tamilnadu

img

ஜம்மு - காஷ்மீர் ஓராண்டுக்குப் பின்...

ஜம்மு - காஷ்மீரை எழுபது ஆண்டு சுதந்திர இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமாக்கி நிலைநிறுத்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370-ஆம் பிரிவை பாஜக அரசு ரத்துசெய்து கடந்த புதன் கிழமையுடன் (ஆகஸ்ட் 5) ஓராண்டு ஆகிறது. இங்கு உள்ள மக்கள் அனுபவித்துவந்த பிரத்தியேக அனுகூலங்களை இல்லாமற் செய்து 35-ஏ பிரிவும் 2019 ஆகஸ்ட் 5 அன்று நீக்கப்பட்டது. காஷ்மீர் மக்களையும் மாநிலத்தையும் பாதுகாப்பற்ற நிலைமையிலும் அமைதியற்ற நிலைமையிலும் தள்ளிய துரோக முடிவுக்குப் பின்னால் பாஜகவின் சுயநல அரசியல் நிகழ்ச்சி நிரல் மட்டுமே உள்ளது. எல்லை மாநிலத்தை வெட்டி முறித்து இரண்டாக ஆக்கி மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குள் கொண்டுவந்து ஓராண்டு முடிந்த பிறகும் அறிவிக்கப்பட்டவற்றில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. சிறைமுகாமில் இருப்பதுபோல் வாழ்கிற மக்களின் வாழ்க்கைத் துயரம் இப்போது இருமடங்கு ஆகியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மக்கள் முஸ்லிம் நாடாகிய பாகிஸ்தானுடன் சேராமல் இந்தியாவுடன் சேர்ந்தது வெறும் இணைப்பு அடிப்படையில் மட்டுமல்ல; இந்தியா ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக, பன்முகத் தன்மையை நிலைநிறுத்துகிற நாடாக அமைந்திருக்கும் என்கிற அறிவிப்பினாலும், ஜம்மு - காஷ்மீர் மக்களுக்குச் சிறப்பு அந்தஸ்தும், பெருமளவு சுயாட்சியும் வழங்குவதாக உறுதி அளித்ததனாலும்தான் ஜம்மு - காஷ்மீர் இந்திய யூனியனின் பகுதியாக ஆனது. இந்த வாக்குறுதிகள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்370-வது பிரிவிலும், ஜம்மு - காஷ்மீர் அரசியல் அமைப்புச்சட்டத்திலும் சேர்க்கப்பட்டன. இது அரசியல் அமைப்புச் சட்டத்தின் கடமையாகும். இந்தக் கடமையை நிறைவேற்றவில்லையென்றால் இந்திய யூனியனின் பகுதியாகச் சேர்க்கப்பட்டது சம்பந்தமான உடன்படிக்கை பயனற்றுப்போகும். துரதிருஷ்டவசமாக, பல பத்தாண்டுகளாக அரசியல் அமைப்புச் சட்டம் வழங்குகிற இந்தஉறுதிமொழியை அதிகாரிகள் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிட்டார்கள். இது ஜம்மு - காஷ்மீர் மக்களின் மனதில் அந்நியத் தன்மையை வலுப்படுத்தியது. ஜம்மு - காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்ததை எதிர்ப்பவர்கள் மக்களின் அதிருப்தியைப் பயன்படுத்தி, கலங்கிய நீரில் மீன் பிடிக்கிறார்கள். 1990கள் முதல் காஷ்மீர் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குச் சாட்சியம் வகிக்கிறது.

