tamilnadu

img

முந்திரி லாரி கடத்திய முன்னாள் அமைச்சர் மகன் மீது குண்டர் சட்டம்  

முந்திரி லாரியை கடத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் மகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.  

புதுக்கோட்டை - முந்திரி பருப்பு லாரியை கடத்திய வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மகனை குண்டர் சட்டத்தில் அடைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.  கடந்த 26 ஆம் தேதியன்று கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியிலுள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து ரூ.1.10 கோடி மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பை ஏற்றிக்கொண்டு, கன்டெய்னர் லாரி ஒன்று தூத்துக்குடி துறைமுகம் நோக்கி சென்றுகொண்டிருந்தது.  அப்போது தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி அருகே வந்தபோது, அந்த லாரியை கார் ஒன்று வழிமறித்தது. காரில் இருந்து இறங்கிய நபர்கள், லாரி ஓட்டுநர் ஹரியை தாக்கி, லாரியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து புதுக்கோட்டை தனிப்படை போலீஸார் சுங்கச்சாவடி கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்ததில் அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில அமைப்புச் செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியனின் மகன் ஞானராஜ் ஜெபசிங் உள்பட 7 பேர் லாரியை கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பின்னர் 7 பேரை கைது செய்து, ரூ. 1.10 கோடி மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பு, கன்டெய்னர் லாரி, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  

இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய அமைச்சர் மகன் ஞானராஜ் ஜெபசிங் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் அறிக்கை தாக்கல் செய்தார். அதன்படி, ஞானராஜ் ஜெபசிங்கை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்த போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.