சென்னை, ஜூலை 28- தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிப்போம் என கல்வியாளர்கள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் சூளுரைத்தனர். தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் தேசியக் கல்விக் கொள்கை 2019 வரைவு அறிக்கை குறித்த கருத்தரங்கம் சென்னையில் ஞாயிறன்று (ஜூலை 28) நடை பெற்றது. இதில் பேராசிரியர் அருணன் பேசுகையில், புதிய கல்விக் கொள்கை யின் மூலம் மொழிச்சுமை, தேர்வுச்சுமை, குவியல் சுமை ஏற்படுகிறது. அதாவது 2 முதல் 8 வயது குழந்தைகளுக்கு கற்கும் ஆற்றல் உள்ளதால், 3 மொழிகளையும் கற்க முடியும் என்கிறார்கள். மும்மொழிக் கொள்கையில் ஆங்கிலம், இந்தி, மாநில மொழி எனக் கூறப்பட்டுள்ளது. மும்மொழிக் கொள்கையை தீவிரப்படுத்துவோம் என தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. அப்படி யென்றால் ஆங்கிலம், தாய் மொழி அல்லாது பிற மாநில மொழிகளை மாணவர்கள் விரும்பினால் கற்றுத் தருவீர்களா? என கேள்வி எழுப்பி னார். 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்க ளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு இடை நிற்றல் உருவாகும். மாணவர்கள் இல்லாத பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்படும் என்கிறார்கள். மாணவர்களே இல்லையென்றால் நூலகம் எதற்கு? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
திருச்சி சிவா
திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில், இந்திய வரலாற்றிலேயே ஒரு மக்களவை கூட்டத் தொடரில் 30 மசோதாக்கள் இதுவரை நிறை வேற்றியதில்லை. ஆனால் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. ஒரு மசோதாவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் கூட அது நிலைக்குழு வில் விவாதித்த பிறகுதான் நிறை வேற்றப்படும். ஆனால் பாஜக ஆட்சி யில் எந்த மசோதாவும் நிலைக் குழுவில் விவாதிப்பதில்லை. டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் தலைமையிலான குழு தயாரித்த தேசிய கல்விக் கொள்கை மோச மானது. எனவே அதை அமல்படுத்தக் கூடாது என அனைவரும் எதிர்த்ததால் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அந்த குழுவை கலைத்து, கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு அமைத்தார். ஆனால் கஸ்தூரிரங்கன் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் தயாரித்த அறிக்கை யின் தொடர்ச்சியாக உள்ளது என்று குற்றம்சாட்டினார்.
திருமாவளவன்
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், சவால்கள் நிறைந்த காலகட்டத்தில் தேசம் உள்ளது. எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் பற்றி கவலைப்படாமல் ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை பாஜக அமல்படுத்தி கொண்டிருக்கிறது. தேசத்தை கட்டமைப்பதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வியின் ஊடாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அவர்கள் விரும்பும் இந்தியாவை உருவாக்க முயல்கிறார்கள் என்றார். எனவே ஜனநாயக கட்டமைப்பை காக்க அனைவரும் ஒன்றிணைந்து தேசியக் கல்வி கொள்கையை முறியடிக்க வேண்டும் என்றார்.
கே.சுப்புராயன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் கே.சுப்புரா யன் பேசுகையில், சுதந்திர இந்தியா இப்படி ஒரு நெருக்கடியை சந்தித்த தில்லை. கல்விக் கொள்கையில் மட்டுமல்ல அனைத்திலும் மாற்றம் கொண்டு வந்து விட்டார்கள். `ஹிட்லர் எப்படி ஒரு நபர் ஆட்சி முறையை கொண்டு வந்தாரோ அதுபோல் இங்கும் கொண்டுவர பாஜக முயற்சிக்கிறது. ஒரே மொழி, ஒரே நாடு எனக் கூறும் இவர்கள் வேதம் கற்றுக் கொடுத்து ஒரு தலித்தை சங்கர மடத்தின் மடாதிபதியாக்க தயாரா? மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க இன, மத, சாதி கலவரங்களை தூண்டிவிடுகிறது பாஜக. இதை அனைவரும் ஒன்றுபட்டு முறியடிப்போம் என்றார்.
பிரின்ஸ் கஜேந்திரபாபு
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு பேசுகையில், இந்தியாவை ஆள்வது அரசியலமைப்பு சட்டம் என்கிறோம். அப்படியென்றால் கஸ்தூரிரங்கன் அறிக்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டுதானே இருக்க வேண்டும். இன்றிருக்கக் கூடிய அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றி அமைக்கிற சூழலை ஏற்படுத்துகிற வகையில் இந்த கல்விக் கொள்கை உள்ளது. எப்படி இது நியாயமான கல்விக் கொள்கையாக இருக்க முடியும். இன்றிருக்கக் கூடிய 10, 12ஆம் வகுப்பு தேர்வு முறை நன்றாக இருக்கிறது என்கிறார்கள். அதில் எந்தக் குறையும் இல்லை என்கிறார்கள். நன்றாக இருக்கக் கூடிய 10, 12ஆம் வகுப்பு தேர்வை ஏன் சிதைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி னார். கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனர் அ.மாயவன் பேசுகையில், இந்தக் கல்விக் கொள்கையின் சாதகமான அம்சங்களே இல்லை. பாதகமான அம்சங்கள்தான் உள்ளன. கல்வித் துறையை கபளிகரம் செய்யக் கூடிய கல்விக் கொள்கையாக உள்ளது. இந்த கல்விக் கொள்கை அமலானால் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் இருக்க முடியாது, உயர்கல்வித்துறை அமைச்சராக கே.பி.அன்பழகன் இருக்க முடியாது. எனவே மாநில உரிமையை, கல்வி உரிமையை மறுக்கும் இந்த கல்விக் கொள்கையை முறியடிக்கும் வகையில் மாணவர்களிடமும், பொது மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்றார். முன்னதாக தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டது. இதில் மாநிலத் தலைவர் எஸ்.பக்தவச்சலம், மாநில மகளிரணி செயலாளர் லதா, பொருளாளர் கே.ஜி. பாஸ்கரன், பொதுச் செயலாளர் எஸ்.சேதுசெல்வம் உட்பட மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.