புதுக்கோட்டை:
கொரோனா உயிரிழப்புகளை மறைக்கும் அவசியம் அரசுக்கு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்த பின்னர்அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
\கொரோனா வைரஸின் அறிகுறிகள் தற்போது அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனா தொற்று உள்ளவர்கள் அனைவருக்கும் நுரையீரல் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். சிடி ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே எடுத்து அவர்களுக்கு ஆன்ட்டிபயாடிக் கொடுத்து வருகிறோம். உயர் ஆன்ட்டிபயாடிக் மருந்துகளையும் நோயாளிகளுக்கு தற்போது கொடுத்து வருகிறோம். இதனால்தான் தற்போது குணமடையோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தொடர்பான பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தமிழகத்துக்கு தேவையான அனைத்து மருத்துவ தேவைகளையும் செய்து வருகிறது. ஏற்கனவே கொரோனா தாக்கம் தொடங்கிய பின்னர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் 12,480 பேரை முதல்வர் பழனிசாமி பணிநியமனம் செய்தார். இதனையடுத்து அதிகபட்சமாக செவிலியர்கள் 2000 பேருக்கு தற்காலிகமாக பணிநியமனம் வழங்கப்பட்டது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.