அனைத்து தேசிய மொழிகளையும் சமமாக அங்கீகரிப்பதற்கான போராட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வோம் : சென்னை மாநாடு தீர்மானம்
சென்னை, நவ.5- இந்தியாவின் பல்வேறு தேசிய இனங்கள் மீது இந்தி மொழியை கட்டாயமாகத் திணிக்கும் பாஜக அரசின் முயற்சிகளை வன்மையாக கண்டிப்பதோடு, அனைத்து தேசிய மொழிகளையும் சமமாக அங்கீகரிப்ப தற்கான போராட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வோம் என்று சென்னை யில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் மாநில மாநாடு அழைப்பு விடுத்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் நவம்பர் 5 செவ்வாயன்று சென்னை, காமராஜர் அரங்கில் “தாய் மொழி பாதுகாப்பு - இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு” எழுச்சியுடன் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையேற்றார். மாநாட்டில் கேரள இடது ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளரும், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான ஏ. விஜயராகவன், தெலுங்கானா மாநிலச் செயலாளர் டி. வீரபத்ரம், கர்நாடகா மாநில செயற்குழு உறுப்பினர் டி. சுரேந்திர ராவ், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மா. ராசேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினருமான கே. பாலபாரதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர்.
மாநாட்டில் கட்சியின் மாநிலக்குழு உறுப் பினரும், சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளருமான சு. வெங்கடேசன் எம்.பி., தீர்மானத்தை முன்மொழிந்தார். நிகழ்ச்சி களை பேராசிரியர் அருணன் ஒருங்கிணைத் தார். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், ஏ.கே.பத்ம நாபன், பி.சம்பத் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் அ. பாக்கியம், வரவேற்புரை யாற்ற, வடசென்னை மாவட்டச் செயலாளர் எல். சுந்தர்ராஜன் நன்றி கூறினார். மாநாடு துவங்குவதற்கு முன்பு ஓராயிரம் குயில்கள் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
தீர்மானம்
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: இந்திய நாடு பல தேசிய இனங்களைக் கொண்டது. இதை அரசியல் சட்டமும் அங்கீகரித்துள்ளது. அதனடிப்படையிலேயே அரசியல் சட்டத்தின் முதல் பிரிவு இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று வரையறுத்திருக்கிறது. இந்த வரை யறுப்பு இந்தியாவின் பன்முகத் தன்மையை அங்கீகரிக்கிறது. எனவேதான், வேற்றுமை யில் ஒற்றுமை என்பது நம் நாட்டின் பெருமை மிகு அடையாளமாக போற்றப்படுகிறது. நாட்டின் விடுதலைக்குப் பின்னர் எண்ணற்ற போராட்டங்களுக்குப் பிறகு மொழிவழி அடிப்படையிலான மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், இந்தியாவின் மொழிப் பிரச்சனைக்கு முறையான தீர்வு காணப்படவில்லை. பல மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட இந்திய நாட்டில் இந்தி மொழியை மத்திய ஆட்சி மொழியாக அறி வித்தது மட்டுமின்றி அம்மொழியை அனைத்து மாநிலங்களிலும் வலுக்கட்டாய மாகத் திணிக்கும் முயற்சிகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவத்தை யும் மொழிவழியான மாநிலங்களையும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரம் அதன் ஆரம்ப காலம் தொட்டு எதிர்த்து வருவதை தனது தத்து வார்த்த நிலைப்பாடாக கொண்டுள்ளது. அதனடிப்படையிலேயே “ஒரே நாடு, ஒரே மொழி” என்று இந்தியை வலிந்து திணிப்பதுடன்,சமூகத்தை சமஸ்கிருதமயமாக் கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தி மொழி வளர்ச்சிக்கு பலநூறு கோடி ரூபாய்களை வாரி வழங்கும் மத்திய அரசு, இதர மொழிகளின் வளர்ச்சிப் பற்றி எள்ளளவும் கவலைப்படவில்லை.
