சேலம்,ஏப்.29- சேலத்தில் தலித் பெண் காவல் நிலையத்தில் மரணமடைந்ததது தொடர்பாக உரிய நீதி விசாரணை நடத்திட வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சேலம் மாநகர காவல்ஆணையாளருக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட செயலாளர் வி.இளங்கோ அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது , சேலம் பட்டை கோவில் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஒரு மாதமாக மேற்கண்ட பகுதியில் கடைகள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில், இப்பகுதியில் சாலையோரத்தில் எலுமிச்சை பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வரும் வேலுமணி என்பவர் , அங்கு கடை வைக்க தடை செய்யப்பட்டதால் தன் கடையிலுள்ள எலுமிச்சை பழங்களை வீட்டுக்கு கொண்டு செல்ல எண்ணி கடந்த ஏப்.27 ஆம் தேதியன்று அதிகாலை அப்பகுதிக்கு வந்து எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொண்டுள்ளார். அப்போது அவ்வழியில் ரோந்துக்கு வந்த காவலர் அவரை கடை வைத்ததாக கருதி , காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர் .
இதைக் கேள்விப்பட்ட வேலுமணியின் தாயார் பாலாமணி என்பவர் காவல் நிலையத்திற்கு வந்து தனது மகனை அடிக்க வேண்டாம். தயவு செய்து விட்டு விடுங்கள் என்று காவல் நிலையத்திலிருந்த ஆய்வாளர் உட்பட அனைவரிடமும் கெஞ்சியுள்ளார் . அப்போது வேலுமணியை அடிக்காமல் விட வேண்டுமெனில் , அனைவரது காலிலும் விழ வேண்டும் என்று வேலுமணியின் தாயார் பாலாமணியை காவல் துறை அதிகாரிகள் மிரட்டியுள்ளனர். இதனால் தனது மகனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலும் , காவலர்கள் மிரட்டியதாலும் பாலாமணி, அங்கிருந்த காவலர்கள் ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து வணங்கியுள்ளார் . அவ்வாறு செய்து கொண்டிருக்கும் போது பாலாமணி மயக்கமடைந்து கீழே விழுந்து காவல் நிலையத்திலேயே மரணமடைந்துள்ளார் என தெரிய வருகிறது . ஆகவே, பாலாமணியும் , அவரது மகன் வேலுமணியும் தலித் ஆதிதிராவிடர் சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு , தாக்குதல் நடத்தியும் , காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும் நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர் . இந்த நடவடிக்கையானது , சட்டப்படி மிகப் பெரிய குற்றமாகும் .
ஊரடங்கு காலத்தில் , பொது மக்களின் உணர்வுகளை புரிந்து மதித்து நடந்திட வேண்டும் என்றும் ஊரடங்கை மீறுகிறவர்கள் மீது வழக்கு பதிய வேண்டுமே தவிர , துன்புறுத்தக் கூடாது என்று உயர் நீதிமன்றமும் , காவல் துறை தலைவரும் உத்தரவுகள் வெளியிட்ட பிறகும் சேலத்தில் வன்கொடுமையும் காவல் நிலைய மரணமும் ஏற்பட்டுள்ளது . இதற்கு காரணமான காவலர்களின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்க வேண்டிய ஒன்றாகும் . ஆகவே , பாலாமணி இறப்பிற்கு காவல் துறை பொறுப்பேற்க வேண்டும். பாலாமணி இறப்பிற்கு காரணமான காவல் துறை அதிகாரிகளிடம் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி , SC / ST சட்டப்படி நடவடிக்கை எடுத்திட வேண்டும். பாதிக்கப்பட்ட பாலாமணி குடும்பத்தினருக்கு இழப்பீடு கிடைத்திடவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநகர காவல் ஆணையருக்கு அனுப்பியுள்ள புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.