சேலத்தில் பல தனியார் பள்ளிகளில் ஒதுக்கீடு தொடர்பாக பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள ஆன்லைன் தளம் முடக்கப்பட்டு உள்ளதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
தமிழக அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை,எளிய மாணவ மாணவியர்களுக்கு 25 சதவிகித ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். ஆனால் தமிழகத்தில் பல மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுவதில்லை. குறிப்பாக நடப்பு கல்வி ஆண்டில் சேலம் மாநகரில் உள்ள முக்கிய தனியார் பள்ளிகளில் இந்த ஒதுக்கீடு தொடர்பாக பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள ஆன்லைன் தளம் முடக்கப்பட்டு உள்ளது. இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், கடந்த பத்து நாட்களுக்கு முன்பு, சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்து இருந்தனர்.
ஆனால் இது குறித்து மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திட முயற்சித்தனர். அப்போது, அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, கட்டாய கல்வி உரிமை சட்டத்தை தனியார் பள்ளிகள் நிறைவேற்றிட பெற்றோருடன் சென்று மனு அளித்தனர்.