tamilnadu

img

மக்களால் தாங்க முடியாது : தொழில் வர்த்தக சங்கம் வேதனை

தொழில் வர்த்தக சங்கம் வேதனை

மதுரை,  மே 6 - தமிழ்நாடு   தொழில் வர்த்தக சங்க  தலைவர்   ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கைவருமாறு: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று நோயால் மனிதகுலம்,  குறிப்பாக தற்போது, எந்தத் தலைமுறையும் கண்டிராத அளவுக்கு பல்வேறு நெருக்கடிகளை  சந்தித்து வருவது அனைவரும் அறிந்ததே.

அச்சத்தின்பிடியில் தொழில்துறையும் தொழிலாளர்களும்

மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு தற்போது வரை அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறு வனங்கள் அனைத்தும் மூடப்பட்டு  மிகப் பெரிய அளவில் பொருளாதார இழப்புகளை சந்தித் துள்ளது. திடீரென அறிவிக்கப்பட்ட  ஊரடங்கால் ஏற்கனவே உற்பத்தியான பொருட்களை  வெளி இடங்களுக்கு அனுப்ப முடியாமல் தேக்கம் அடைந்துள்ளன. உற்பத்தியாளர்களும், தொழில் வணிகத் துறையினரும் மிகுந்த நிதி நெருக்கடியில் உள்ளனர். இந்த பாதிப்பில் இருந்து இந்த நிறுவனங்கள் குறுகிய காலத் திற்குள் மீண்டு வருவது என்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது. மேலும் சிறு, குறுதொழில் நிறுவனங்களில் பணிபுரியும் லட்சக்கணக்கான பணியாளர்களின் வாழ்வாதாரமும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. ஊரடங்கு காரண மாக உற்பத்தியும், வணிகமும்  முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு கால கட்டத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கே தொழில் வணிகத் துறையினர் மிகவும் திண்டாட வேண்டிய சூழலுக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

ஏற்கெனவே பல்வேறு சிரமங்களுக்கிடையே தத்தளித்துக் கொண்டிருக்கும் தொழில் வணிக நிறுவனங்கள், ஊரடங்கிற்குப் பிறகும் கடுமை யான சவால்களை எதிர்கொள்ள வேண்டி யுள்ளது. வாடிக்கையாளரிடமிருந்து வர வேண்டிய நிலுவைத் தொகை தாமதம், தொழி லாளர்கள் தங்கள் குடும்பச் செலவுக்காக கேட்கப் படும் அட்வான்ஸ், வங்கிக் கடன் நிலுவை, ஜி.எஸ்.டி., இ.எஸ்.ஐ., இ.பி.எஃப், சொத்துவரி, அதிகமான மின்கட்டணம் உள்ளிட்ட பல தொகைகளை செலுத்த வேண்டியுள்ளது. தற் போது நிலவிவரும் நிலையில்லாத தொழில் சூழல் மற்றும் முழுமையான தொழில் இயக்க மின்மையால் குறைந்த வருவாயை மட்டுமே தொழில் வணிகத் துறையினர் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்கிற அச்சம் தொழில் துறையினரிடையே ஏற்பட்டுள்ளது.

சர்வதேச விலை பெரும் சரிவு

இதனிடையே, சவூதி அரேபியா மற்றும் ரஷ்யா இடையேயான போட்டியில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உற்பத்தி வெகுவாக அதிகரித்து, அதன் விலையானது சுமார்  20 வருட சரிவுக்கு  தள்ளப்பட்டுள்ள நிலை யில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை  குறைந்தபட்சம் லிட்டருக்கு 20 ரூபாய் குறைக்கப் படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. கச்சா எண்ணெய் பேரல் 70 டாலருக்கு விற்கப் பட்டபோது, நிர்ணயிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை தற்போது கச்சா எண்ணெய் பேரல் 30 டாலருக்கு விற்கப்படும்போதும் அதே விலை நீடிக்கிறது.

அதிர்ச்சியளிக்கும் கூடுதல் வரி

ஆனால் பெட்ரோல், டீசல் மீதான விலைகள் குறைக்கப்பட்டு அவை கலால் வரி மற்றும் கூடுதல் சாலை வரியாக இதுவரை இல்லாத  அளவிற்கு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.10, டீசலுக்கு ரூ.13 என மத்திய அரசு தற்போது உயர்த்தி சரிசெய்துள்ளது மிகவும்   அதிர்ச்சி யளிப்பதாக உள்ளது. இது தொடர்பாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் கலால் வரி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிக்கையின் படி பெட்ரோல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி  ரூ.2, சாலை கட்டமைப்பு வரி ரூ.8 என்ற அள விலும், டீசல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ரூ.5, சாலை கட்டமைப்பு வரி ரூ.8 என்ற அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு 2-வது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு மீண்டும் உயர்த்தியுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் சமீபத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரி பெட்ரோல்விலை லிட்டருக்கு ரூ.3.25, டீசல்  விலை லிட்டருக்கு ரூ.2.50 என உயர்த்தப் பட்டது. குறிப்பாக,, சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயரும் போதெல்லாம்   பெட்ரோலியப் பொருட்களின் விலை உடனே  அதிகரிக்கப்படுகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைச் சரிவை சந்தித்தபோதெல்லாம்,  அதன் பலனை மக்களுக்குக் கிடைக்கவிடாமல், மத்திய அரசு வரியாக எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மக்களால் தாங்க முடியாது

பெட்ரோலும், டீசலும் தான் நம் தொழில் மற்றும் உற்பத்திக்கான உண்மையான சக்கரங் கள். தற்போது கச்சா எண்ணெய் விலை கடுமை யாக வீழ்ச்சி அடைந்துள்ள சூழலில் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்துவதால் அத்யாவசியப் பொருட்கள் விலை கடுமை யாக உயரும். இந்த பொருட்களின் விலை உயர்வை தற்போதைய சூழலில் மக்களால்  தாங்கமுடியாது. தற்போது கொரோனா பாதிப் பால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள அடித்தட்டு மக்கள் இதனால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். 

ஏற்கனவே தேக்க நிலையில் உள்ள தொழில், வணிகம் மிகவும் பாதிப்புக்குள்ளா கும். எனவே, பெட்ரோல், டீசல் மீதான தற்போதைய கலால் வரி உயர்வை கைவிட்டு, உடனடியாக பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட வேண்டும். மேலும் அனைத்துப் பொருட்களும் ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் உடனடி யாக பெட்ரோல், டீசலை  ஜி.எஸ்.டி  வரி வரம்புக் குள் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பாக  மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.