tamilnadu

img

ஹரியானாவில் ஆட்சியமைக்க பாஜக பேரம்

புதுதில்லி,அக்.25-  ஹரியானாவில்  ஆட்சியமைக்கும் முயற்சியில் பாஜக, ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்களுடன் பேரம் பேசும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வில்லை. ஆட்சியமைப்பதற்கு 46 இடங்கள் தேவை. ஆனால்   பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 31 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தங்களது குறைந்தபட்ச செயல் திட்டத்தை ஏற்கும் எந்த கட்சிக்கும் ஆதர வளிப்போம் என்று  10 எம்எல்ஏக்களை பெற்றுள்ள ஜனநாயக ஜனதா கட்சி தெரி வித்துள்ளது. இந்த கட்சியை ஹரியானா முன்னாள் முதலமைச்சரும், ஊழல் வழக்கில் சிறையில் உள்ளவருமான ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரன் துஷ்யந்த் சிங்  சவுதாலா, கடந்த ஆண்டுதான் துவக்கினார்.    ஹரியானாவில் சுயேட்சைகள் 7 இடங்களிலும் இந்திய தேசிய லோக்தள் கட்சி, ஹரியானா லோகித் கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன. 10 எம்எல்ஏக்களை வைத்துள்ள ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் வியாழனன்று இரவு தில்லியில் அமித்ஷாவை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஜனநாயக ஜனதா கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் தில்லியில் துஷ்யந்த் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஹரியானா மாநிலத்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 75 சதவீத இடஒதுக்கீடு, முதியோர் ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட குறைந்தபட்ச செயல்திட்டத்தை ஏற்கும் எந்த கட்சிக்கும் ஆதரவளிக்க தயார் என்றார்.   இந்நிலையில் ஹரியானா பாஜக தலை வர்கள்,  ஜனநாயக ஜனதா கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆகியோருடன் ‘பேரம்’ பேசும் நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.