tamilnadu

img

விகாஸ் துபேயை என்கவுண்ட்டரில் கொன்றது யோகி அரசு -

பாஜக உள்ளிட்ட மேலிடத் தொடர்புகளை மூடிமறைக்க இதுதான் ‘சிறந்த’ வழி!

கான்பூர், ஜூலை 10- உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே விகாஸ் துபே 10ம் தேதி வெள்ளி அதிகாலை என்கவுண்ட்டரில் உயிரிழந்தார். விகாஸ் துபேயின் மரணத்திற்கு கண்ணீர் சிந்த யாரும் இல்லை; ஏனெனில் ஏழு நாட்களுக்கு முன்பு ஒரு மூத்த அதிகாரி உட்பட எட்டு காவலர்கள் துபேயின் கும்பலால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். பின்னர் கடந்த ஒரு வாரமாக காவல்துறைக்கு கண்ணா மூச்சி காட்டிய துபே மத்தியப் பிரதேசம் உஜ்ஜையினில் கைது செய்யப்பட்டார். விவரம் அறிந்தவர்கள், துபே சரண் அடைந்ததாகக் கூறுகின்றனர். ஏனெனில் துபேயின் 5 கூட்டாளிகள் உ.பி. காவல்துறை யால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர். இந்நிலையில் தனது உயிரை பாதுகாத்துக் கொள்ள துபே சரண் அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனால் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் காவல்துறை, தாங்கள்தான் கைது செய்தோம் என மார்தட்டிக்கொள்கிறது.

விகாஸ் துபே கைது செய்யப்பட்டவுடன் என்கவுண்ட்டரில் கொலை செய்யப்படுவது உறுதி என பிரசாந்த் பூஷண் மற்றும் பல பத்திரிக்கை யாளர்கள் கூறிவந்தனர். அவர்களின் மதிப்பீடு உண்மை ஆகிவிட்டது. சரண் அடைவது தனது உயிரை பாதுகாக்க உதவாது என துபே அறிந்திருக்க வில்லை. ஏனெனில் துபேயிடம் அவ்வளவு ரகசியங்கள் இருந்தன. காவல்துறை/ அதிகாரவர்க்கம்/ பா.ஜ.க.உட்பட மேலிட தொடர்புகள் என பல செய்திகள் வெளிவந்தால் மாநில பாஜக அரசாங்கத்தின் பிம்பம் தகர்ந்துவிடும். அத்தனையையும் ஒரே நேரத்தில் மூடி மறைக்க  ஒரே வழி என்கவுண்ட்டர்தான். 

யார் இந்த விகாஸ் துபே?

1990களில் சிறிய குற்றவாளியாக இருந்த விகாஸ் துபே, விரைவில் தனக்கென ஒரு கும்பலை உருவாக்கினார். துபேயின் வாழ்வில் முக்கிய திருப்புமுனை ஹரிகிருஷ் ஸ்ரீவாத்சவா எனும் அரசியல்வாதியுடன் கை கோர்த்ததில் துவங்கியது. உ.பி.யில் உள்ள அரசியல்கட்சிகளில் ஹரிகிருஷ் ஸ்ரீவாத்சவா தஞ்சம் புகாத அமைப்பு எதுவும் இல்லை, இடது சாரிக் கட்சிகளைத் தவிர! துபே இணைந்த பொழுது ஹரிகிருஷ் ஸ்ரீவாத்சவா  பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தார். 2000ம் ஆண்டு துபே இரண்டு கொலை கள் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் துபேயின் ‘ரவுடி’ வாழ்வில் முக்கிய கட்டம் 2001ம் ஆண்டு அன்றைய முதல்வர் ராஜ்நாத் சிங் ஆட்சியில் அமைச்சராக இருந்த சந்தோஷ் சுக்லா எனும் பா.ஜ.க. தலைவரை கொன்றது ஆகும். அதுவும் கான்பூர் மாவட்டம் ஷிவ்லி எனுமிடத்தில் உள்ள காவல் நிலையத்திலேயே இந்த படுகொலை அரங்கேற்றப்பட்டது. சந்தோஷ் சுக்லாவுடன் இரண்டு காவலர்களும் கொல்லப்பட்டனர். சுமார் 60 காவல்துறையினர் கண்முன்னே இது நடந்தது.

எனினும் துபே தண்டனை பெறவில்லை. ஏனெனில் துபேவுக்கு எதிராக காவல்துறையினர் கூட சாட்சியம் சொல்லவில்லை. இத்தனைக்கும் அப்பொழுது பா.ஜ.க. ஆட்சிதான் நடந்து கொண்டிருந்தது. தனது சொந்தக் கட்சியின் தலைவரை கொலை செய்த குற்றவாளிக்கு தண்டனை அளிக்க பாஜக அரசாங்கத்தால் முடியவில்லை; அல்லது விருப்பம் இல்லை. அன்றைக்கே துபேக்கு தண்டனை கிடைத்து இருந்தால் இன்று எட்டு காவலர் உயிர் பறிபோயிருக்காது. துபே இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பொழுது பா.ஜ.க. – பகுஜன் சமாஜ் கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிரு ந்தது. ஆனால் துபேயின் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு கூட செய்யப்படவில்லை. இதற்கு பின்னர் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரி கள் உட்பட அனைவரின் செல்லப்பிள்ளையாக துபே மாறிப் போனார். பல காவலர்கள் பொது இடத்தில் துபேயின் கால்களை தொட்டு வணங்கி ‘ஆசி’ பெரும் அளவிற்கு துபே பிரபலம் ஆனார். கடந்த 20 ஆண்டுகளில் தான் அரங்கேற்றிய ஏராளமான குற்றங்களில் துபே சிக்கவில்லை; சிக்கினாலும் நீண்ட நாட்கள் சிறையில் இருக்கவில்லை. 2017ம் ஆண்டு தனது விடுதலைக்காக இரண்டு பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வெளிப்படை யாக துபே நன்றி கூறினான். 

