tamilnadu

img

அறந்தாங்கியில் 32 அரசுப் பேருந்துகள் இயக்கம்

அறந்தாங்கி, ஜூன் 1- கொரோனா ஊரடங்கு தளர்வை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கடந்த 60 நாட்களுக்கும் மேலான பிறகு புறநகர் மற்றும் நகரப் பேருந்து என 32 அரசுப் பேருந்துகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக பேருந்து சேவைகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ஊரடங்கு தளர்வால் திங்கட்கிழமை முதல் மண்டலம் வாரியாக கட்டுப்பாடுகளுடன் பேருந்து சேவை தொடரும் என அரசு அறிவித்தது. இதில் அறந்தாங்கியில் அதிகாலை ஐந்தரை மணி முதல் 10 நகரப் பேருந்து, 22 புறநகர்ப் பேருந்து என 32 பேருந்துகள், மண்டலம் 4-ல் உள்ள திருச்சி, பட்டுக்கோட்டை, அரசங்கரை, கல்லூர் கீரமங்கலம், கட்டுமாவடி, உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. இதனால் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் கடந்த 60 நாட்களுக்கு மேலாக தற்காலிக காய்கறி சந்தை இயங்கி வந்த நிலையில் அதனை அப்புறப்படுத்தி விட்டு பேருந்து நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், வெளியூர் நகரப் பேருந்து முழுமையாக கிருமி நாசினி அடிக்கப்பட்டன. பேருந்து பயணிகள் பின் வழியாக ஏறி செல்ல வேண்டும். பயணிகள் அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டன. முதல் நாளில் குறைந்த பயணிகளுடனே பேருந்துகள் இயங்கின.