சேலம், மே 6-சேலத்தில் ரயிலில் தொடர்ந்து நடைபெறும் குற்றச்செயல்கள் குறித்து அஸ்தம்பட்டியில் உள்ள பயணியர் மாளிகையில் ரயில்வே காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கடந்த சில தினங்களாகவே ஈரோட்டில் இருந்து சேலம் வரும் ரயிலில் பயணிகளிடமிருந்து தங்க நகைகள் மற்றும் பொருட்களை பறித்து செல்வதாக புகார்கள் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் ரயில்வே துறை காவலர்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்ட போது வடமாநிலத்தவர்கள் இந்தகொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் ஈரோட்டில் இருந்துசேலம் வரும் அனைத்து ரயில்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திங்களன்று அதிகாலையில் கொள்ளை நடந்த பகுதிகளில் ரயில்வே காவல் துறை அதிகாரி சைலேந்திரபாபு அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்துரயில் கொள்ளை குறித்து சேலத்தில் அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகையில் ரயில்வே காவல்துறை சைலேந்திரபாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதனையடுத்து ரயில்வேகாவல்துறை டிஐஜி பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரயில் கொள்ளை குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. டிஜிபி நேரடி பார்வையில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அச்சப்பட தேவையில்லை. சந்தேகப்படும்படியான நபர் இருந்தால் உடனடியாக தகவல்தரபயணிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு, பழைய குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.சேலம் ரயில் கொள்ளை குறித்து 5 தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூடிய விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள். தொடர் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படும். கொள்ளையர்கள் ஒரு காவலர்மீது கல் வீசி தப்பி சென்றுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்ட 9 பேர் புகார் கொடுத்துள்ளனர். ரயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தார்.