tamilnadu

img

ஆலை மூடலும் சிஐடியுவின் ஆக்கப்பூர்வ அணுகுமுறையும்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பன்னாட்டு ஆலைகளில் ஆலைமூடல் என்பது சமீப காலங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு அதிர்ச்சிக்குரிய நிகழ்வாகும்.2015ல் உலக அளவில் கைபேசி வர்த்தகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை எதிர்கொள்ள நோக்கியா ஆலையை மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்தது பின்லாந்து நாட்டின் நோக்கியா நிர்வாகம். இதனைத் தொடர்ந்து பாக்‌ஸ்கான், வின்டெக், பிஒய்டி உள்ளிட்ட ஆலைமூடல்கள் நடந்தது. இதனால் வேலை இழந்தவர்கள் காஞ்சி மாவட்டத்தில் 20,000 தொழிலாளர்கள். இதை எதிர்த்துப் போராடியதுடன், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச பணப் பாதுகாப்பினை பெற்றுக்கொடுத்தது சிஐடியு தொழிற்சங்க இயக்கம். இந்த பிரச்சனையில் அரசும் நீதிமன்றங்களும் பார்வையாளராகவே இருந்தன.

மீண்டும்...

இப்போது ஆட்டோமொபைல் மற்றும் ரசாயனத் தொழிற்சாலைகள் ஆலை மூடல் என்கிற புதிய ஆலை மூடல் நிகழ்வு மீண்டும் துவங்கி இருக்கிறது.பைசர் என்கிற மருந்துக் கம்பெனி திடீரென்று 2018 அக்டோபர், நவம்பர் மாதங்களில் மூடிவிட்டது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வேலை இழந்தார்கள். அவர்களுக்கு நியாயம் கேட்க அங்கே எந்த தொழிற்சங்கமும் இல்லாததால் அந்த தொழிலாளிகள் அனாதைகளாக கைவிடப்பட்டார்கள்.ஹூண்டாய் கார் தொழிற்சாலையின் உதிரிபா கங்களை உற்பத்தி செய்யும் பிரதான துணை நிறுவனம் அவாசின். அதன் துணை நிறுவனமான டாங்சன் என்கிற கொரியக் கம்பெனியை உயர்நீதி மன்ற உத்தரவுகளின் பாதுகாப்போடு 6 மாதத்திற்கு முன்பு ஆலையை மூடினார்கள். இந்த ஆலையை டாங்சங் என்கிற இன்னொரு கம்பெனிக்கு விற்றுவிட்டார்கள். இரண்டுக்கும் ஒரே முதலாளி தான். ஆலை விற்பனையில் தொழிலாளிகளை நடுத்தெருவில் விட்டுவிட்டார்கள். எந்திரங்களை மட்டும் விற்பனை செய்ததாக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொண்டார்கள். 200 தொழிலாளர்கள் வேலை இழந்து நடுத்தெருவில் தள்ளப்பட்டார்கள். சட்டவிரோத ஆலை மூடல் என்று வழக்கு சிஐடியு தொடுத்த பிறகு, ‘சட்டவிரோத ஆலை மூடல்’ என்று தொழிலாளர் துறையால் அறிவிக்கப்பட்ட நிலையில், வழக்குகள் ஆமை வேகத்தில் நடக்க, வேலை இழந்தவருடைய வாழ்க்கை கண்ணீரும் கவலையுமாக மறு வேலைகோரி  தொடர் போராட்டங்களை சிஐடியு தலைமை தாங்கி போராடிக் கொண்டிருக்கிறது. 

அடுத்த கொரியக் கம்பெனி

இந்தசூழலில் சோவல் என்கிற கொரியக் கம்பெனியை இதே அவாசின் நிறுவனம் அந்த கம்பெனிக்கு கொடுத்த எந்திரங்களை எடுத்துக் கொள்வதற்கு உயர் நீதிமன்ற உத்தரவைப் பெற்று 28-4-2019 அன்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆணையர் குழுவுடன், மாவட்ட போலீசார், பெரும் அதிகாரிகளின் படையுடன் அவாசின் நிறுவனத்தின் ஆலைக்கு உள்ளே நுழைந்தார்கள். ஆலையின் நேரடி முதலாளிகள் ஆலைக்கு உள்ளே இல்லாதபோது எந்திரங்களை எடுப்பதால் எங்களுடைய வேலைவாய்ப்பு பறிபோவதோடு எங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறிவிடும்; எனவே ஆலை நிர்வாகம் இல்லாதபோது அதிரடியாக தொழிற்சாலை எந்திரங்களை எடுப்பதை அனுமதிக்க முடியாது என்று தொழிலாளர்கள் ஒற்றுமையாக நின்று தங்கள் குடும்பத்தோடு சிஐடியு தலைமையில் போராடினார்கள். முதலாளிகளும் வழக்கறிஞர்களும் கடுமையாக முயற்சித்தபோதும் எந்திரங்களை எடுக்க தொழி லாளர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் எந்திரங்களை எடுக்க வந்தவர்கள் பின்வாங்கினார்கள். தொடர்ந்து உற்பத்தியை சீராக தருவதற்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட நெருக்கடிகளை சுமூகமாக தீர்வு காண்பதற்கு தொழிற்சங்கம் முழு ஒத்துழைப்பு உங்களுக்கு தரும்;ஆலை மூடலை நிறுத்திவிட்டு தொழிற்சாலையை தொடர்ந்து நடத்துவதற்கு உரிய திட்டங்களை வகுத்து சிறந்த முறையில் தொழிற்சாலையை நடத்தலாம் என்கிற ஆலோசனையை சிஐடியு முன்வைத்ததை ஆலையை மூட வந்த அவாசின் நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.அதன் தொடர்ச்சியாக ஆலைமூடல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கடன் வைத்துவிட்டு ஓடிப்போன சோவல் நிறுவன கொரிய முதலாளியும் கம்பெனி அதிகாரிகளும் பிறகு வந்து அவர்களும் தொழிற் சங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி ஆலையை தொடர்ந்து நடத்துவதற்கு வாக்குறுதி அளித்து இருக்கிறார்கள். இந்த பின்னணியில் ஆலைமூடல் நிறுத்தப்பட்டிருக்கிறது. 

