tamilnadu

img

குடும்பத்துடன் தொழிலாளர் பேரணி- ஆர்ப்பாட்டம்....சேலம் உருக்காலை தனியார்மயத்துக்கு கண்டனம்...

சேலம்:
சேலம் உருக்காலையை மத்திய பாஜக அரசு தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து சனிக்கிழமையன்று உருக்காலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங்களை தொடர்ச்சியாக தனியாரிடம் விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக,  தமிழகத்தில் நவரத்தின அந்தஸ்தில் உள்ள சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் வகையில் சர்வதேச அளவிலான டெண்டருக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று டெண்டர் நடைபெறும் என அறிவித்துள்ளது. ஏற்கனவே, சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரைவார்க்கக்கூடாது என வலியுறுத்தி கடந்த 
சில ஆண்டுகளாகவே சேலம் உருக்காலைபாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழுவின்சார்பில் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், வேலை நிறுத்தங்கள் உள்ளிட்ட பலகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய எதிர்ப்புகளையும் அலட்சியப்படுத்தி மத்திய பாஜக அரசு சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரைவார்க்கும் வகையில் டெண்டருக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து சனிக்கிழமையன்று சேலம் இரும்பாலை அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சேலம் உருக்காலை மோகன் நகர்இரண்டாம் கேட் முதல் மூன்றாம் கேட் வரைதொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் பேரணியாக சென்று ஆவேசமிகு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்பேரணியில்  திமுக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன்,  சேலம் வடக்கு சட்டமன்ற  உறுப்பினர் ராஜேந்திரன், சிஐடியு சேலம் மாவட்ட செயலாளர் டி. உதயகுமார், மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி,  சேலம் உருக்காலை பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு செயலாளர் சுரேஷ்குமார், இணை ஒருங்கிணைப்பாளர் பி.பன்னீர்செல்வம், ஐஎன்டியுசி சார்பில் தேவராஜன், எல்டி எப்சார்பில் பெருமாள், அண்ணா தொழிற்சங்கம் சார்பில் முருகேசன், பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் வெங்கடாச்சலம், சேலம் உருக்காலைக்கு நிலம் கொடுத்த சங்கத்தின் சார்பில் நாகராஜன் மற்றும் எஸ்சி எஸ்டி, ஓபிசிசங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.