tamilnadu

img

மன்னார் வளைகுடா தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம் - ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

மன்னார் வளைகுடாவில் உள்ள தீவுகள் கடல் அரிப்பால் வேகமாக சுருங்கி வருவதாகவும், இதை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், தீவுகள் கடலில் மூழ்கிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய அரசு கடந்த 1989-ஆம் ஆண்டு ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரை 350 கி.மீ. கடல்பரப்பில் 10,500 சதுர கி.மீ. பரப்பளவை மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிர்க்கோள காப்பகமாக அறிவித்தது. இப்பகுதியில், 4,223 கடல்வாழ் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் அழிந்து வரும் இனமான கடல் பசு, 117 வகை பவளப்பாறைகள் மற்றும் 14 வகை கடல் புற்கள் ஆகியவை அடங்கும். பாம்பனில் இருந்து தூத்துக்குடி வரை 140 கி.மீ. கடல்பரப்பில் 560 சதுர கி.மீ. பரப்பளவில்தான் பவளப்பாறைகள் அதிகம் காணப்படுகின்றன. 

இந்த பகுதியில் வான்தீவு, காசுவார் தீவு, காரைச்சல்லி தீவு, விலங்குசல்லி தீவு, முயல் தீவு உள்ளிட்ட 21 தீவுகளை உள்ளன. இதில், தூத்துக்குடி குழுவில் 4 தீவுகள், வேம்பார் குழுவில் 3 தீவுகள், கீழக்கரை மற்றும் மண்டபம் குழுவில் தலா 7 தீவுகள் அமைந்துள்ளன. பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் தூத்துக்குடி குழுவில் இருந்த விலங்குசல்லி தீவு, கீழக்கரை குழுவில் பூவரசன்பட்டி ஆகிய 2 குட்டி தீவுகள் கடலில் மூழ்கிவிட்டன. அதே போல், வான்தீவும் கடலில் மூழ்கும் அபாயம் உருவானது. 

கடந்த 1969-ஆம் ஆண்டு, மன்னார் வளைகுடாவில் உள்ள தீவுகளின் பரப்பளவு, வடிவம், தன்மை குறித்து கடைசியாக ஆய்வு செய்யப்பட்டது. இதை அடுத்து, 50 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகத்தின் நிதியுதவியுடன் தூத்துக்குடி சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர்கள் ஓராண்டாக இந்த ஆய்வை நடத்தி வருகின்றனர். 

இந்த ஆய்வில், மன்னார் வளைகுடாவில் தூத்துக்குடி குழுவில் உள்ள தீவுகள் கடந்த 50 ஆண்டுகளில் 71 சதவீதம் சுருங்கியுள்ளதாகவும், கீழக்கரை குழுவில் உள்ள தீவுகள் 43.49 சதவீதமும், வேம்பார் குழுவில் உள்ள தீவுகள் 36.21 சதவீதமும், மண்டபம் குழுவில் உள்ள தீவுகள் 21.84 சதவீதமும் நிலப்பரப்பில் குறைந்துள்ளதாகவும், விதிவிலக்காக மண்டபம் குழுவில் உள்ள முயல் தீவு, மனோலி தீவு, சிங்கில் தீவு உள்ளிட்ட தீவுகளின் நிலப்பரப்பு மட்டும் 10.4 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தூத்துக்குடி குழுவில் உள்ள அனைத்து தீவுகளும், கீழக்கரை குழுவில் உள்ள வாலிமுனை தீவு, முல்லி தீவு ஆகியவை கரையை நோக்கியும், மண்டபம் குழுவில் உள்ள முயல் தீவு, புள்ளிவாசல் தீவு, குருசடை தீவு ஆகியவை கடல் பகுதியை நோக்கியும் நகர்ந்து வருகின்றன. வேம்பார் குழுவில் உள்ள தீவுகளும், இதர தீவுகளும் தொடர்ந்து அதே நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

தீவுகளின் பரப்பளவு குறைந்து வருவதற்கு கடல் அரிப்புதான் முக்கிய காரணம் எனவும், கடல் அரிப்பு இதே நிலையில் இருந்தால் தூத்துக்குடி குழுவில் உள்ள காசுவார் மற்றும் காரைச்சல்லி தீவுகள் வரும் 2036-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக கடலில் மூழ்கிவிடும் எனவும் கூறப்படுகிறது. அதுபோல், வேம்பார் குழுவில் உள்ள உப்புத்தண்ணி, புலுவினிச் சல்லி மற்றும் நல்ல தண்ணி ஆகிய தீவுகள், வரும் 2064-2193 ஆண்டுக்குள்ளும், கீழக்கரை குழுவில் உள்ள ஆனையப்பர், வல்லிமுனை, பூவரசன்பட்டி, அப்பா, தலையாரி, வாழை மற்றும் முல்லி ஆகிய தீவுகள் வரும் 2032-2180 ஆண்டுக்குள்ளும், மண்டபம் குழுவில் உள்ள மனோலிபுட்டி, பூமரிச்சான், புள்ளிவாசல் ஆகிய தீவுகள் வரும் 2140-2525 ஆண்டுக்குள்ளும் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை சீற்றங்கள் பெரிய அளவில் தாக்காத வண்ணம் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு, இந்த தீவுகள் பாதுகாப்பு அரணாக அமைந்துள்ளன. கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலை தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் பெரிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மேலும், இந்த தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் மீன் வளம் அதிகம் இருப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரமாகவும் இவை அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.