புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே 7 வயதுசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
ஆவுடைடயார்கோவில் தாலுகா ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்தார். மூன்று தினங்களுக்கு முன்பு அங்கு விளையாடியுள்ளார். இரவு வரை வீடு திரும்பாததால் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள கண்மாய்க் கரையோரம் அடர்ந்த புதருக்குள் உடலில் பல்வேறு இடங்களில் காயங்களுடன் சிறுமி சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை சம்பவ இடத்திற்குச் சென்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.வி.அருண்சக்திகுமார் மற்றும்வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்து, காட்டுக்குள் சடலத்தை வீசிச் சென்றது அதே கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் ராஜா என்ற சாமுவேல் (27) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், சிறுமியை கொடூரமான முறையில் கொலை செய்தவருக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும். இச்சம்பவத்தில் மற்றவர்களுக்கு தொடர்பு இருந்தால் அவர்களையும் உடனே கைது செய்ய வேண்டும்.சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை சிறுமியின் உடலை உடற் கூராய்வு செய்யக்கூடாது என சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம், கடையடைப்புப் போராட்டம்
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற தர்ணா ஆர்ப் பாட்டத்திற்கு ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.சலோமி தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் செந்தமிழ்பாண்டியன் உள்ளிட்டோர் பேசினர்.குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதோடு, பாதிக்கபட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க உறுதியளித்தால் மட்டுமே உடலை வாங்குவோம் எனவும், உடற்கூராய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி ஏம்பல் பகுதியில் வியாழக்கிழமை வியாபாரிகள் கடையடைப்பு செய்தனர்.
நீதி வேண்டும்: உறவினர்கள் கதறல்
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் அறிவித்த 5 லட்ச ரூபாய்க்கான காசோலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்ட தீர் உதவித்தொகையாக மாவட்ட ஆட்சியர் அறிவித்த 8.25 லட்சம் ரூபாயிலிருந்து முதல்கட்ட நிதியாக4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர்பி.உமாமகேஸ்வரி சிறுமியின் பெற்றோர்களிடம் வெள்ளிக்கிழமை வழங்கினார்.இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் கூறுகையில், எங்கள் வீட்டில் செல்லமாக வளர்ந்த பிள்ளையை இழந்து தவித்து வருகிறோம். எங்களுக்கு நிதி தேவையில்லை. எங்கள் பிள்ளையின் சாவுக்கு நீதி வேண்டும், இதில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகள் அனைவரும்கைது செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை பெற்று தர வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவம் எந்த ஒரு குழந்தைக்கும் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார்.
ஊரடங்கில் தொடரும் குற்றச்செயல்: சிபிஎம் கண்டனம்
இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் கூறுகையில், இந்த ஊரடங்கு காலத்தில் புதுக்கோட்டைமாவட்டத்தில் குற்றச்செயல்கள் அதிக அளவில் நடந்துள்ளன. குடும்ப வன்முறை அதிகமாக நடந்துள்ள மாவட்டமாக புதுக்கோட்டை உள்ளதை காவல்துறைப் பதிவேடுகளே சொல்கிறது. தற்பொழுது மாவட்ட எஸ்.பி. இதைமறுத்துள்ளார். அவர் மறுத்தாலும் உண்மையை ஒருபோதும் மறைக்கமுடியாது. மாவட்டத்தில் ரவுடிகளுக்கு பயந்து காவல்துறை செயல்படுகிறதோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த கறை யைப் போக்க வேண்டுமானால் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதுகாவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொ்ள வேண்டும்.
ஏம்பலில் 7 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருபது கடும் கண்டனத்திற்கு உரியது. காவல்துறை ஒருவரை கைது செய்துள்ளது. அதே நேரத்தில் இது கூட்டு பாலியல் படுகொலையாக இருக்கலாம் என உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்தும் விசாரணை செய்து காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றார்.'