நீதிமன்றத் தீர்ப்பு சரியா?

இந்நிலையில், எந்திரங்களை எடுத்துக் கொள்ள நீதிமன்றம் அளித்த உத்தரவு அமலாகாமல் போனதை நீதிமன்றம் கவலையோடு பார்ப்பதாகவும் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதை தடுப்பது என்பது நீதிமன்ற மேலாண்மைக்கு எதிரான குற்றமாக கருதுவதாகவும் கூறி நீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. தொழிற்சங்கத்தைப் பொறுத்தவரையில் தீர்ப்பை அவமதிப்பது நமது நோக்கமல்ல; தொழிலாளர்களுடைய வேலையை, அவர்களின் வாழ்க்கையை பாதிக்கக்கூடிய வகையில் ஒரு தீர்ப்பு இருக்கும் என்று சொன்னால் அது ஒருபோதும் சமூக நீதியாக இருக்க முடியாது. எந்திரங்களை எடுப்பது என்கிற பிரச்சனை வருகிறபோது எந்திரங்களை எடுப்பதின் மூலம் வரக்கூடிய பாதிப்புகள், விளைவுகள் குறித்தும் நீதிமன்றம் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதே நமது வேண்டுகோள் 

சிஐடியுவின்  ஆக்கப்பூர்வ அணுகுமுறை

இந்த பிரச்சனையில் ஆலையை மூடாமலேயே பிரச்சனையை சுமூகமாக தீர்க்க முடியும் என்ற புதிய அணுகுமுறையை சிஐடியு முன் வைத்திருப்பதும், அதை மற்றவர்கள் ஏற்க வைத்திருப்பதும் அதன் மூலம் அனைவருடைய வேலைவாய்ப்பை உறுதிசெய்திருப்பதும், தொழிற்சாலை, உற்பத்தி, வேலைவாய்ப்பு, மூன்றையும் நல்ல முறையில் அவை சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்கிற ஒரு முன்மாதிரியை தொழிற்சங்க இயக்கம் எடுத்திருப்பதை அனைவரும் வியந்து பார்க்கிறார்கள். அரசும் நீதிமன்றமும் செய்யவேண்டிய அந்த காரியத்தை ஒரு தொழிற்சங்க இயக்கம் செய்திருப்பது என்பதை பாராட்டுவதற்கு மாறாக, எத்தனை பேர் பாதித்தாலும் நீதிமன்ற தீர்ப்புதான் மேன்மையானது என்று கோபப்படுவதில் எந்த நீதியும் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை.ஆலைமூடல் அடுத்தடுத்து நடக்கும் சூழலில் சோவல் ஆலை நிகழ்வு இந்த பகுதி முழுவதும் தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. தொழிற்சங்கம் என்றாலே ஆலையை மூடி விடுவார்கள் என்று சொல்லக்கூடிய பொய்யான பிரச்சாரங்களுக்கு சவுக்கடி கொடுக்கக் கூடிய வகையில் ஒருபோதும் ஆலைமூடல் தொழிலாளிகளால் ஏற்படுவது கிடையாது என்பதும் லாப வெறி கொண்ட முதலாளிகளுடைய சித்து விளையாட்டின் ஒரு பகுதியே ஆலைமூடல் என்பதனை மீண்டும் மீண்டும் அழுத்தமாக நாம் சொல்ல வேண்டி இருக்கிறது.கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மத்தியில் தொழிற்சங்க இயக்கம் புதிய புதிய அனுபவங்களோடு தன் பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு இருக்கிறது. இனியும் இந்த போராட்டம் தொடரும். 

கட்டுரையாளர் : சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்