சேலம்:
சேலம் வியாபாரியை அடித்துக்கொன்ற காவல்துறையின் செயலை கண்டித்தும், மறைந்த வியாபாரியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மனித உரிமை பாதுகாப்புக்குழு நேரில் விசாரணை மேற்கொண்டது.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன், தனது நண்பர்களுடன் வெள்ளிமலை சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, பாப்பநாயக்கன்பட்டி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி தலைமையிலான காவல்துறையினர், முருகேசன் மற்றும் அவரது நண்பர்களை தடுத்து நிறுத்தி நடுரோட்டில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், தலையில் பலத்த காயமடைந்த முருகேசன் சாலையில் மயங்கி விழுந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தை கண்டித்தும், முருகேசன் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்; முருகேசன் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்; இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கட்சியின் மனித உரிமை பாதுகாப்புக் குழுவின் சார்பில் முருகேசனின் குடும்பத்தை நேரில் சந்தித்து நடந்தவை குறித்து கேட்டறிந்தனர். இதில், முருகேசனின் சகோதரி கணவர் நடந்தவைகள் குறித்து விளக்கமாக தெரிவித்தார். முருகேசனின் மனைவி அன்னக்கிளியிடம் தொலைபேசி வாயிலாக பேசிய கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, உரிய இழப்பீடும், சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்து ஆறுதல் கூறினார்.
இதைத்தொடர்ந்து கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.குணசேகரன், ஏ.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினரும் மனித உரிமை பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான வழக்கறிஞர் பொன்.ரமணி, பெத்த நாயக்கன்பாளையம் தாலுகாச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் பகத்சிங், முன்னாள் தலைவர் வழக்கறிஞர் விஜய் ஆகியோர் கலந்து கொண்டு குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.