tamilnadu

கனமழையால் காவிரியில்  3 லட்சம் கன அடி நீர் திறப்பு

 மேட்டூர், ஆக. 11- கர்நாடகாவில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரியில் தமிழகத்துக்கு 3 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கேரள, கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கர்நாடகத்தில் கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்திலும், கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணை நிரம்பியுள்ளதால் தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  ஞாயிறு பிற்பகல் நிலவரப்படி கர்நாடக அணைகளில் இருந்து 3 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.  ஒகேனக்கல் காவிரியில் விநாடிக்கு ஒன்றரை லட்சம் கனஅடி நீர் வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.  ஒரே நாளில் 10 அடி உயர்வு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் அணை வேகமாக நிரம்பி வருகிறது.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும், நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாலும் காவிரி டெல்டா பாசனத்துக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்ற நம்பிக்கை விவசாயிகளுக்கு ஏற்பட்டு உள்ளது. சனிக்கிழமை காலை அணையில் நீர் இருப்பு 22 டிஎம்சி.யாக இருந்தது. ஞாயிறன்று 30.59 டிஎம்சி.,யாக அதிகரித்துள் ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.