tamilnadu

img

வேளாண் விரோத சட்டங்களும் கள்ளச் சந்தை கார்ப்பரேட்டுகளும்...

நரேந்திர மோடியால் தலைமை தாங்கப்படும் பாஜக அரசாங்கமும், அதன் ஊதுகுழல் ஊடகங்களும் “விவசாயிகள் ஆதரவு” சட்டங்கள் என்று தம்பட்டம் அடித்துவருகின்ற மூன்று வேளாண் சட்டங்களும் நாடு முழுவதும் விவசாயிகளின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளன. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப்பிரதேசத்தில் எழுந்துள்ள விவசாயிகளின் எழுச்சி, மத்திய உணவுப் பதப்படுத்தல் தொழில்களுக்கான அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல், “விவசாயிகளுக்கு எதிரான அவசரச்சட்டங்கள் மற்றும் சட்டமுன்வடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து” ராஜினாமா செய்ய நிர்ப்பந்தம் கொடுத்திருக்கிறது.  

2014இல் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து அதற்கு உறுதுணையாக இருந்துவந்த சிரோன்மணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் இவ்வாறு ராஜினாமா செய்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஏனெனில் அகாலிதளம் கட்சி, இதற்குமுன் பாஜக அரசாங்கம் கொண்டுவந்த நிலக் கையகப்படுத்தல் அவசரச் சட்டம், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, குடியுரிமைத்திருத்தச்சட்டம்/தேசிய குடிமக்கள் பதிவேடு/தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவை, அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து முதலானவற்றை ஆதரித்துவந்த கட்சியாகும். இப்போது விவசாயிகள் மீதான தாக்குதல் வந்தபின், இப்போது ராஜினாமா செய்துள்ளது. பிரதமரும் பாஜக அரசாங்கமும், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களைக் குஷிப்படுத்துவதற்காக, இதுநாள்வரையிலும் தங்களுக்கு உறுதுணையாக இருந்த கூட்டணிக் கட்சிகளைக்கூட கைவிடத் தயாராகிவிட்டது என்பது இதிலிருந்து  தெளிவாகத் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சி 2019இல் வெளியிட்டிருந்த தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில், விவசாய உற்பத்தி சந்தைக் குழுச் சட்டத்தை (Agricultural Produce Market Committee) ரத்துசெய்துவிட்டு, விவசாய உற்பத்திப் பொருள்களில் ஏற்றுமதி மற்றும் மாநிலங்களுக்கிடையே வர்த்தகத்தை ஏற்படுத்துவோம் என்று கூறியிருந்தது. ஆனாலும் அதுவும்கூட, இப்போது தன் நிலையை மாற்றிக்கொண்டு, நடந்துவரும் எதிர்ப்புக்கிளர்ச்சிகளுடன் தன்னை இணைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இது, இதுநாள்வரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும், விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காக வீரம்செறிந்த போராட்டங்களை நடத்திவந்த அகில அந்திய விவசாயிகள் சங்கமும் விவசாயிகள் தொடர்பாக உயத்திப்பிடித்த நிலைப்பாட்டைச் சரி என மெய்ப்பித்துள்ளது. மோடி கூறுவதுபோல், இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவான ஒன்று என்றால், பின் ஏன் விவசாயிகள் இந்நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்டுப் போராட அணி அணியாக வந்துகொண்டிருக்கிறார்கள்? இச்சட்டங்களில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு அம்சம் குறித்தும் அவை விவசாயிகள் மீது ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்தும் ஆராய்ந்தோமானால் இவற்றுக்கான பதில்கள் நன்கு தெரியவரும்.