யோகியின் ஆட்சியில்  வலைக்கு வெளியே துபே!

யோகி ஆதித்யநாத்  முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பொழுது உ.பி.யிலிருந்து அனைத்து ரவுடிகளையும் அகற்றுவேன் என சூளுரைத்தார். என்கவுண்ட்டர்கள் ஊக்குவிக்கப்பட்டன. என்கவுண்ட்டர்கள் செய்யும் காவல்துறையினருக்கு பரிசுகள் வழங்கப்பட் டன. 2019 குடியரசுதின உரையில் 3000 என்கவுண்ட்டர்கள் செய்யப்பட்டதாக வும் 60 பேர் கொல்லப்பட்டனர் எனவும் யோகி பெருமையுடன் குறிப்பிட் டார். ஆனால் யோகிசொல்லாமல்விட்டது என்னவெனில், என்கவுண்ட்டர் என்ற பெயரில் நடத்தப்பட்ட அட்டூழியங்களில் பாதிக்கப்பட்டது பெரும்பாலும் தலித்/பிற்படுத்தப்பட்ட/சிறுபான்மை மக்கள் என்பதுதான்!

இந்த என்கவுண்ட்டர்கள் எல்லையில்லாமல் நடந்தன. குற்றம்சாட்டப் பட்ட ஒரு தலித் இரு சக்கர வாகனத்தில் தப்ப முயற்சித்த பொழுது சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை கூறியது. ஆனால் அவருக்கு இரு சக்கர வாகனம் ஓட்ட தெரியாது என்பது பின்னர் தெரிந்தது. சுமித் குர்ஜார் என்பவர்  என்கவுண்ட்டர் செய்யப்பட்டார். ஆனால் அவர் மீது எந்த வழக்கும் இல்லை. பிறகுதான் தெரிந்தது, அவரது ஊரில் இன்னொரு சுமித் குர்ஜார் இருந்தார்; அவர் மீது சில வழக்குகள் இருந்தன. அவருக்கு பதிலாக அப்பாவி சுமித் குர்ஜார் கொலை செய்யப்பட்டார். தமது  தவறை மறைக்க காவல்துறை யினர் இரண்டு சுமித்களும் குற்றவாளிகள்தான் என ஜோடித்தனர். இன்னொரு நிகழ்வில் விவேக் திவாரி என்பவர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார். இவர் குற்றமற்றவர் என்பது மட்டுமல்ல; ஆப்பிள் நிறுவனத்தில் பணி யாற்றிய அதிகாரி. இது கடும் எதிர்ப்பை விளைவித்தது. பின்னர் யோகி  அரசாங்கம் திவாரியின் குடும்பத்திற்கு நட்ட ஈடு தந்து அவரது மனைவிக்கு அரசுப் பணியும் அளித்து மக்களின் கோபத்தை தணித்தது.

இப்படி மானாவாரியாக என்கவுண்ட்டர்கள் நடந்தாலும் விகாஸ் துபேயின் பெயர் எங்குமே யோகி அரசாங்கத்தின் கண்களில் தெரியவே இல்லை என்பது எப்படி தற்செயலானதாக இருக்க இயலும்? துபேவுக்கு எதிராக 60 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கைகள் இருந்தன. கொள்ளை/ கொலை என பல குற்றங்கள் அடங்கும். உ.பி.யின் மோசமான குற்ற வாளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஆனால் அதில் துபேயின் பெயர்  இல்லை. துபேயின் காரில் இந்துத்துவா கருத்தை ஆதரிக்கும் அமைப்பின் பெயர் இருந்தது என தகவல்கள் கூறுகின்றன. சென்ற வெள்ளி (ஜூலை 3) இரவு காவல் துறையினர் துபேயை கைது செய்யச் சென்ற பொழுது அந்த  தகவல் முன்கூட்டியே துபேவுக்கு தெரிந்திருந்தது. அந்த பகுதி முழுதும் விளக்குகள் அணைக்கப்பட்டன. எனவே விகாஸ் துபே கும்பல் மிக எளிதாக காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்ப முடிந்தது.

இப்பொழுது துபே உட்பட முக்கிய 6 பேர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டு விட்டனர். சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விகாஸ் துபே ஒரு தனிப்பட்ட கும்பல் தலைவன் கிடையாது. துபேக்கள் இன்றைய அரசியல் சமூக சூழலால் உருவாகும் விளைவுகள். வித்தியாசமான அரசியல் கட்சி என பெருமை பேசும் பா.ஜ.க.வும் இத்தகைய சமூக விரோதிகளை உருவாக்கி  ஆதரவு தருகின்றது என்பது தெரிந்த உண்மை என்றாலும் விகாஸ் துபேயின் நிகழ்வு அதனை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. விகாஸ் துபேயின் என்கவுண்ட்டர் மூலம் பல ரகசியங்களும் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளன. 

தொகுப்பு : அ.அன்வர் உசேன்