புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி விழாவில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 60-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த குன்னத்தூரில் காவிரி - தெற்கு வெள்ளாறு -வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.முதலமைச்சர் கலந்து கொள்ளும் விழாவில் பெருமளவில் ஆட்களைத் திரட்ட வேண்டும் என்பதற்காக ஆளுங்கட்சியினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர். அதன் ஒருபகுதியாக விராலிமலை ஒன்றியம் திருநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருநல்லூர், ஆச்சநாயக்கன்பட்டி, கலர்பட்டி ஆகியகிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவற்றில் பெரும் பகுதியினர் நூறுநாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் விவசாயத் தொழிலாளர்கள். இவர்களுக்கு மதிய உணவாக முட்டையுடன் கூடிய புளிச்சாதம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை சாப்பிட்ட 60-க்கும் மேற்பட்டோருக்கு ஞாயிறன்று இரவு முதல் திங்கள் கிழமை காலை வரை வாந்தி, பேதி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் இலுப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம், அன்னவாசல் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.