு வழிவகுத்தன. பல இடங்களில் இரண்டு முக்கிய கேள்விகள் எழுப்பப்பட்டன. முதலாவது கேள்வி, கம்யூனிஸ்ட் அறிக்கை ஐரோப்பா விற்காக எழுதப்பட்டுள்ளதால் இந்தியாவுக்கு பொருந்துமா என்பதும், அதன் துணைக் கேள்வியாக அறிக்கை அல்லது காரல் மார்க்ஸ், சாதியம் குறித்து பேசியுள்ளாரா என்பதும் ஆகும்! கம்யூனிஸ்ட் அறிக்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் ஒவ்வொரு முதலாளித்துவ சமூகத்திற்கும் பொருந்து வது போல இந்தியாவிற்கும் பொருந்தும் என்பது விளக்கப் பட்டது. மேலும் மார்க்ஸ், கம்யூனிஸ்ட் அறிக்கையில் இந்தியா குறித்து நேரடியாக பேசவில்லை என்றாலும் சரியாக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 1852ம் ஆண்டு நியூயார்க் டெய்லி டிரிபியூன் எனும் பத்திரிக்கைக்கு இந்தியா பற்றி ஏராளமான கட்டுரைகளை எழுதினார்; இந்திய சமூகத்தை பொருள்முதல்வாத அடிப்படையில் ஆய்வு செய்ய விரும்பும் எவர் ஒருவருக்கும் மார்க்சின் இந்த கட்டுரைகள்தான் தொடக்கமாக இருக்க முடியும்; இந்த கட்டுரைகளில் மார்க்ஸ் சாதியம் பற்றியும் குறிப்பிடுகிறார். சாதி எப்படி இந்தியரை நிரந்தரமாக அடிமைச் சங்கிலி யில் பிணைத்துள்ளது என்பதையும் சாதியம் இந்திய சமூகத்தின் முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டை எனவும் விளக்குகிறார். மேலும் மார்க்சின் வெளியிடப்படாத (தற்பொழுது வெளியிட முயற்சிகள் நடக்கின்றன) குறிப்பு களில் மனுஸ்மிருதி குறித்து ஏராளமான குறிப்புகளை எடுத்து வைத்துள்ளார். தமிழகத்தில் நடந்த சோழ/சேர/பாண்டியர்களின் ஆட்சிமுறைகள் குறித்தும் அவரது குறிப்புகளில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
தோழர்கள் எழுப்பிய இரண்டாவது முக்கிய கேள்வி தொழிலாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரம் குறித்து! இயந்திரங்கள் பிரம்மாண்டமாக புகுத்தப்படும் இந்த காலகட்டத்தில் தொழிலாளர்களின் என்ணிக்கை வீழ்ச்சி அடைகிறது. எனவே மக்கள் பிரிவில் சிறு பகுதியாக மாறியுள்ள தொழிலாளர்கள் எப்படி சமூக மாற்றத்துக்கு தலைமை தாங்கமுடியும் என்பது அவர்களது ஐயம்! ஆனால் பல முக்கிய புள்ளிவிவரங்கள் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவே தெரிவிக்கின்றன. எனினும் வர்க்கத்தின் கட்டமைப்பில் பல மாற்றங்கள் உருவாகியுள்ளன. தொழில் வளர்ச்சி நாடு களில் சேவைத்துறை உழைப்பாளிகளும் கருத்தால் உழைப்போரும் கூடுதலாகியுள்ளனர். இந்தியா போன்ற தேசங்களில் முறைசாரா தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் உருவாகியுள்ளனர். இவர்களை சமூக மாற்றத்திற்காக அணிதிரட்டி தலைமை தாங்கவைப்பது நம்முன் உள்ள மிகப்பெரிய சவால்.
தனது ஊதியம் மற்றும் பிற பொருளாதார சலுகைக ளுக்காக போராடும் இன்றைய தொழிலாளி வர்க்கம் புரட்சிக்குத் தலைமை தாங்க தகுதி படைத்ததுதானா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது. தொழிலாளி வர்க்கம் புரட்சிக்கு தலைமை தாங்கும் தகுதி பெறுவது என்பது உற்பத்தி முறையில் அது வகிக்கும் பாத்திரம் காரண மாகவே என்பது முக்கியமான அம்சம் ஆகும். உற்பத்தி சாதனங்களின் மீதோ அல்லது தான் உற்பத்தி செய்யும் பொருட்கள் மீதோ எவ்வித உரிமையும் இல்லாத ஒரே வர்க்கம் தொழிலாளர்கள்தான்! எனவேதான் இழப்பதற்கு எதுவும் இல்லாத இந்த வர்க்கம்தான் தலைமையேற்க தகுதி படைத்தது என அறிக்கை கூறுகிறது. நிகழ் காலத்தில் எவ்வளவு பலவீனங்கள் இருந்தாலும் தொழிலாளி வர்க்கத்தின் தலைமை இல்லாமல் நவீன புரட்சி சாத்தியம் இல்லை என்பதே அனுபவம். ஆனால் அவர்களை அதற்காக பயிற்றுவித்து இதர உழைப்பாளிகளை தன் கீழ் திரட்ட வைக்க தொழிலாளி வர்க்கத்தை தயார்ப்படுத்தும் வரலாற்றுக் கடமை கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு. அது மிக முக்கியம் ஆகும்.
