tamilnadu

img

பட்டியலின மக்களை சாமி ஆடி இழிவாக பேசிய பெண் கைது!

புதுக்கோட்டையில், கோயிலுக்குள் சென்ற பட்டியலின மக்களை சாமி ஆடி இழிவாக பேசிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமம் வேங்கைவயல் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்ப மக்கள் வசித்து வருகின்றனர். குடிநீர் தொட்டியில் மலம் கலந்திருந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆதிதிராவிட மக்கள் அப்பகுதிகளில் உள்ள கோயில்களுக்குள் தங்களை நுழைய விடுவதில்லை என்று தெரிவித்தனர். உடனே  அப்பகுதி பட்டியலின மக்களை, மாவட்ட ஆட்சியர் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். அப்போது, கோயில் பூசாரியின் மனைவி சிங்கம்மாள் சாமி வந்தது போல ஆடி, பட்டியலின மக்களை இழிவாக பேசினார். இதை அடுத்து, சிங்கம்மாள் மீது எஸ்.சி-எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல், தீண்டாமையை கடைபிடித்த அஞ்சப்பன் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், டீக்கடையில் இரட்டை குவளை முறையை கடைபிடித்த கடை உரிமையாளர் மூக்கையா மற்றும் மனைவி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், சிங்கம்மாள் மற்றும் மூக்கையா இருவரையும் போலீசார் கைது செய்தனர்.