tamilnadu

img

பள்ளி வாகனம் மோதி சிறுமி உயிரிழப்பு

சேலம்,

சேலத்தில் பள்ளி வாகனம் மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் சூரமங்கலம் அசாத் நகர் பகுதியில் சையது ரபிக் ஜக்ரியா என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் இளையமகள் ஆயிஷா சுஹைனா, அதே பகுதியில் இயங்கி வரும் தாரூஸ் சலாம் என்ற பள்ளியில் பயின்று வருகிறார். இந்நிலையில் சிறுமி ஆயிஷா வழக்கம் போல் இன்று காலை பள்ளிக்கு சென்றார். பள்ளி நுழைவு வாயிலில் இருந்து மாணவி ஆயிஷா வகுப்பறை மைதானத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பள்ளியின் பேருந்து பின்நோக்கி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சிறுமி ஆயிஷா மீது மோதியது. இதில் பேருந்தின் பின்புற சக்கரத்தில் சிக்கி சிறுமி உடல் நசுங்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ஓட்டுநரிடமும் பள்ளி நிர்வாகத்திடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே சிறுமியின் உயிரிழப்புக்கு காரணம் என்று சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.