சாத்தூர்:
நாட்டின் 75-வது சுதந்திரதின விழாவினை முதல் சுந்திரதினக் கொண்டாட்டத்தினை நினைவூட்டும் எழுச்சியுடன் ஆகஸ்ட் 15 அன்று நள்ளிரவு75 இடங்களில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடுவது என்று ஆகஸ்ட் 7,8 தேதிகளில் சாத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் தீர்மானித்துள்ளது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
கவிஞர் கந்தர்வன், தமிழறிஞர் தொ.பரமசிவன் உள்ளிட்டு காலமாகிவிட்ட எழுத்தாளர்களின் நூல்களை அவர்களது குடும்பத்தாரின் இசைவு பெற்று தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்க வேண்டும். தமிழின் முதல் புதினத்தை எழுதியவர், சட்ட நூல்களின் முன்னோடி, பெண் விடுதலை பேசியசமத்துவவாதி, பஞ்சகாலத்தில் தன் சொத்துகளை விற்று மக்களின் துயர் போக்கியவர், மாயவரம் நகர்மன்றத்தின் முதல் தலைவராக இருந்து நற்பணியாற்றியவர் எனப் புகழப்படும் மாயூரம் வேதநாயகம் அவர்களுக்கு மயிலாடுதுறையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். அத்துடன் முதல் இந்திய நீதிபதி என்ற பெருமைக்குரியவரான அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சிலை எழுப்ப வேண்டும்.தென்னிந்தியாவின் சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராகிய அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறு தமிழ்நாட்டின் பாடநூல்களில் சேர்க்கப்பட வேண்டும். அவரது பெயரில் இருக்கை ஒன்றினை நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நிறுவிட வேண்டும்.
கலை இலக்கியம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், தமிழ்ப்பண்பாடு, மொழிவளர்ச்சி சார்ந்து நீண்டகாலமாக தொடர்ந்து செயல்பட்டுவரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் தமது செயல் அலுவலகத்தை அமைத்துக் கொள்வதற்கான கட்டிடத்தை விலையோ கட்டணமோ இல்லாமல் தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பல்கலைக்கழகங்களில் தொல்லியல் துறை உருவாக்குக!
மனிதகுலத்தின் தொன்மையிடங்களில் ஒன்றென தமிழ்நாட்டினை நிறுவிடும் தொல்லியல் சான்றுகள் பல பகுதிகளிலும் கிடைத்துவரும் நிலையில் அகழாய்வு உள்ளிட்ட பணிகளை ஒருங்கிணைக்கும் விதமாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொல்லியல் துறையினை தமிழ்நாடு அரசுஉருவாக்கிட வேண்டும். தமிழ் மரபுக்கலைகளின் வரலாற்றை உலகறியச் செய்யும் விதமாக தமிழ் கலைக்கருவிகளின் அருங்காட்சியகம் ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்திட வேண்டும். தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு சித்த மருத்துவப் பட்டப்படிப்பில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அறிவியல் தமிழ் அகராதியினை மேம்படுத்துவதற்கு தகுதியானவர்களைக் கொண்ட பதிப்புக்குழுவினை தமிழ்நாடு அரசு அமைத்திட வேண்டும்.சிறார் இலக்கிய நூல்களைத் தேர்வுசெய்ய தனித்தேர்வுக்குழுவினையும், தனித்துவமான விதிமுறைகளையும் ஏற்படுத்தி தனியாக நூலகஆணை வழங்கப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மையும் பாரபட்சமற்ற வகையிலும் நூலக ஆணை வழங்கப்பட வேண்டும்.திரைப்படங்களுக்கான தேசிய விருதுகளை கதாசிரியருக்கும் பின்னணிக்குரல் வழங்குவோருக்கும் ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும்.
குறைந்த செலவில் தயாரிக்கப்படும் தரமான தமிழ்ப்படங்களுக்கான மானியம் 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும். சென்னை,கும்பகோணத்தில் மட்டும் இயங்கும்அரசு கவின் கலைக்கல்லூரிகளை மதுரை, நெல்லை, கோவை நகரங்களிலும் நடப்பு ஆண்டிலேயே துவங்க அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.