நாட்டின் முதன்மையான ஹாக்கி தொடரான நேரு கோப்பை தொடரின் முக்கியமான ஆட்டத்தில் பஞ்சாப் காவல்துறை அணியும் - பஞ்சாப் நேஷனல் வங்கி அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. திங்களன்று தில்லி தேசிய மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணி வீரர்களுக்கு இடையே திடீரென மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. போட்டியை ரசித்த ரசிகர் ஒருவர் மோதல் சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளி யிட்டுள்ளார். அதில் சிவப்பு நிற ஜெர்சி அணிந்துள்ள பஞ்சாப் காவல்துறை அணியைச் சேர்ந்த வீரர்கள் ஹாக்கி மட்டையால் பஞ்சாப் நேஷனல் வங்கி அணி வீரர்களை ஓட ஓட ஆக்ரோஷமாக விரட்டி அடிக்க நேஷனல் வங்கி அணியைச் சேர்ந்த வீரர் ஒருவர் படுகாயமடைந்து துடித்தார். அதற்குப்பின் மோதலில் ஈடுபட்ட வீரர்கள் வெளியேற்றப்பட்டு, இரு அணிகளிலும் தலா 8 வீரர்களுடன் போட்டி தொடரப்பட்டது. இதில் பஞ்சாப் நேஷனல் வங்கி அணி 6-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
போட்டியின் முடிவு பிரச்சனையின்றி நிறைவு பெற்றாலும் ஹாக்கி இந்தியா நிர்வாகம் நடவடிக்கையில் களமிறங்கத் தயார் நிலையில் உள்ளது. இரு அணிகள் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நடவடிக்கையில் அதிகம் பாதிக்கப்படுவது பஞ்சாப் காவல்துறை அணி தான். ஏனென்றால் சமாதானம் செய்ய வந்த பஞ்சாப் நேஷனல் அணி வீரர்களையும் புரட்டியெடுத்ததால், பஞ்சாப் காவல்துறை அணிக்கு 4 ஆண்டுகளும், பதில் தாக்குதலில் ஈடுபட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அணிக்கு 2 ஆண்டுகளும் தடை விதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. போதாக்குறையாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரேந்தர் பத்ரா,”பொறுப்பில்லாத அணி மற்றும் கவனக்குறைவான நிர்வாகம் போன்றவற்றால் ஹாக்கி விளையாட்டின் நற்பெயரைக் கெட்டுவிட்டது. தவறு செய்த வீரர்கள் மீது ஹாக்கி இந்தியா அதிகபட்ச நட வடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கொதித்துள் ளார்.