திருவண்ணாமலை, மார்ச் 30- ஆரணி அருகே வேறு சாதி பெண்ணை காதலித்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட் டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மரப்பன் தாங்கள் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (26). தாழ்த்தப்பட்ட ஒட்டர் இனத்தை சேர்ந்த அவர் ஒண்டி குடிசை பகுதியைச் சேர்ந்த மாற்று சாதியைச் சார்ந்த பெண்ணை காதலித்துள்ளார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுதாகரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த மிரட்டலுக்கு பயப்படாத சுதாகரும் அந்தப் பெண்ணும் ஒருவரையொ ருவர் விரும்பி வந்தனர். இந்நிலையில் ஞாயிறன்று (மார்ச்சு 29) காலை 7 மணிக்கு மரப்பன் தாங்கள் ஏரிக்கு சென்ற சுதாகரை அங்கு ஆயுதங்களுடன் காத்திருந்த பெண்ணின் தந்தை மூர்த்தி, உறவினர் கதிரவன் ஆகியோர் சுதாகரை வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். சம்பவ இடத்திலேயே சுதாகர் உயிரிழந்தார்.
படுகொலை செய்த மூர்த்தி, கதிரவன் இருவரும் ஆரணி கிராமிய காவல் நிலையத் தில் சரணடைந்தனர். படுகொலை செய்யப்பட்ட கதிரவன் சடலம் பிரேத பரிசோதனைக்கு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த ஆரணி காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.