சேலம்:
சேலத்தில் விளைநிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு இழப்பீடு வழங்க மறுத்ததால் விவசாயி தற்கொலை செய்துகொண் டார். இதனால் ஆவேசமடைந்த விவ சாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.சத்தீஸ்கர் மாநிலம், ராய்கரிலிருந்து கரூர் மாவட்டம் புகளூர் வரை 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொண்டு வருவதற்கு ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை மத்திய மின் தொகுப்பு கழகம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக சத்தீஸ்கரில் இருந்து தமிழகத்தில் 1,843 கி.மீ தூரத்திற்கு 5,530 உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதேநேரம், இத்திட்டத்தை விளைநிலங்கள் வழியாக பவர்கிரீட் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம், நங்கவள்ளி பகுதியில் உள்ள பள்ளகனூர் கிராமத்தை சேர்ந்த வெள்ளபையன் (எ) பெருமாள் விளை நிலத்தின் வழியாக உயர் அழுத்த மின் கோபுர கம்பிகள் செல்வதற்காக மரங்களை சங்ககிரி பவர்கிரிட் கிளையில் பணியாற்றும் அதிகாரிகள், குறியீடு செய்துள்ளனர்.
இழப்பீடு கேட்ட விவசாயிக்கு மிரட்டல்
அப்போது, நிலத்தின் உரிமையாளரான விவசாயி பெருமாள், இழப்பீடே வழங்காமல் மரத்தை வெட்டுகிறீர்களே இது ஞாயமா? என்று கேட்டுள்ளார். அதற்கு, வேலையை தடுத்தால் காவல்துறையை மூலம் சிறையில் அடைத்து விடுவோம் என்று பவர்கிரிட் அதிகாரிகளும், வருவாய் துறையினரும் மிரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்து பெருமாள் கடந்த டிசம்பர் 14ஆம் தேதியன்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு அந்த மரத்தடியிலேயே படுத்துவிட்டார். இதையறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் செவ்வாயன்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவறிந்த ஜலகண்டாபுரம் போலீசார் கடன் பிரச்சனையால் தான் பெருமாள் தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினரிடம் மிரட்டி எழுதி வாங்கியுள்ளனர்.
அதிகாரிகள் மீது வழக்கு பதிந்திடுக!
இந்நிலையில் பெருமாள் கடன் பிரச்சனையால்தான் தற்கொலை செய்து கொண்டதாக மிரட்டி எழுதி வாங்கிய போலீசார், தற்கொலைக்கு தூண்டிய பவர்கிரீட் அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயி பெருமாளின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அதுவரை விவசாயி பெருமாள் உடலை வாங்க முடியாது எனக்கூறி புதனன்று விவசாயியின் உறவினர்களும், விவசாய கூட்டமைப்பினரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த முற்றுகை போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் இராமமூர்த்தி, துணைத்தலைவர் பி.தங்கவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குழந்தைவேலு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் கே.ராஜாத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஈசன், மாநிலத் தலைவர் சண்முகம், ஊடகப்பிரிவு செயலாளர் பவானி கவின், தூரன் நம்பி மற்றும் உயிரிழந்த விவசாயி பெருமாளின் மனைவி அன்னக்கிளி, மகன் சக்திவேல், மகள் நதியா உள்ளிட்ட உறவினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.