tamilnadu

img

மற்றுமொரு கீழடியாக அடையாளம் காணப்படும் வாய்ப்பு தொடங்கியது பொற்பனைக்கோட்டை அகழாய்வு.... அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்....

புதுக்கோட்டை:
தமிழரின் தொன்மையைப் பறைசாற்றும் மற்றுமொரு கீழடியாக கருதப்படும் புதுக்கோட்டைமாவட்டம் பொற்பனைக்கோட்டை அகழாய்வுப் பணி வெள்ளிக்கிழமையன்று தொடங்கியது.

புதுக்கோட்டையிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பொற்பனைக்கோட்iடை. இங்கு ஏராளமான தொல்லியல் சின்னங்கள் தரையின் மேற்பரப்பிலேயே கிடைத்து வந்தன. இதனையடுத்து இங்கு அகழாய்வுப் பணி மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் ஆய்வுக்கழகத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் வலியுறுத்தி வந்தனர்.ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தி நீதிமன்றத்திலும் முறையிடப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆகழாய்வுப்பணி மேற்கொள்ள உத்தரவிட்டது.இதனையடுத்து கோட்டை, கொத்தளங்க ளோடு உள்ள பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு செய்வதற்கு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு அரசு அனுமதி அளித்ததையடுத்து, அப்பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் இனியன் தலைமையில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக இடம் தேர்வு செய்தல் போன்ற முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வந்தன. அதன்படி, இனியன், தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் ஆ.மணிகண்டன், உறுப்பினர் எம்.ராஜாங்கம், அகழாய்வுப் பணி மேற்பார்வையாளர் ஆர்.அன்பழகன், வேப்பங்குடி ஊராட்சித் தலைவர் ராஜாங்கம் உள்ளிட்டோர், அகழாய்வு நடைபெற உள்ள இடத்தில் மேலாய்வுப் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, சங்க காலத்தைச் சேர்ந்த பச்சை, கருஞ்சிவப்பு, ஊதா, பழுப்பு, கருப்பு, இளமஞ்சள்போன்ற வண்ணங்களில் மணிகள் கிடைத்துள்ளன. மேலும், கருப்பு, ஊதா வண்ண வளையல்களின் உடைந்த பகுதிகள், உருக்கு மூலம் உருவாக்கப்பட்ட இரும்புத் துண்டுகள், நிறமற்ற கண்ணாடிப் படிகம், குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. மேலும், தட்டு, கிண்ணம், கலயங்களின் உடைந்த பகுதிகள், உருக்கு உலையின் அடிமானங்கள், உலோகக் கழிவுகளும் கிடைத்துள்ளன.

அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு இளைஞர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அகழாய்வுப்பணியை வெள்ளிக்கிழமையன்று  தொடங்கி வைத்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: 

தமிழர்களின் பாரம்பரியங்களை வெளிக்கொண்டு வருவது, பாதுகாப்பது, அடையாளப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளுக்குத் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதேபோல, பொற்பனைக் கோட்டையில் மேற்கொள்ளப்படும் அகழாய்வுப் பணியை முழுமையாக மேற்கொள்வதற்குத் தேவையான நிதி, அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும். இத்தையக பெருமைவாய்ந்த தொல்லியல் இடமான பொற்பனைக் கோட்டை எனது ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் அமைந்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி என்றார்.இதுகுறித்து பேராசிரியர் இனியன் கூறியது: 

அகழாய்வுக்கு முன்னதாகவே, அதன் மேற்பரப்பில் இத்தகைய சங்க காலத்தைச் சேர்ந்த பொருட்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, தொழில்நுட்பக் கருவி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவின்அடிப்படையில், அகழாய்வுக்கான இடம் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் ஏற்கெனவே பல்வேறு இடங்களில் அகழாய்வுப் பணி நடைபெற்றிருந்தாலும்கூட நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தற்போது முதல் முறையாக இங்கு அகழாய்வு நடைபெறுகிறது என்றார்.இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, தொல்லியல் ஆய்வு கழகஇயக்குநர் பேராசிரியர் இனியன், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் மணிகண்டன், உறுப்பினர் எம்.ராஜாங்கம், ஊராட்சிமன்றத் தலைவர் ராஜாங்கம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.