முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி
திண்டுக்கல்,ஆக.06- தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தொடரும். அதில் மாற்றமில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில் கொரோனா தடுப்புப் பணி, வளர்ச்சிப் பணி குறித்து வியாழனன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தினார். இக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் மு.விஜயலெட்சுமி மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பல்வேறு துறைகள் சார்பில் 3,530 பேருக்கு 2 கோடியே 96 லட்சத்து 87 ஆயிரத்து 275 ரூபாய் மதிப்பி லான நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். 8 கோடியே 88 லட்ச ரூபாய் மதிப்பிலான பல்வேறு கட்டிடங்கள், தடுப்பணைகள், மருந்தகங்கள், மாணவர் விடுதிகளை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியதாவது:
தமிழகத்தில் 28 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகம். தமிழகத்தில் இதுவரை 2.73 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்ட றியப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை கண்டிப்பாக பின்பற்றப் படும். அதில் மாற்றமில்லை. இ-பாஸ் நடை முறையை எளிமைப்படுத்த மாவட்டங்களில் கூடுதலாக ஒரு குழு என 2 குழு அமைக்கப் பட்டுள்ளது என்றார். எஸ்.வி.சேகர் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார். வழக்கு என்று வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார். எங்களுக்கு இந்தி தெரி யும் என எஸ்.வி.சேகருக்கு எப்படி தெரியும். அவர் முதலில் எந்த கட்சியில் உள்ளார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். நயினார் நாகேந்திரன் அதிமுகவிற்கு மீண்டும் வந்தால் சேர்த்துக்கொள்ளப்படுவார். தமிழ கத்தில் இ-பாஸ் உடனுக்குடன் வழங்க நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதால் கடந்த 4 மாதமாக அப்பகுதி மக்கள் வாழ்வாதா ரத்தை இழந்துள்ளனர் என்ற கேள்விக்கு பதில் கூறுகையில், உலகம் முழுவதும் வைரஸ் தொற்று காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். படிப்படியாகத்தான் சரியாகும். அனைத்து மக்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார். உலக முதலீட்டாளர் மாநாடு ஒப்பந்தம் மூலமாக 400 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் தொழில் தொடங்கப்பட உள்ளது. 3 நிறுவனங்கள் 300 கோடியில் திண்டுக் கல்லில் தொழில் தொடங்க உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. திண்டுக்கல் மக்களின் நீண்டநாள் கனவான மருத்து வக் கல்லூரி விரைவில் அமைய உள்ளது. ரூ.327 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மருத்துவக் கல்லூரிக்கு என்னால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது என்று முதல்வர் கூறினார்.
புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் கொரோனா தடுப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர். பி. உதயகுமார், மதுரை மாவட்ட ஆட்சியர் டி. ஜி. வினய் ஆகியோர் கலந்துகொண்டனர். மதுரை மாவட்டத்தில் நடைபெறும் கொரோனா தடுப்புப் பணிகளை பார்வை யிட்டு ஆய்வு செய்த தமிழக முதல்வர் , மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற விழாவில் ரூ.21.57 கோடி மதிப்பில் 32 நிறைவு பெற்ற திட்டங்களை துவக்கி வைத்தார். கல்வித்துறை மற்றும் வேலை வாய்ப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை களின் சார்பில் ரூ.304.55 கோடி மதிப்பிலான 31 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மதுரையில் முதல்வர் பேசுகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் நடப்பதால் தான் மதுரையில் கொரோனா பாதிப்பு இப்போது குறைந்து வருகிறது. உலக சுகாதார அமைப்பு, ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதல்களின்படி கொரோனா பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அரசின் தடுப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. மதுரையில் ரூ.25 கோடியில் புற்றுநோய் சிகிச்சை மையம் உருவாக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று தெரிவித்தார். முன்னதாக மதுரை மாவட்டம் வட பழஞ்சியில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு வசதிகளுடன் கூடிய 900 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை நல மையத்தை முதல்வர் துவக்கி வைத்தார்.