கார்ப்பரேட் ராஜ்ஜியத்திற்காக மாநில உரிமைகள் பறிப்பு
பாஜக அரசாங்கம், நாடாளுமன்றத்தில் இம்மூன்று சட்டமுன்வடிவுகளும் நிறைவேற்றப்பட்டதன் விளைவாக, விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களை நாட்டில் எங்கே வேண்டுமானாலும் விற்பதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பதால், விவசாயிகள் 2020 ஜூன் 3 அன்றுதான் சுதந்திரம் பெற்றார்களேயொழிய, 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரம் பெறவில்லை என்று துஷ்டத்தனமாகக் கூறிவருகிறது. இவர்கள் 1991இலிருந்து கடைப்பிடித்துவரும் நவீன தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கைகள்தான் மிகவும் மோசமான அளவில் விவசாயி நெருக்கடியை ஏற்படுத்தி, 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டார்கள் என்றே தெரிகிறது. இப்போது கொண்டுவந்துள்ள மூன்று சட்டங்களுமே மாநில அரசாங்கங்களின் உரிமைகள் மீதும் அவற்றின் கூட்டாட்சித் தத்துவத்தின் மீதும் நேரடித் தாக்குதல்களாகும். விவசாயம் என்பது அரசமைப்புச்சட்டத்தின்கீழ் மாநிலப்பட்டியலில் வரக்கூடிய ஒன்று. பாஜக மத்திய அரசாங்கம், உண்மையில் மாநிலங்களின் அனைத்து அதிகாரங்களையும் தன் கைகளில் எடுத்துக்கொண்டு, விவசாயப் பொருள்கள் மீது இருந்துவரும் ஒழுங்குமுறைகளை நீக்கி, கார்ப்பரேட் நிறுவனங்கள் அவற்றைக் கபளீகரம் செய்துகொள்ள அனுமதித்திருக்கிறது. 

சுதந்திரமாக அல்ல, தயவை எதிர்பார்த்து...
இந்தச் சட்டங்கள், விவசாயிகளை, வேளாண் வர்த்தகர்கள், பெரிய அளவிலான சில்லரை வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் தயவில் வாழக்கூடிய விதத்தில் தள்ளிவிட்டிருக்கிறது. இதுநாள்வரையிலும் வேளாண் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்தவர்களுக்கு இருந்துவந்த கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டன. எதிர்காலத்தில் மாநில அரசாங்கங்கள் இனி விவசாயத்தையும், வர்த்தகம் மற்றும் வணிகத்தையும் தங்களின் தனி உரிமைகளாகக் கருதிட முடியாது. 

விவசாயிகளுக்கு இதுநாள்வரையிலும் இருந்துவந்த கொஞ்சநஞ்ச பாதுகாப்பும்கூட நீக்கப்பட்டுவிட்டன. விவசாயிகள், பெரும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வேளாண்வர்த்தகர்களின் தயவில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவார்கள். அவர்கள் இடும் கட்டளையின்படிதான் இனி விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலை உருவாகும். இவ்வாறாக இந்தச் சட்டங்களில் கொண்டுவந்துள்ள மாற்றங்கள், விவசாயிகளை முற்றிலுமாக அதிகாரமிழக்கச் செய்து, விவசாயத்தில் கம்பெனி ராஜ்ஜியத்திற்குக் கட்டியம் கூறியிருக்கிறது.

சந்தைகளின் கட்டுப்பாடுகள் நீக்கம், கார்ப்பரேட்டுகளின் கொள்ளை லாபமீட்டலுக்கு வழிவகுக்கும்
பாஜக அரசாங்கம், விவசாய உற்பத்திப் பொருட்கள் வர்த்தகம் மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதிசெய்துதருதல்) சட்டமுன்வடிவு, 2020 மாநிலங்களுக்கிடையே தடையில்லா வர்த்தகம் மற்றும் வணிகம் மேற்கொள்வதை மேம்படுத்தும் என்று பாஜக அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கிறது. நாட்டில் முதன்முதலாக விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களை நாட்டில் எங்கு வேண்டுமானாலும் விற்பதற்கான உரிமையைப் பெற்றிருக்கிறார்கள் என்றும் கூறிக்கொண்டிருக்கிறது. இதற்கும் எதார்த்த நிலைக்கும் வெகுதூரமாகும். உண்மை நிலை என்னவென்றால் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்துவந்த பொருள்களில் உபரியாக இருந்தவற்றை உள்ளூரில் உள்ள பெரும் வர்த்தகர்களிடம்தான் இதுநாள்வரையிலும் விற்று வந்தார்கள். மொத்தம் உள்ள 31 பயிர்களில் 29 பயிர்களை இவ்வாறு அவர்கள் கடந்த 2012 ஜூலைக்கும் 2013 ஜூனுக்கும் இடையே விற்றிருக்கிறார்கள். ஏபிஎம்சி எனப்படும் வேளாண் உற்பத்திப்பொருள்கள் சந்தைக் குழு சந்தைகளில் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களில் 25 சதவீதம்கூட விற்றது கிடையாது.

