தமிழகத்தில் திருப்பூர், கோவை, திருச்சி, அரியலூர், காஞ்சிபுரம் போன்ற தொழில் நகரங்களில், திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, சென்னை அருகில் உள்ள மகேந்திரா சிட்டி, ஒரகடம், திருபெரும்புதூர், இருங் காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பேட்டைகள்உள்ளன. பீகார், ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஷ்கர்,உத்தரப்பிரதேசம், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தன. இதனால் நாடு முழுவதும் தொழிற் சாலைகள் மூடப்பட்டது. தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். எந்ததெந்த தொழிற்பேட்டையில் எவ்வளவு வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர் என்ற விவரம் தொழிலாளர் நலவாரியத்திடம் இல்லை. இதனால் தொழிலாளர்கள் ரோட்டிற்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது.தொழிற்சாலையின் முதலாளிகள் தங்களை பாதுகாப்பார்கள் என்று அவர்கள் எண்ணியிருந்த நிலையில், அனைவரும் கைவிடப்பட்டனர். தங்குவதற்கும், உணவிற்கும் வழியில்லாமல் குடும்பத்துடன் வீதிகளில் விடப்பட்டனர்.
கடைகள், உணவகங்களும் அடைக்கப்பட்டன. கையில் இருந்த கொஞ்சம் பணத்தை கொண்டு எதையும் வாங்க முடியவில்லை. அரசு முகாம்கள் அமைக் கப்படாததால், எந்த ஆதரவும் இல்லாத நிலையில், உயிர் பிழைத்துக் கொள்ளும் எண்ணத்தில் சொந்த ஊருக்கு செல்ல, தேசிய நெடுஞ்சாலைகள் வழியே நடந்தே செல்ல ஆரம்பித்தனர்.ஆந்திரா, தமிழ்நாடு இணைப்பு எல்லையில் உள்ள திருவள்ளூர் மாவட்ட எளாகூர் சுங்கச் சாவடியை கடந்து சென்றவர்களை மீண்டும் வாகனங்கள் மூலம் தமிழக எல்லையில் கொண்டு வந்து இறக்கிவிட்டு செல்லும் ஆந்திர காவல் துறையினரின் இரக்கமற்ற செயல்களும் நிகழ்ந்தது. அந்த சுங்கச்சாவடி அருகிலேயே இரண்டு நாட்கள் பசியும் பட்டினியுமாய் வெய்யிலில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவதிப்பட்டனர். தப்பி பிழைக்க வேண்டும் என்பதற்காக கிராமங்கள் வழியாக சென்றவர்களை கூட ஆந்திர மாநில போலீசார் அனுமதிக்கவில்லை. புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மனிதர்களாகவே அரசும், அதிகாரிகளும் மதிக்கவில்லை.
அரசும், நிறுவனங்களும் கைவிடப்பட்டு சாலையோரங்களில், மரத்தடியில் தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்மிடிப்பூண்டி நகர கிளையினர் ஆதரவு கரம் நீட்டினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பி.கிரிதர், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியரை தொடர்பு கொண்டு ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பசியால் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். தங்குவதற்கும் இடமில்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு தங்குவதற்கு இடமளித்து, உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்என கேட்டுக் கொண்டார். பின்னர் வட்டாட்சியர் குமார், மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு நிலவரத்தை எடுத்து கூறியுள்ளார். பின்னர் 3050 வட மாநில தொழிலாளர்கள் பெருவாயலில் தனியாருக்கு சொந்தமான டிஜேஎஸ் பொறியியல் கல்லூரியில் மே 16 முதல் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த தொழிலாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்மிடிப்பூண்டி நகரக் கிளை சார்பில் மே 17 அன்று மதியம் முதல் மே-21 வரை4 நாட்கள் உணவு வழங்கப்பட்டது. டிஜேஎஸ் கல்வி குழுமத்தில் தலைவர் டி.ஜே.கோவிந்த
ராசன் ஆகியோரும் உணவு வழங்கினார். அரசியல் கட்சிகள் உணவு வழங்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. பிறகு அரசே உணவு வழங்க தொடங்கியது. தற்போது பெரும்பகுதி வட மாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் எவ்வளவு தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர் என்கிற வருகை பதிவேடு இல்லாததால் வட மாநில தொழிலாளர்கள் நடு ரோட்டிற்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது கோவிட்-19 நமக்கு கற்றுக் கொடுத்துள்ள பாடம் என்கிறார் கிரிதர்.வடமாநில தொழிலாளர்களை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி. துளசிநாராயணன், வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், முன்னணி ஊழியர் கள் சி.ஆறுமுகம், சிவக்குமார், கவுன்சில் ரவிக் குமார், பி.பிரசன்னா, குப்பன், வி.ஆர்.லட்சுமணன், அர்ஜூனன், வில்வாலிபாபு ஆகியோர் அடங்கிய குழு செயல்பட்டது.
ஆதாரம்: நியூஸ்கிளிக் இணையதளம்
தமிழில்: கிரிதரன்