tamilnadu

img

சேலம் உருக்காலை தனியார்மயம்...தமிழகத்தின் தொழில் அடையாளத்தை அழிக்க முயற்சிக்கும் மோடி அரசு

சேலம் உருக்காலை தனியார்மய நடவடிக்கைகளைக் கண்டித்து திமுக மக்களவை தலைவர்  டி.ஆர்.பாலு, நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் எழுப்பிய  வினாவிற்கு தமிழக மக்களின் உணர்வுகளை துச்சமென மதித்தும், சேலம் உருக்காலை தொழிலாளர்களின் உழைப்பையும், திறமையையும் இழிவுபடுத்தும் விதமாக, ஜனநாயக மாண்புகளை கடந்து உருக்குத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார். 

சுமார் ரூ. 69 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்ட பின்னணியில் செயில் நிறுவனமானது பொதுமக்கள் பணத்தை, வரி செலுத்துபவர்,   ஏழை எளிய மக்கள் பணத்தை சூறை யாடியுள்ளது என கடுமையான விமர்சனத்தை வைத்தார். மேலும் 11 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி பெருக்கத்தை செய்ய தவறியதும், அதற்கு காரணமான தவறான நிர்வாகம்,குழப்பம், தவறான செயல்கள், ஊழல் போன்றவற்றால் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். மேலும், சேலம் உருக்காலை உற்பத்தி மற்றும் செயல்பாட்டில் ஏமாற்றத்தை தந்துள்ளதாகவும் தன்னுடைய பங்களிப்பை செலுத்தாமல் செயில் நிறுவனத்தை கவலைக்கிடமாக்கியதற்கு பங்களித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

திட்ட அறிக்கை தயார் செய்து அதன் அடிப்படையில் திட்டப்பணிகள் துவங்கப்பட்டு உரிய அறிவுரைப்படிசெயல்வடிவம் கொண்டுவரப்பட்ட புதிய முதலீடுகள் எப்படி பொய்ப்பித்துப்போகும்.உருக்கு அத்தியாவசியப் பொருளாக உள்ள சூழ்நிலையில், அத்தியாவசிய தொழிலான கடுமையான சர்வதேச சந்தை போட்டியில்அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்திய  பொருளாதாரம் திணறி வருவதாக தெரிவித்தார். பெருமதிப்பிற்கும், மரியாதைக்குரிய உருக்குத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு ஒரு உருக்குத் தொழிலாளியின் மிக அடிப்படையான கேள்வி? உருக்கு அடிப்படை அத்தியாவசியப் பொருள் என தெரிந்தும், அதற்கு சர்வதேச சந்தையை இந்தியாவில் கடைவிரித்தது இந்த “நாடு நாடாய் ஓடி நாட்டை கெடுத்த மோடி அரசு தானே”? இறக்குமதியை, விலைக் கட்டுப்பாட்டை ஒழுங்குபடுத்தாமல் கூட்டுக் கொள்ளையடித்துவிட்டு செயில் நிறுவனத் தொழிலாளர்கள் மீது கொள்ளையர்கள் பட்டம்கட்ட ஆர்வம் காட்டுவது நீலிக்கண்ணீர்தானே? குறைந்தபட்ச இறக்குமதி விலை நிர்ணயம் செய்யாமல், காயத்திற்கு மருந்து பூசாமல், ரத்தம் வடிய வடிய வேடிக்கைப் பார்த்ததும் இப்பொழுது மக்களுக்கான அரசு என கூறிக்கொள்ளும் இந்த மாயாஜால மோடி அரசு தானே?
தேசிய உருக்குக் கொள்கை 2017-ஐ அறிவித்துவிட்டு தனியார் ஆலைகள், 2031-ஐ எதிர்நோக்கி வீறு நடைபோடும் வேளையில் பொன் முட்டையிடும் பொதுத் துறைகளை சந்தைக்கு அழைத்து வந்து ஏலம் போடும் சாதனை தான் உங்கள் சாதனையா?
2010 ஆம் ஆண்டு முதலீடுகள் செய்த தருணத்தில் இந்திய மக்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைத்துவிட்டதாக கருதும் மோடி அரசு, சிஏஜி அறிக்கை, தலைமை கணக்காயர் மற்றும் தணிக்கையாளர் அறிக்கையை கையில் வைத்துக்கொண்டு(சிஏஜி ரிப்போர்ட் – 2015)  அதில் கூறிய குறைபாடுகளைக் களையாமல், வேடிக்கைப் பார்த்தது மோடி அரசின் நிர்வாகம் தானே?

தணிக்கை அறிக்கையில் குறிப்பிட்ட குறைபாடுகளுக்குக் காரணமான உயர் அதிகாரிகளை தேடித்தேடி பதவி உயர்வு கொடுத்து  உச்சபட்ச கொள்ளைக்கு அடித்தளமிட்டதும் நீங்கள் தானே, ஒரு ஆலையில் குற்றம் புரிந்த நபருக்கு வேறு ஆலைக்கு பதவி உயர்வுடன் பணிமாற்றம் செய்ததும் நீங்கள் தானே? இதற்கு முன் நிர்வாகச் சீர்கேடு நடந்திருக்கிறது என்றால் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் என்ன செய்தது இந்த அரசு? தொழில்கள் எல்லாம் நலிவடைந்த பின்னர் தனியார்மயம் எனும் நஞ்சை பாய்ச்ச நல்ல நேரம் பார்க்கும் மாண்பற்ற அரசு தான் இந்த மோடி அரசு. மேலும், செயில் நிறுவன ஊழியர்களையும், நிறுவனத்தையும், மாட்சிப் பொருந்திய மக்களவையில் நெறியற்ற முறையில் பேசிய மத்திய உருக்குத்துறை அமைச்சர் அவர்களை, சேலம் உருக்காலை சிஐடியு மற்றும் இந்திய உருக்குத் தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கின்றது. கடந்த மூன்றரை ஆண்டு கால போராட்டங்கள் மற்றும் தியாகங்களை கொச்சைப்படுத்தும் விதமாக  மத்திய அரசின் பொதுத்துறை விரோத போக்கினை தொழிலாளர்கள், பொதுமக்கள் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் தகர்த்தெறிவோம். சேலம் உருக்காலை தனியார்மயம் என்பதுதமிழகத்தின் தொழில் அடையாளத்தை அழிக்கும் முயற்சியாகும். தனியார்மயம் என்பது மக்களின் உரிமைப் பறிப்பாகவே கருத்தில் கொள்ளப்படும். அதை தடுத்துநிறுத்த சிஐடியு அனைத்துவித நடவடிக்கை களையும் மேற்கொள்ளும்.

- கே.பி.சுரேஷ் குமார்
பொதுச்செயலாளர், சிஐடியு, சேலம் உருக்காலை