கேரளாவில் ஏபிஎம்சி கிடையாது. ஆயினும் அரசாங்கமே நேரடியாக, விவசாயிகளுக்கு ஆதரவாகத் தலையிடுகிறது. பீகார், ஏபிஎம்சி சந்தைகளை ஒழித்துக்கட்டிவிட்டது. அதனால் விவசாயிகள் தங்கள் விவசாயப் பொருள்களுக்கு மிகவும் குறைந்த விலையையே பெறும் அவலநிலை. நாடு முழுவதும், முறைப்படுத்தப்பட்ட சந்தைகள் மட்டுமே உபரியாகவுள்ள விவசாய விளைபொருள்களைக் கையாள்வதற்கான சந்தையாக இருக்க முடியாது என்பது தெளிவாகும்.
ஏபிஎம்சி சட்டங்கள் நாட்டில் 1960களிலும் 1970களிலும் அறிமுகப்படுத்தப்பட்டன.   ஏழை விவசாயிகளிடமிருந்து மிகவும் குறைந்த விலைக்கு உணவு தானியங்களை வாங்கும் பெரும் வர்த்தகர்களின் ஏகபோக அதிகாரங்களைக் கண்காணிப்பதற்காக இச்சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. விலைகள் நிர்ணயம் செய்யப்படுவதில், தரப்படுத்தப்படுவதில், எடை மற்றும் கொடுக்கல் வாங்கல்களில் விவசாயிகள் சுரண்டப்படக்கூடாது என்பதை உத்தரவாதப்படுத்தப்படுவதற்காக இவை கொண்டுவரப்பட்டன. இச்சட்டங்கள் வலுவானமுறையில் எப்போதுமே அமல்படுத்தப்பட்டது இல்லை என்ற போதிலும்கூட, இச்சட்டங்கள் வேளாண் உற்பத்திப் பொருள்கள் வாங்கப்படுவதில் ஒரு போட்டியை உருவாக்குவதற்குப் பயன்பட்டன. இத்தகைய ஏற்பாடு இருந்தும்கூட இதனால் குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதப்படுத்த முடியவில்லை.

உள்ளூர் வர்த்தகர்களுக்குப் பதில் பெரும் முதலாளிகள்
வர்த்தகர்கள் மற்றும் பெரும் வியாபாரிகள் அறிவிக்கப்பட்ட சந்தைகளுக்கு வெளியே உற்பத்திப் பொருள்களை விவசாயிகளிடமிருந்து வாங்குவதற்கு அனுமதிப்பது என்பதன் பொருள், அவை அவர்களிடமிருந்து எவ்விதமான ஏலமும் விடப்படாமல் அல்லது பெரும் வர்த்தகர்களுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் இடையே எவ்விதமான பேச்சுவார்த்தைகளுமின்றி பொருள்களை வாங்குவது என்பதாகும். இத்தகைய அமைப்புமுறை இயல்பாகவே விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானதாகும். அவர்கள் தங்கள் பொருள்களுக்கு உரிய ஆதார விலையை (remunerative prices) பெற மாட்டார்கள். விவசாயிகள் அடிக்கடி தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களை தங்கள், குடும்ப செலவினங்களுக்காகவும், அடுத்து பயிரிடுவதற்காகவும் வாங்கிய கடன்களை அடைப்பதற்காகவும் மிகவும் குறைந்தவிலைக்கு விற்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இனிவருங்காலங்களில் இந்த உள்ளூர் வர்த்தகர்களின் இடத்தை பெரும் முதலாளிகள் பிடித்துக்கொள்வார்கள். அரசாங்கம் எவ்விதத்திலும் தலையிடாது. 

இப்போதுள்ள நிலையில்கூட ஒப்பந்த வேளாண்மை நடைபெறக்கூடிய இடங்களில், விவசாயிகளுக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட விலை கூட அளிக்கப்படுவதில்லை. பல்வேறு தில்லுமுல்லுகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். விவசாய உற்பத்திப் பொருள்களுக்கான விலை ஆதரவு என்பது இனி கிடையாது. விவசாயிகள் உலக அளவிலான விலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.  அவர்கள் உற்பத்தி செய்த பொருள்கள் உலக சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்டாலும்கூட அதனால் அவர்களுக்கு எவ்வித ஆதாயமும் கிடைக்கப்போவதில்லை.

