திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ஊரடங்கு நடைமுறையில் இருக்கின்ற நேரத்தில் கொரோனா நோய்த் தொற்று குறித்து முதலமைச்சர், அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடனும், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடனும் - ஏன், மருத்துவ நிபுணர்களுட னும், மதத் தலைவர்களுட னும் ஆலோசனைக் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் கொடிய கொரோனா நோய் குறித்து ஏப்ரல் 15 அன்று நடைபெறும் வகையில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் அந்தக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று காவல்துறை மூலம், அதிமுக அரசு நோட்டீஸ் கொடுக்க வைத்தது. தனிமனித இடைவெளி விட்டு, அரசின் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு, கூட்டம் நடத்தப்படும் என்று மீண்டும் திமுக சார்பில் உறுதிமொழி அளிக்கப் பட்டும் - சென்னை மாநகர காவல்துறை, திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அனுமதி மறுத்திருக்கிறது. கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அதிமுக அரசு பிடிவாதமாகச் செய்வது போல், ஜனநாயக நெறிகளுக்கு முரணான அரசியல் செய்ய, திமுக சிறிதும் விரும்பவில்லை. தமிழக மக்களின் நலன் சார்ந்த பிரச்சனை குறித்து திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. ஏப்ரல் 16 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிகளின் இந்த ஆலோசனைக் கூட்டம், காணொலிக் காட்சி மூலம் நடைபெறும்.