திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் சரணடைந்த சுரேஷை 7 நாட்கள் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2 ஆம் தேதி திருச்சி லலிதா நகைக்கடை சுவரில் துளையிட்டு `13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலிசார் 7 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் அக்டோபர் 3 ஆம் தேதியன்று மணிகண்டன் என்பவரை போலிசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முக்கிய குற்றவாளியான சுரேஷ் மற்றும் முருகன் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் சுரேஷ் செங்கம் நீதிமன்றத்திலும் மற்றும் திருவாரூர் முருகன் பெங்களூர் நீதிமன்றத்திலும் சரணடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சரணடைந்த சுரேஷை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தனிப்படை போலிசார் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்நிலையில் இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் சுரேஷை 7 நாட்கள் போலிஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தனர். மேலும் 2 நாட்களுக்கு ஒரு முறை சுரேஷ் அவரது வழக்கறிஞரை சந்திக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.