அறிக்கைக்காக விடிந்த காலைப் பொழுது
பிப்ரவரி 21ம் தேதி காலை கம்யூனிஸ்ட் அறிக்கைக்கா கவே விடிகிறதோ என எண்ணும் அளவிற்கு அதிகாலை நேரத்திலேயே மாநிலம் முழுவதும் வாசிப்பு முகாம்கள் தொடங்கின. அதிகாலை 6.30 மணி அளவில் திருப்பூர் மாவட்டத்தில் சி.க.புதூர் எனும் இடத்தில் நடந்த வாசிப்பு தான் அநேகமாக முதல் நிகழ்வாக இருக்க வாய்ப்பு உள்ளது. அடுத்த சில நிமிடங்களில் உதகையுடன் உச்சியில் நடுங்கும் குளிரில் தோழர்கள் வாசிப்பு முகாம் நடத்தினர். இவ்வாறு தொடங்கிய வாசிப்புகள் அன்று முழுதும் இரவு வரை நீடித்தது.
மூத்த தோழர்களும் இளையோரும்; ஆண்களும் பெண்களும்; தொழிலாளர்களும் விவசாய தோழர்க ளும்; அணிதிரட்டப்பட்டோரும் முறைசாரா தோழர்களும்; நகரங்களிலும் கிராமங்களிலும்; துப்புரவுத் தொழிலா ளர்கள் முதல் தகவல் தொடர்பு கணினி ஊழியர்கள் வரை அனைவரும் பங்கேற்ற பல நூற்றுக்கணக்கான வாசிப்பு மையங்கள்நடந்தன. இளைய தோழர்கள் சென்னை நகரின் மையப் பகுதியான உழைப்பாளர் சிலை கீழே வாசித்தனர். உலகப்புகழ் பெற்ற உதகை உயிரியல் பூங்காவிலும் குன்னூர் புகை வண்டி நிலையத்திலும் வாசிப்பு நடந்தது. பூங்காக்களிலும் நூலகங்களிலும் வாசித்தனர். கல்லூரிகளில் மாணவர்களும், மாணவி களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தொழிலாளர்கள் ஆலை வாயில்களிலும் விவசாய மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் வயல்களிலும் ஊர் மையங்களிலும் வாசித்தனர். ஆட்டோ தோழர்கள் ஸ்டாண்டிலும் தரைகடை தோழர்கள் வீதிகளிலும் வாசித்தனர். கணினிகள் உள்ள நேர்த்தியான அறைகளிலும் வெறும் தகரக் கூரை மட்டுமே உள்ள அலுவலகங்களிலும் வாசிப்பு நடந்தது. வீடு களுக்கு உள்ளேயும் மொட்டை மாடிகளிலும் தோழர்கள் வாசித்தனர்.
இப்படியாக பல நூற்றுக்கணக்கான வாசிப்பு மையங்கள் நடந்தன. தஞ்சையிலும் வேறு சில இடங்களிலும் இடதுசாரி கட்சிகள் சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது.நெல்லை போன்ற இடங்களில் பொ துக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. மார்க்சிஸ்ட் மாநிலக்குழு அலுவலகத்தில் மொழி பெயர்ப்பாளர் மு.சிவலிங்கம் அவர்களை ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் ஆகிய தலைவர்கள் கவுரவித்தனர். சில இடங்களில் 21ம் தேதி உள்ளூர் திருவிழாக்கள் காரணமாக 20ம் தேதியே வாசிப்பு முகாம்களை தோழர்கள் நடத்தினர். 21ம் தேதிக்கு பிறகும் பல இடங்களில் வாசிப்பு முகாம்கள் நடந்த வண்ணம் உள்ளன. சில மாவட்டங்களில் 75 முதல் 100க்கும் அதிகமான வாசிப்பு முகாம்கள் நடந்துள்ளன. அநேகமாக மார்க்சிஸ்ட் கட்சியின் ஒரு இடைக்குழு குறைந்தபட்சம் 2 அல்லது 3 வாசிப்பு மையங்களை நடத்தியுள்ளது எனில் மிகை அல்ல.
ஒரு சிந்தனை ஊழியர்களை கவ்விப் பிடித்தால் அது எப்படி வெற்றி பெறும் என்பதற்கு ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ வாசிப்பு இயக்கம் ஒரு உதாரணம். இந்த மகத்தான வெற்றி இதே போல அடுத்த புத்தகத்தை தேர்ந் தெடுக்கலாமா எனும் சிந்தனையை தோழர்களிடத்தில் உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் நடந்துள்ள இந்த மகத்தான வெற்றிதான் உலகுக்கே முன்மாதிரியாக உள்ளது என பொருத்தமாக பேரா. விஜய் பிரசாத் பதிவு செய்துள்ளார். இந்த மகத்தான வெற்றிக்கு அனைவரும் பொறுப்பு என்றாலும் பாரதி புத்தகாலயம் தோழர்களின் சிறப்பான முயற்சிகளும் கடும் உழைப்பும் மிக முக்கிய காரணம் என்பதை மீண்டும் ஒரு முறை பதிவு செய்வது தவறாகாது.