உத்தரவாதமில்லா நிலை
குறைந்தபட்ச ஆதார விலை என்பதும், அரசாங்கமே கொள்முதல் செய்துகொள்ளும் என்பதும் முடிவுக்கு வந்துவிட்டன. ‘ஒரே தேசம் ஒரே சந்தை’ என்பது, இதற்கு முந்தைய முழக்கங்களான ‘ஒரே தேசம் ஒரே வரி’ என்பதைப்போலவே விவசாய உற்பத்திப் பொருள்களை உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு மேலும் துன்ப துயரங்களையே கொண்டுவரும். விவசாயிகளின் துன்பதுயரங்களுக்கு அடிப்படைக் காரணம் சந்தைப்படுத்தலில் உள்ள கட்டுப்பாடுகள் அல்ல, மாறாக அவர்கள் உற்பத்தி செய்த பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கவில்லை என்பதும், தாங்கள் உற்பத்தி செய்த பொருள்கள் கொள்முதல் செய்யப்படுவதற்கான உத்தரவாதம் இல்லாத நிலையுமேயாகும். நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று சட்டங்களிலும் எந்த இடத்திலும் உற்பத்தி செய்யப்பட்ட விவசாயப் பொருள்கள் உற்பத்திச் செலவினத்துடன் ஒன்றரை மடங்கு உயர்த்தி குறைந்தபட்ச ஆதார விலை அளித்து கொள்முதல் செய்யப்படும் என்கிற உத்தரவாதம் அளிக்கப்படவில்லை.

அரசு கொள்முதல், மானியம் வெட்டு
இந்த மூன்று அவசரச்சட்டங்களையும்/சட்டமுன்வடிவுகளையும் ஒருங்கிணைத்துப் படித்தோமானால், எந்த அளவிற்கு உலக வர்த்தக அமைப்பு நம் நாட்டில் இருந்துவந்த மானியங்களை வெட்டிக்குறைப்பதிலும், அரசாங்கம் அவற்றைக்கொள்முதல் செய்வதைக் குறைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது என்பதிலும், அதன் கட்டளைப்படியே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.சாந்த குமார் குழு இதைத்தான் பரிந்துரைத்திருந்தது. கொள்முதலையும், விவசாயப் பொருள்களை பதப்படுத்தி வைப்பதையும் தனியார்மயப்படுத்திட வேண்டும் என்றும், இவ்விஷயங்களில் மத்திய அரசாங்கம் தன் பங்களிப்பினைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது. இதன் பரிந்துரையின் அடிப்படையில்தான் பாஜக அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது.  நெல்லைக் கொள்முதல் செய்வதில் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு 900 ரூபாயாக இருக்கக்கூடிய அதே சமயத்தில், கேரள மாநில அரசு  குவிண்டாலுக்கு 2750 ரூபாய் கொடுத்து கொள்முதல் செய்கிறது. இவ்வாறு மாநில அரசுகள் இதுவரை செயல்பட்டுவந்தன. இனி இவ்வாறு மாநில அரசுகள், விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று விரும்பினாலும் அதனைச் செய்யமுடியாத விதத்தில் மத்திய அரசு இந்தச் சட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறது.

பதுக்கலுக்கும், கள்ளச் சந்தைக்கும் தடையற்ற சுதந்திரம்
அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கி, திருத்தங்கள் கொண்டுவந்திருப்பதன் மூலம், உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது மட்டுமல்ல, இப்பொருள்களை வர்த்தகர்களும், பெரும் வர்த்தக நிறுவனங்களும் வகைதொகையின்றி வாங்கி வைத்துக்கொண்டு, அவசரநிலை ஏற்படும் சமயங்களில் இவற்றைப் பதுக்குவதற்கும், கள்ளச்சந்தைகளில் விற்பதற்கும் வழி செய்து தரப்பட்டிருக்கிறது. இந்தத் திருத்தங்கள் இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டிருப்பதற்கான நோக்கத்தையே அடித்துவீழ்த்திவிட்டன. இதனால் நுகர்வோர் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.  செயற்கைப் பற்றாக்குறை, பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை, விலை உயர்வு முதலியவற்றை நாம் நன்கு காண முடியும்.  

அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் செய்யப்பட்டிருக்கிற திருத்தங்கள், விவசாயப் பொருள்களைப் பதப்படுத்துவதற்கும், உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்துவதற்கும் முதலீடுகளைக் கவர்வதற்காக 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்திருக்கிறது. இது, வேளாண் வர்த்தகர்கள் மற்றும் கார்ப்பரேட்டுகள் விவசாயத்துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள அனுமதிப்பதற்கு வழிவகுத்திருக்கும் நோக்கத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. 
பாஜக அரசாங்கம், கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றைப் பயன்படுத்திக்கொண்டு, விவசாயத்துறையை முழுமையாக வேளாண் வர்த்தகர்களும், கார்ப்பரேட்டுகளும் சூறையாடுவதற்கு வழிவகுத்துத் தந்திருக்கிறது. விவசாயப் பொருள்களை அரசாங்கம் கொள்முதல் செய்து சேமித்து வைத்திடும் பொறுப்பைக் கைகழுவிவிட்டது. இப்போது உருவாக்கப்பட்டிருக்கும் 1 லட்சம் கோடி ரூபாய் விவசாய உள்கட்டமைப்பு நிதியமும்கூட கார்ப்பரேட் வேளாண் வர்த்தகர்களிடம் விவசாயப் பொருள்க
ளை கொள்முதல் செய்வதற்காகவும், குளிர்பதன வசதியுடன் கிடங்குகள் ஏற்படுத்துவதற்கும், போக்குவரத்துக்காகவும் ஒப்படைக்கப்பட இருக்கிறது.

கார்ப்பரேட் ஒப்பந்த விவசாயத்தை மேம்படுத்துதல்
“விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் விவசாய சேவைகள் மீதான ஒப்பந்தம் சட்டமுன்வடிவு, 2020” விவசாயிகளுக்கு தங்கள் விவசாயப் பொருள்களை விற்பதற்கு அளப்பரிய சுதந்திரம் அளித்திருக்கிறது என்று அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. இது விலை உத்தரவாதம் என்ற பெயரைக் குறிப்பிட்டுள்ள போதிலும், வர்த்தகரால் அல்லது வேளாண்வர்த்தகப்பெரும்புள்ளிகளால் விவசாயிக்கு அளிக்கப்படும் விலை என்பது குறைந்தபட்ச ஆதார விலைக்குக் கீழே இருக்கக்கூடாது என்று இந்தச்சட்டத்தில் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. விவசாயப் பொருள்களின் விலை, அதன் உற்பத்திச்செலவினத்தைவிட ஒன்றரைமடங்கு உயர்த்தி, நிர்ணயம் செய்யப்படும் என்று நரேந்திர மோடியும், பாஜக அரசாங்கமும் 2014இல் வாக்குறுதி அளித்ததுபோல் எந்த இடத்திலும் இந்தச்சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. எதார்த்தத்தில் மத்திய அரசு விவசாயப் பொருள்களின் மீதான தன் கட்டுப்பாடுகளைக் கைகழுவிக்கொண்டுவிட்டது. அதானி வில்மார், பெப்சிகோ, வால்மார்ட், ரிலையன்ஸ், ஐடிசி போன்றவர்களுடன் பல்வேறுவகைகளிலும் கடன்பட்டு விவசாயம் செய்கின்ற விவசாயிகள் அல்லது குத்தகை விவசாயிகள் போட்டி போட முடியும் என்று எவராவது கற்பனையாவது செய்ய முடியுமா? இந்தச் சட்டமானது விவசாயிகளை மேலும் அடிமைப்படுத்திடவே இட்டுச்செல்லும். 

