சென்னை, ஜன. 29- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா தொடர்பாக சிபிஐ விசாரணை கோரும் வழக்கில், சிபிஐயை எதிர்மனுதார ராக சேர்க்க திமுகவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப் பட்ட இடைத்தேர்தல், பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது. இதை யடுத்து பணப்பட்டுவாடாவை தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தொடர்ந்த வழக்கில், சிபிஐ விசாரணை கோரி திருத்தம் செய்ய அவர் அனுமதி கோரியிருந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கையை ஏற்றது. தொடர்ந்து, ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பான பிரதான வழக்கு வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.