இருண்ட தினம்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று ஜம்மு - காஷ்மீரைப் பொறுத்தவரை ஓர் இருண்ட தினமாக மாறிவிட்டது. முன்னாள் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மக்கள்பிரதிநிதிகள், சமூக ஊழியர்கள் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். உண்மையில் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதையும் மிகப்பெரிய சிறையாக மாற்றிக்கொண்டு, அரசியல் அமைப்புச்சட்டம் வழங்கிய உரிமைகளைப் பறித்தனர். விரிவான கட்டுப்பாடுகளைத் திணித்து எல்லாவிதமான செய்தி விநியோக நிறுவனங்களையும் மூடினர். அத்துமீறிய அதிகாரத்தின் ஆபத்தான அரங்கேற்றமாக அது இருந்தது. அன்று அதை நாடாளுமன்றமும் கண்டது. ஜம்மு - காஷ்மீர்க்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குகிற அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நீக்கினர். இத்துடன், ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019 மூலமாக மாநிலத்தை இரண்டு மத்திய அரசுப் பிரதேசமாக ஆக்கிய நடவடிக்கையானது காஷ்மீர், ஜம்மு, லடாக் ஆகிய பிரதேசங்களின் மக்களுக்குப் பெரும் பாதிப்பாக முடிந்தது.

அச்சமும் அதிருப்தியும்
உலகமும் இந்தியாவும் ஜம்மு - காஷ்மீரும் கொரோனாவில் சிக்கி உழலும்போது மத்திய அரசு புதிதாக வந்து நிரந்தரமாக வசிப்பவர்களுக்காக ஜனநாயக விரோத நடவடிக்கையாகவும், எதேச்சதிகாரமாகவும் சட்டங்களை உருவாக்கியது. இதன்மூலம் இந்தப் பிரதேசத்தின் மக்கள் இதுவரை அனுபவித்துவந்த உரிமைகள் பறிக்கப்பட்டன. புதிய ஏற்பாடுகள் மூலம் இந்தப் பிரதேசத்தின் மக்கள் தொகையின் சதவீதத்தை மாற்றியமைப்பதையே பாஜககுறிக்கோளாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் காஷ்மீர் மக்களின்அரசியல், பொருளாதாரம், கலாச்சார உரிமைகளை முற்றிலும் இல்லாமற் செய்வதே அவர்களின் நோக்கமாகும். மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்படும்வரை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 35-ஏ பிரிவின்படி இந்த மாநிலத்தில் நிரந்தரமாக வசிப்பவர்கள் யார் என்பதை நிர்ணயிக்கிற அதிகாரம் ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத்திற்கு இருந்தது. நிரந்தரமாக வசிப்பவர்களுக்கு மட்டுமே வேலைக்கு விண்ணப்பிக்கவும், அசையாச் சொத்துக்களைச்சொந்தமாக்கவும் உரிமை இருந்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் மட்டுமல்ல, ஜம்மு, லடாக் பிரதேசங்களில் வசிக்கும்மக்களும் நிரந்தரமாக வசிப்போர் சம்பந்தமான புதிய சட்டம் குறித்து அச்சம் அடைந்துள்ளனர். நிலம் கையகப்படுத்துதல் சம்பந்தமான மத்திய அரசின் சட்டமும் இங்கே பொருந்தும்படி ஆக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே அதிருப்தியைத்தான் வலுப்படுத்தும்.

