குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதே போன்று உத்தரப்பிரதேசத்திலும் மக்கள் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் இதனைப் பயன்படுத்திக்கொண்டு, ‘பழிக்குப்பழி’ (பத்லா) வாங்குவோம் என்று வெளிப்படையாகவே மிரட்டலை மேற்கொண்டு, மக்கள் மீது குறிப்பாக சிறுபான்மை முஸ்லிம் மக்கள்மீது கொடூரமான முறையில் அடக்குமுறைகளை ஏவியுள்ளார். டிசம்பரில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு மற்றும் கொடூரமான தாக்குதலின் விளைவாக 21 பேர் இறந்துள்ளார்கள். மேலும் கிளர்ச்சியின்போது காவல்துறையினரே பொதுச் சொத்துக்களை நாசப்படுத்திவிட்டு, தற்போது இதற்கான இழப்பீட்டை கிளர்ச்சியாளர்கள் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
லக்னோ, கான்பூர், மீரட் மற்றும் பிஜ்னாவூர் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மக்கள்மீது காட்டுமிராண்டித் தனமான முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்டு, கொல்லப்பட்டிருக்கிறார்கள், சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டிருக்கிறது, ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சேதப்படுத்தப்பட்டுள்ள பொதுச் சொத்துக்களுக்கான இழப்பீடு மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் என்று கூறி, இது தொடர்பாக அறிவிப்புகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அப்பாவி ஏழை மக்கள் அபரிமிதமான அளவிற்கு அபராதம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.இந்த மாவட்டங்களில் 11 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அனைவரும் மிகவும் வறிய நிலையில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள். 19ஆம் தேதியன்று லக்னோவில் இ-ரிக்ஷா ஓட்டும் முகமது வகீல் என்பவர் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டுள்ள, மற்ற அனைவரும் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று தொழுகை முடிந்து வெளிவந்தவர்களாவார்கள். இந்தத் தொழுகைகள் மாநிலம் முழுதும் உள்ள மசூதிகளில் நடைபெறுவதாலும், இவற்றில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்பார்கள் என்பதாலும் தொழுகைகளை முடித்துவிட்டு வெளியே வருபவர்கள்மீது தாக்குதலைத் தொடுத்திட அரசு நிர்வாகம் இறங்கியது. இவ்வாறு பத்து மாவட்டங்களில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக உ.பி.யில் உள்ள பல்வேறு மக்கள் பிரிவினர் மத்தியில் மிகவும் விரிவான அளவில் கோபம் இருக்கிறது. ஜேஎன்யு, ஜாமியா மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் ஆகிய வற்றில் நடைபெற்றுள்ள தாக்குதல்கள் மாணவர்கள் மத்தியிலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் இந்தியக் குடியுரிமைக்கு உரிமை அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக சிறுபான்மையினர் உணரத்தொடங்கி இருக்கிறார்கள். வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்றுள்ள இடங்களை ஆய்வு செய்யும்போது, இவற்றிற்கு நிர்வாகத்தின் தோல்வி மற்றும்/அல்லது காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டுள்ள அணுகுமுறை மற்றும் கொடூரமான முறையில் அடக்குமுறையை ஏவி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
11 பேர் இடுப்புக்கு மேலேயே துப்பாக்கிக் குண்டுகளால் சுடப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். மீரட்டில் அலீம் என்பவர் தலையிலும், பிஜ்னாவூரில் அனாஸ் என்பவர் கண்ணிலும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டபின்னர் இந்த செய்தியை நிர்வாகம் இவர்களின் குடும்பத்தாருக்குத் தெரிவிக்கக் கூட
இல்லை. சம்பவத்தைப் பார்த்தவர்கள் மற்றும் அண்டை வீட்டார்கள்தான் தகவல் கூறியிருக்கிறார்கள். இறந்தவர்கள் அனைவருக்கும் சடலக் கூராய்வு நடைபெற்றுள்ளபோதிலும், அனாஸ் மற்றும் சுலைமான் தவிர வேறெவர் இறப்பு குறித்த சடலக்கூராய்வு சான்றிதழின் நகலும் அவர்களின் குடும்பத்தாருக்கு அளிக்கப்படவில்லை. இறந்தவர்களின் சடலங்கள் மிகவும் கருணையற்ற
விதத்தில் அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. மீரட்டிலும், பிஜ்னாவூரிலும் சடலங்களை அவர்களின் சொந்த இடத்திற்கு எடுத்துச்செல்ல அனு
மதிக்கப் படவில்லை. மிகவும் தொலைவிலிருந்த கல்லறைகளில் புதைக்கப்பட்டனர்.
சம்பவங்கள் நடைபெற்றதற்குப் பின்னர் உ.பி. காவல்துறைத் தலைவர், போலீசார் துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தவில்லை என்று உடனடியாக அறிக்கை விடுத்தார். ஆனால் இறந்தவர்களின் உடல்களோ வேறுவிதமான கதைகளைக் கூறுகின்றன. சுலைமான் வழக்கைப் பொறுத்தவரை, பிஜ்னாவூர் காவல் கண்காணிப்பாளர், “அவர் போலீஸ் துப்பாக்கிக் குண்டால்தான் சுட்டுக் கொல்லப்பட்டார்” என்றும், “ஆனால் போலீஸின் ‘தற்காப்புக்காக’ அவ்வாறு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்” என்றும் கூறியிருக்கிறார். போலீசாரின் அறிக்கைகளை மறுக்கும் விதத்தில், சம்பவம் தொடர்பான காணொளிக் காட்சிகள் தேசியத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் காட்டப்பட்டன. அவற்றில் கான்பூரில் ஒரு போலீஸ்காரர் சுடுவதும், கான்பூரில் கார்களை போலீசாரே நாசம் செய்வதும் பதிவு செய்யப்பட்டு காட்டப்பட்டன.