சொந்த விருப்பத்தின் அடிப்ப டையில் எவர் ஒருவரும் இந்தி உட் பட எந்த மொழியையும் கற்பது அவ ரது உரிமையாகும். ஆனால், இதர மொழி பேசும் மக்கள் மீது கட்டாய மாக இந்தியை திணிப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. மத்திய அரசு அண்மையில் வெளியிட் டுள்ள தேசிய வரைவுக் கல்விக் கொள்கையின் மூலம் கொல்லைப் புற வழியாக இந்தி திணிக்கப்படு கிறது. ஒருபுறம், இந்தியை கட்டாய மாக திணிப்பதும், இன்னொரு புறம் அரசியல் சட்டம் 8வது அட்ட வணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளையும் புறக்கணிப்ப தும், கூட்டாட்சித் தத்துவத்தை சிதைப்பதாகும் என இம்மாநாடு சுட்டிக்காட்ட விரும்புகிறது. தாய்மொழி காப்பும், வளர்ப்பும் ஒரு மனிதனின் பிறப்புரிமை. பயிற்று மொழியாகவும், அந்தந்த மாநிலத்தில் அலுவல் மொழியாக வும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அந்தந்த மாநி லத்தின் தாய்மொழியை அரி யணையேற்றுவதும், அரசியல் சாசனத்தின் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் சமத் துவ அங்கீகாரம் வழங்குவதுமே இந்தியாவின் பன்முகத் தன்மை யையும், ஒற்றுமையையும் பாது காத்திட உதவி செய்யும் என இம் மாநாடு வற்புறுத்துகிறது.
கோரிக்கைகள்
இந்த சீரிய நோக்கத்தை நிறை வேற்றிட கீழ்க்கண்ட கோரிக்கை களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்மாநிலங்களின் மாநாடு நாட்டு நலனிலிருந்தும், ஒற்றுமைக்கான அக்கறையிலி ருந்தும் முன்வைக்கிறது:
1. தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்டு எந்தவொரு வகையிலும் மாநிலங்களின் மீது இந்தியைத் திணிப்பதை இந்த மாநாடு கண்டிக் கிறது. அதேசமயம் எந்தவொரு மொழியையும் யாரும் கற்பதற்கு எவ்விதத் தடையும் இருக்கக் கூடாது என்பதையும் இம்மாநாடு உறுதிபட தெரிவிக்கிறது.
2. மத்திய ஆட்சி நிர்வாகத் தில் 8வது அட்டவணையில் உள்ள மொழிகள் அனைத்திற்கும் சம மான வாய்ப்பும், வளர்ச்சிக்கான நிதியும் வழங்குவதை மத்திய அரசு உத்தரவாதப்படுத்திட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
3. மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளிலேயே அனை த்து நிலைக் கல்வியையும் கற்ப தற்கும், அலுவல் மொழி, நீதிமன்ற மொழியாக அந்தந்த மாநில மொழிகளே விளங்குவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்; அவசர கால நிலைக்கு முன்பாக இருந்ததைப் போன்று கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டுமென கோருகிறது.
4. மாநிலத்திலுள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும் அந்தந்த மாநில மொழிகள் பயன்படுத்தப் படுவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.
5. மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வு களும் அரசியல் சட்டத்தின் எட்டா வது அட்டவணையிலுள்ள அனைத்து மொழிகளிலும் நடத்தப் பட வேண்டும்.
6. நாடாளுமன்றம் மற்றும் மத்திய அரசு நிர்வாகத்தில் அனைத்து மொழிகளுக்கும் சமத்து வம் என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்தி மொழி மட்டுமே ஆட்சி மொழி என்பது கைவிடப்பட வேண்டும். இதற்கு ஏதுவாக அர சியல் சட்டத்தின் 17வது அட்ட வணையில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
7. நாடாளுமன்ற உறுப்பி னர்கள் அவரவர்களின் தாய் மொழி யில் பேசுவதற்கான உரிமையும், அதேசமயம் அனைத்து மொழிகளி லும் மொழிபெயர்க்கவும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
8. அனைத்து மத்திய சட்டங் கள், அரசாங்க உத்தரவுகள் மற்றும் தீர்மானங்கள் அனைத்து தேசிய மொழிகளிலும் கிடைப்பதை உத்தர வாதப்படுத்த வேண்டும்.
இந்தியாவின் பன்முகத் தன்மையை கணக்கில் கொள்ளா மல் இந்தி மொழியை பல்வேறு தேசிய இனங்களின் மீதும் கட்டா யமாகத் திணிக்கும் பாஜகவின் முயற்சிகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, அனைத்து தேசிய மொழிகளையும் சமமாக அங்கீகரிப்பதற்கான போராட் டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்ல முன்வருமாறு அனைத்து ஜனநாயக சக்திகளையும் இம் மாநாடு அறைகூவி அழைக்கிறது.
சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் தலைவர்கள் (இடமிருந்து) பேரா. அருணன், சு.வெங்கடேசன் எம்.பி., அ.பாக்கியம், எல்.சுந்தரராஜன், பி.சம்பத், டி.சுரேந்திரராவ், டி.வீரபத்ரம், ஏ.விஜயராகவன், கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், பேரா.மா.ராசேந்திரன், கே.பாலபாரதி ஆகியோர்.