புதிய வளர்ச்சியும் இல்லை;  வேலை வாய்ப்பும் இல்லை
ஜம்மு - காஷ்மீரில் ஜனநாயகம் முழுமையாக இல்லாமல் ஆக்கினர். குடியுரிமைகளும் ஜனநாயக உரிமைகளும் அடக்கி ஒடுக்கப்பட்டது மட்டுமல்லாமல் 370-வது பிரிவை நீக்கியதன் மூலம்மற்ற சாதனைகள் எதுவும் ஏற்படவில்லை. யுஏபிஏ பொதுப்பாதுகாப்புச் சட்டம் முதலான கறுப்புச் சட்டங்களை ஒருதலைப்பட்சமாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் மக்களின்-குறிப்பாக இளைஞர்களின் வாழ்க்கை துயரம் மிக்கதாக ஆகிவிட்டது. பாதுகாப்புப் படையை நிறுத்தி அமைதியை மீண்டும் கொண்டுவருவதற்கான மத்திய அரசின் முயற்சி மூலம் காஷ்மீரில் மக்களுக்கும் இந்திய யூனியனுக்குமிடையே உறவு சிக்கலாகிறது. மாநிலத்தின் சிறப்பு உரிமைகள் ரத்து செய்யப்படும்போது பிரதமர் மோடியும் அமித்ஷாவும் இது இந்தப் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு ஊக்கமூட்டும் என்று அறிவித்தனர். ஆனால், கடந்த ஓர் ஆண்டில் இங்கே என்ன வளர்ச்சிஏற்பட்டதென்று தெளிவாக்க எவராலும் முடியவில்லை. மத்திய அரசுசொல்லிக்கொண்ட முதலீடு எங்கே, வேலை வாய்ப்பு எங்கே என்பதற்கு பதில் இல்லை. புதிய வளர்ச்சியோ, வேலை வாய்ப்புகளோ உருவாக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, தற்போது அன்றாடக் கூலியும், தற்காலிக வேலை செய்வோர்க்கும் பல்வேறு திட்டங்களின் தொழிலாளர்களுக்கும் பல மாதங்களாக உரிய கூலி வழங்கப்படவில்லை. பாஜக அரசு கடந்த ஆறு ஆண்டுகளாக ஜம்மு - காஷ்மீர் வளர்ச்சி பற்றிக் கூறுகிறது. ஆனால், ரம்பால் முதல் ரம்ஸு வரையான தேசிய நெடுஞ்சாலையின் பழுதுகள் நீக்கும் பணியைக்கூட இதுவரை மத்திய அரசு செய்யவில்லை. மக்களின் வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவைகள் கிடைக்கச் செய்வதில் ஜம்மு - காஷ்மீர் அரசு நிர்வாகம் படுமோசமாகத் தோற்றுவிட்டது. 

கடந்த ஒரு வருடத்திற்குள் அரசியல், சமூக, பொருளாதாரத் துறைகளில் மிகமோசமான தோல்வி ஏற்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் கதவடைப்பு உள்ளிட்டவை காஷ்மீர் பள்ளத்தாக்கின் பொருளாதார நிலையை முழுமையாகத் தகர்த்துவிட்டது. ரூ.40,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று ‘காஷ்மீர் சேம்பர்ஆஃப் காமர்ஸ்’ மதிப்பீடு செய்துள்ளது. ஜம்முவிலும் நிலைமைஇதற்கு மாறுபட்டதாக இல்லை. தனியார்துறையில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். ஜம்மு - காஷ்மீரில் வேலை இழப்பு விகிதம் தேசிய சராசரியைவிட இருமடங்கு அதிகமாகும். சுற்றுலா, போக்குவரத்து, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு ஆகிய துறைகளும், விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளும் கடுமையாக நசிந்துள்ளன. இந்தத் துறைகளில் பணியாற்றும் லட்சக்கணக்கானோர் பொருளாதாரக் கஷ்டத்தில் வாடுகிறார்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 முதல் மாநிலத்தின் சுற்றுலாத்துறை முற்றிலும் முடங்கிவிட்டது. இது கைவினைப்பொருட்கள் விற்பனையையும் முடக்கிவிட்டது. 

மாநிலத்தின் நதிகளிலிருந்து மணல் அள்ளுவது உள்ளிட்ட தாதுப்பொருட்கள் ஒப்பந்தமும் வெளியார்க்கு வழங்குவது பெரும்பின்னடைவாகும். இந்தப் பிரதேசத்து மக்கள் வேலை இழந்தனர். செய்தி ஊடக ஏற்பாடுகளை முழுவதும் சீரமைக்காதது மிகப்பெரும்பாதிப்பாகிவிட்டது. மணல் அள்ளுவது உள்ளிட்ட டெண்டர்களில் பங்கேற்பது ஆன்லைன் மூலமாகத்தான். ஹைஸ்பீடு இன்டர்நெட் வசதி இல்லாததனால் இந்தப் பிரதேச மக்களால் டெண்டரில் பங்கேற்க முடியவில்லை.

