tamilnadu

img

குண்டர் கும்பல் வெறியாட்டங்களுக்கு எதிராகவும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும் சட்டங்கள் நிறைவேற்றம்

குண்டர் கும்பல்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு கொலை உட்பட வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவதற்கு எதிராகவும், ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும் திங்கள் அன்று ராஜஸ்தான் சட்டமன்றம் இரு சட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது.

ஆணவக் கொலைகளைப் புரிவோருக்கு மரண தண்டனை விதித்தும், குண்டர் கும்பல்கள் சட்டங்களைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு கொலை மற்றும் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவோருக்கு ஆயுள்  தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்தும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நாட்டில் மணிப்பூர் மாநிலத்திற்கு அடுத்ததாக, ராஜஸ்தான் மாநிலம் இரண்டாவதாக இவ்வாறு குண்டர் கும்பல்களின் கொலை மற்றும் வன்முறை வெறியாட்டங்களுக்கு எதிராகச் சட்டம் நிறைவேற்றியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 2017 ஏப்ரலுக்குப்பின் குண்டர் கும்பல்களின் வன்முறை வெறியாட்டங்கள் பல நடந்துள்ளன. பசுப் பாதுகாப்புக் குழு என்ற குண்டர் கும்பலால் ஹரியானாவைச் சேர்ந்த பால் வியாபாரம் செய்யும் பெஹ்லுகான் என்பவர் ஜெய்பூர் – தில்லி தேசிய நெடுஞ்சாலையில் கொல்லப்பட்டார்.  

குண்டர் கும்பல் வன்முறை வெறியாட்டங்களுக்கு எதிரான சட்டமுன்வடிவு ராஜஸ்தான் சட்டமன்றத்தில் ஜூலை 30 அன்று அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் பாஜகவினரின் எதிர்ப்புக்கிடையே  குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் இந்தச் சட்டத்தின்கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் நிலையில் தனியே ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார். அவர் குண்டல் கும்பல்களின் வன்முறை வெறியாட்டங்களைத் தடுத்திட உரிய நடவடிக்கைகளை எடுத்திடுவார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண முகாம்கள் அமைத்து அவற்றையும் நிர்வகிப்பார். குண்டர் கும்பல் வன்முறை வெறியாட்டங்கள் எவை எவை என்பது குறித்தும் இச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. அதாவது எவரொருவரும் மதத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ, பாலினத்தின் பெயராலோ அல்லது பிறந்த இடத்தின் பெயராலோ, மொழியின் பெயராலோ, உணவுப் பழக்கவழக்கங்களின் பெயராலோ அல்லது அரசியல் சார்பு பெயராலோ கும்பல் வன்முறைகளில் ஈடுபடுவது என்று வரையறுத்திருக்கிறது.

அதேபோன்று ஆணவக் கொலைக்கு எதிராகவும் தனி சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்கீழ் திருமணம் செய்துகொண்டபின் திருமணம் செய்துகொண்டவர்களில் ஆணோ அல்லது பெண்ணோ சாதி, இனம் அல்லது குடும்பத்திற்கு அகவுரவத்தைக் கொண்டுவந்ததாகக் கூறி கொல்லப்பட்டால் அவ்வாறு கொலை செய்தவர்களுக்கு எதிராக இச்சட்டம் பாயும்.

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கேலாத் (Ashok Gehlot) 2019 ஜூலை 16 அன்று சட்டமன்றத்தில் இவ்விரண்டு கொடூரமான குற்றங்களுக்கும் எதிராக தனியே சட்டம் இயற்றப்படும் என்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்ற சமயத்தில் அறிவித்திருந்தார்.

(ந.நி.)