கான்பூரிலும், லக்னோவிலும் போலீசார் மக்களின் வீடுகளுக்குள் புகுந்து சொத்துக்களை சூறையாடியதாகவும், அவர்களை மிகவும் இழிவாகத் திட்டியதாகவும், பெண்களையும் அடித்து நொறுக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர். முசாபர்நகரில் இளம் சிறார்களுக்கு எதிராக அட்டூழியங்கள் புரிந்ததாகவும், மதராசா மௌலானாவும் தாக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றர்.
சென்றவாரம், கான்பூர் மற்றும் மீரட் காவல்துறை அதிகாரிகள், கொல்லப்பட்டவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் மீது கலவரம் செய்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு, அவர்க
ளுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து சொத்துக்களை நாசம் செய்ததற்காக இழப்பீடு வசூலித்திடவும் அறிவிப்புகள் அனுப்பப்படும் என்று கூறியிருக்கிறார்கள். இவ்வாறான கொடுமைகள் மட்டுமல்லாமல், உ.பி.யில் நடைபெற்றுள்ள சம்பவங்கள் குறித்து மேலும் சிலவற்றைக் கூற வேண்டியிருக்கிறது.
கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு, மாநில அரசாங்கத்தால் எவ்விதமான இழப்பீடும் அறிவிக்கப்படவில்லை. துப்பாக்கிக் குண்டுகளால் காயம் அடைந்த
வர்களுக்கு மருத்துவ சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை. உண்மையில் அவர்களில் பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மீரட்டிலும் பிஜ்னாவூரிலும் மேற்கு உ.பி.யில் உள்ள வேறு
சில மாவட்டங்களிலும், ‘போலீஸ் நண்பன்’ என்று ஒரு பிரிவினர் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களைத் தெரிவு செய்வதற்காக எவ்விதமான முறையும் கடைப்பிடிக்கப்படவில்லை. இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள், பாஜக-வின் ஆதரவாளர்கள் என்று உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் குண்டாந்தடிகள், அடையாள அட்டைகள், போலீஸ் ஜாக்கெட்டுகள் அளிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் மக்களைத் தாக்குவதும், சொத்துக்களை சேதப்படுத்துவதும் காணொளிக் காட்சிகளாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
பிஜ்னாவூரில் புகழ்பெற்ற மூன்று வழக்கறிஞர்கள்கூட கலகம் செய்தவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டு, தலைமறைவாகிவிட்டார்கள் என்றும் அவர்களைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இவர்கள் மீதும் மற்றும் அப்பாவி மக்கள் மீதும் போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, ஜனவரி 5 அன்று மாவட்ட நீதிமன்றத்தில் வேலைநிறுத்தம் நடைபெற்றுள்ளது. மீரட்டில், ஒரு தேசிய இந்திய சானலுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஒரு வீடியோவை அளித்திருந்தார். அதன்படி ஒரு ‘கும்பல்’ 35 போலீசாரை உயிருடன் ஓர் அறையில் பூட்டி வைத்து, எரிக்க முயற்சித்ததாகக் கூறியிருந்தார். பின்னர் மீண்டும் இந்த வீடியோ காட்டப்படவில்லை. இவ்வாறு கூறப்பட்ட இடத்திற்கு நான் சென்றிருந்தேன். என்ன விவரம் என்று கேட்டேன். 20ஆம் தேதியன்று போலீஸ் பயிற்சியில் உள்ள 36 பேர் நிராயுதபாணியாக அங்கே இருந்திருக்கின்றனர். வெளியில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்துவதும், குண்டாந்தடிகளால் மக்களை அடித்து நொறுக்குவதும் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, இவர்களின் பாதுகாப்பு கருதி, இவர்களை உள்ளூர் மக்கள் ஓர் அறைக்குள் வைத்துப் பூட்டி வைத்திருக்கின்றனர். பின்னர் அமைதி திரும்பியபின் காவல்துறையினருக்கு செய்திகள் அனுப்பி அவர்களை விடுவித்திருக்கின்றனர். இதைத்தான்
காவல் கண்காணிப்பாளர் இவ்வாறு திரித்துக் கூறியிருக்கிறார். கோரிக்கைகள் உ.பி. மாநிலத்தில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
அப்பாவி மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்படவேண்டும். அபராதம் விதிக்கும் முயற்சிகளைக் கைவிட வேண்டும். வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட காவல்துறையி னர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும். ‘போலீஸ் நண்பன்’ என்னும் குழுவை முழுமையாகக் கலைத்திட வேண்டும். பணியில் இருக்கும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபின், உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்து குறித்தும் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
தமிழில்: ச.வீரமணி