தொழிலாளர்கள் ஆதரவுடன் விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டம்
அரசாங்கத்தின் திட்டமிடப்படாத சமூக முடக்கத்தின் காரணமாக ஒட்டுமொத்த விவசாய வர்க்கமும், உழைக்கும் மக்களும் கடுமையான முறையில் வருமான இழப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அவ்வாறு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கோ, மக்களுக்கோ இழப்பீடு, கடன் தள்ளுபடி, உணவு தானியங்கள் அளித்தல், வேலை வாய்ப்பை அளித்தல், சுகாதார வசதிகளை அளித்தல் போன்று நிவாரண உதவிகள் செய்வதற்குப் பதிலாக, பாஜக அரசாங்கம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் எண்ணற்ற உதவிகளையும் சலுகைகளையும் வாரி வழங்கி இருக்கிறது. இவ்வாறு கார்ப்பரேட் நிறுவனங்கள் சூறையாடுவதற்கு வசதி செய்து கொடுத்திருப்பதற்குப் பதிலாக, அவற்றின் அந்நிய நேரடி முதலீட்டை சார்ந்திருப்பதற்குப் பதிலாக, மத்திய அரசாங்கம், விவசாயிகள் மற்றும் விவசாயத்தொழிலாளர்களின் கூட்டுறவு மூலம் விவசாயத்தை மேம்படுத்திடுவதை உத்தரவாதப்படுத்தி இருக்க வேண்டும். விவசாயிகளுக்குத் தேவை என்ன? அவர்களின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை. குறைந்தபட்ச ஆதார விலை என்பது விவசாயப் பொருள்களின் உற்பத்திச் செலவினத்தைவிட ஒன்றரை மடங்கு உயர்த்தி, நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு நிர்ணயம் செய்து, விளைந்த அனைத்துப் பொருள்களையும் கொள்முதல் செய்திட உத்தரவாதம் செய்திட வேண்டும். 

விவசாயத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 600 ரூபாய் ஊதியத்துடன் வேலை அளித்திட வேண்டும். வருமான வரி செலுத்தாத குடும்பத்தினர் அனைவருக்கும் மாதத்திற்கு 7,500 ரூபாய்  அளித்திட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 200 நாட்களுக்கு வேலை அளித்திட வேண்டும். குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளுக்கும் இதுவரையுள்ள விவசாயக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்திட வேண்டும். உணவுப் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த சமூகப்பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.இந்த மூன்று வேளாண் சட்டங்களும், மின்சார (திருத்தச்)சட்டம் - 2020 க்கும் எதிர்ப்புத்தெரிவித்து, இவற்றின் நகல்கள் நாட்டில் மூவாயிரம் மையங்களில் எரிக்கப்பட்டிருக்கின்றன. தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டம் நாடு முழுதும் நடந்துகொண்டிருக்கிறது. போராட்டங்களை மேலும் மும்முரமாக முன்னெடுத்துச்செல்ல திட்டங்கள் வகுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.  

பேரெழுச்சி - பந்த்
2020 ஆகஸ்ட் 20 அன்று, வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்த ஆண்டுதினத்தை அனுசரிக்கும் விதத்திலும், 2020 செப்டம்பர் 5 அன்று நடைபெற்ற இயக்கத்திலும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்-விவசாயிகள் பங்கேற்ற போராட்டங்களில் பெருமளவில் நாடுமுழுதும் பங்கேற்றுள்ளனர்.  200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அணிதிரண்டுள்ள அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு, மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் பூமி அதிகார் அந்தோலன் ஆகிய அனைத்து அமைப்புகளும் இப்போராட்டங்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து முன்னணியில் நிற்கின்றன.

அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுசார்பில் நாடு முழுவதும் செப்டம்பர் 25 அன்று எதிர்ப்புதினம் பேரெழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. பஞ்சாப்,  ஹரியானா, உத்தரப்பிரதேசத்தின் விவசாயிகள் பந்த் வெற்றிகரமாக நடத்தியுள்ளார்கள். தொழிலாளர் வர்க்கமும், மத்தியத் தொழிற்சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளன. இச்சட்டங்களுக்கு எதிராக இடதுசாரிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தீர்மானங்கள் கொண்டுவந்தனர். எதிர்த்தும் குரல்கொடுத்தனர். விவசாயிகளின் உண்மையான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக பாஜக அரசாங்கம் அவர்களைத் திசை திருப்பும் வேலையில் இறங்கியிருக்கிறது.விவசாயிகளின் போராட்டங்கள் மேலும் தீவிரமடையும். இந்த விவசாய விரோத சட்டங்கள் தடுத்து நிறுத்தப்படும்.

=== விஜூ கிருஷ்ணன், இணைச் செயலாளர், அகில இந்திய விவசாயிகள் சங்கம் ===

தமிழில்: ச.வீரமணி