tamilnadu

img

சேலம் உருக்காலையில் ஆக்சிஜன் வசதியுடன் கோவிட் சிறப்பு சிகிச்சை மையம்...

சேலம்:
சேலம் உருக்காலை வளாகத்தில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் சிறப்பு சிகிச்சை மையத்தை மே 20 வியாழனன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மே 24 வரை  மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளான 8,768 நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு 7,432 நபர்கள் பூரண குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சித்த மருத்துவத் துறையின் சார்பில் சேலம் - 8 அரசு மகளிர்கலைக் கல்லூரி விடுதியில் 100 படுக்கை சித்த மருத்துவ கோவிட் கண்கா ணிப்பு மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தில் கூடுதலாக 100 படுக்கைகள் அமைக்கப்பட்டு முதலமைச்சரால் வியாழனன்று துவக்கப்பட்டது. முதன் முறையாக தடையின்றி ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இடத்திலேயே 500 படுக்கைவசதிகள் கொண்ட சிறப்பு கொரோனா சிகிச்சை மையம், உயிர் காக்கும் தீவிர சிகிச்சை பிரிவு, ஆய்வகம், மருந்தகம், தகுதி வாய்ந்த சிறப்பு மருத்துவர்கள், செவிலிய ர்கள், நவீன சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து ஆய்வு செய்து மேலும் இம்மையத்தை விரிவாக்கம் செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக 500 ஆக்சிஜன் வசதியுடைய படுக்கைகளை ஏற்படுத்தி இந்தியாவிலேயே முதன்மையான சிறப்பு சிகிச்சை மையமாக மாற்ற வேண்டுமெனவும், 10 நாட்களுக்குள் இப்பணிகளை முடித்திடவும் உத்தரவிட்டுள்ளார்.இந்த நிகழ்வில் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்மா. சுப்பிரமணியன், மின்சாரத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர்  எஸ். கார்மேகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். 

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு வழங்கப்பட்டு வரும் 24 மணிநேர அவசர மருத்துவ சிகிச்சைகள் குறித்தும், மருத்துவ வசதிகள் குறித்தும், கொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்தும், பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.மேலும் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை பார்வையிட்டார். அங்கு பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.