கருத்துச் சுதந்திரத்திற்கு விலங்கு
4ஜி ஏற்பாடு தொடர்ச்சியாகத் தடைபடுவதன் மூலம் மாணவர்களும் ஊழியர்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். மற்ற மாநிலங்களின் மாணவர்கள் படிப்பதற்கு இப்போது ஆன்லைன் ஏற்பாட்டைச் சார்ந்திருக்கிறார்கள். ஆனால் இது எங்களுக்குத் தெரியாது என்று நடிக்கிறது இங்கு உள்ள அரசு நிர்வாகம். டிஜிட்டல் இந்தியா மூலம் அனைவருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பக் கல்வி கிடைக்குமென்று பிரதமர் அறிவித்தபோது ஒரு பிரதேச மக்களுக்கு மட்டும் 4ஜி தொழில்நுட்பத்தை மறுப்பது வஞ்சனையாகும். ஜூன்மாதம் உருவாக்கிய புதிய ஊடகக் கொள்கையின் மூலம் கருத்துச்சுதந்திரத்திற்கு விலங்கிட முயற்சிக்கிறார்கள். இது ஊடக ஊழியர்களிடையே மிகவும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. ஊடகச்சுதந்திரத்தில் அரசு நேரடியாகத் தலையிடுவது என்கிற குறிக்கோளுடன்தான் ஊடகக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. விமர்சிப்பவர்களின் வாயை அடைப்பதே இதன் உத்தேசம். இது அறிவிக்கப் படாத தணிக்கைக்குச் சமமாகும்.

தீவிரவாதத்தை ஒடுக்க முடியவில்லை
தீவிரவாதிகள் என்று குற்றம்சாட்டி சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடலைக்கூட அவர்களின் குடும்பங்களிடம் ஒப்படைப்பதில்லை. குடும்பத்தினர் இறுதிச்சடங்கு நடத்தக்கூட வாய்ப்புத் தராமல் சட்டவிரோதமாக மிகத் தொலைவில் உள்ள பிரதேசங்களில் உடலை எரித்துவிடுவது துரதிருஷ்டவசமானது. விசேஷ அந்தஸ்தை நீக்கியவுடன் தீவிரவாதம் ஒழிந்துவிடும் என்று பாஜகஅரசு கூறியது. ஆனால், அண்மைக் காலத்தில் தீவிரவாத நடவடிக்கைகள் பள்ளத்தாக்கில் அதிகரித்திருக்கின்றன. பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பல இளைஞர்கள் தீவிரவாதக் குழுக்களில் சேருகிறார்கள் என்பதுதான் செய்தி. எல்லையில் அத்துமீறி நுழைவது அதிகரித்தது. எல்லையில் மோதல் தொடர்ந்துநிகழ்ந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு நேரடியாக நிர்வாகத்தைக்கையிலெடுத்தும்கூடத் தீவிரவாதத்தை ஒடுக்க முடியவில்லை.

உண்மையில், காஷ்மீர் மக்களையும் மாநிலத்தையும் பாதுகாப்பில்லாத - அமைதியற்ற சூழலுக்கு இட்டுச்செல்லுகிற வஞ்சனைமிக்க முடிவையே ஓராண்டுக்கு முன்பு நடைமுறைப்படுத்தினர். அவ்வாறு பாஜகவின் சுயநல அரசியல் நிகழ்ச்சி நிரலையே நடைமுறைப்படுத்தினர். மக்களுக்கு நம்பிக்கையூட்டி, மதச்சார்பின்மை மாண்பை உயர்த்திப்பிடித்தால் மட்டுமே காஷ்மீர்க்கு ஏற்பட்ட படுகாய ரணத்தை ஆற்றமுடியும். இதை மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் புரிந்துகொள்ள வேண்டும்.

====முகம்மது யூசூப் தாரிகாமி====
மத்தியக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்),காஷ்மீரின் குல்காம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

நன்றி: தேசாபிமானி (5.8.2020),

===தமிழில்: தி.வரதராசன்===