புதுக்கோட்டை, ஜூன்.24- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்ட வணிகர் சங்கங்களுடன் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வணிகர்கள், பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிய செய்தும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கடைகள் திறக்கும் நேரத்தில் ஏதேனும் மாற்றம் செய்தால் அதுகுறித்து தகவலை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து வராத பொது மக்களுக்கு எக்காரணத்தை முன்னிட்டும் பொருட்கள் விற்பனை செய்யக் கூடாது. அரசால் தெரிவிக்கப்படும் விதி முறைகளை தொடர்ந்து மீறும் கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய பொது சுகாதாரச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன் மற்றும் வர்த்தக சங்கத் தலைவர்கள், பிரதிநிகள் உடனிருந்தனர்.