திருவள்ளூர், ஆக.25- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக எஸ். அனுரத்னா பணியாற்றி வருகிறார். மருத்துவ மனையை சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு செய்வது, வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது, மழை நீர் சேகரிப்பு தொட்டி கள் அமைப்பது, சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் விடுமுறை நாட்களில் பழங்குடியினர் வாழும் பகுதிகளுக்கே சென்று தொடர்ந்து மருத்துவ சேவையாற்றி வருகிறார். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் சென்னை எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் எஸ்.அனுரத்னாவின் சேவையை பாராட்டி தமிழக அரசின் சிறந்த மருத்துவருக்கான விருதை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். இந்நிகழ்வில், தமிழகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய 21 மருத்துவர்களுக்கு சிறந்த மருத்துவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது.