பிளஸ் 2 பொதுத் தேர்வு: கலைமகள் பள்ளி சாதனை
தரங்கம்பாடி, ஜூலை 21- மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளனர். மாணவி எஸ்.சௌமியா 573 மதிப்பெண் பெற்று முதலிடமும், மதுபாலா 569 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், ஹெச்.நூருல் ஷகீரா 552 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பிடித்துள்ளனர். மேலும் 14 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். மாணவர்களை பள்ளி தாளாளர் கே.நெடுஞ்செழியன், செயலாளர் ஜி.ஜெயப்பிரகாசம், நிர்வாக இயக்குநர் என்.எஸ்.குடியரசு, பள்ளி முதல்வர் ஆர்.ராஜ்பரத், துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தையல் கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜூலை 21- தொழிலாளர் நல வாரியத்தில் கல்வி, திருமணம், விபத்து மற்றும் இயற்கை மரணம் நிதி ஆகிய கேட்பு மனுக்களுக்கு போதுமான நிதியை ஒதுக்கி உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் செவ்வாயன்று மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தையல் சங்க புறநகர் மாவட்ட செயலாளர் ஷாஜகான் தலைமை வகித்தார். வாலிபர் சங்க புறநகர் மாவட்டத் தலைவர் பாலு, ஆட்டோ சங்க புறநகர் மாவட்டத் தலைவர் நவமணி, சிபிஎம் வட்டகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். புத்தாநத்தம் கடைவீதியில் சங்க வட்டத் தலைவர் அய்யாவு தலைமை வகித்தார்.
சனநாயக இயக்கங்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
திருவாரூர், ஜூலை 21- திராவிட கழக நிறுவனர் சமூக நீதி போராளி தந்தை பெரியார் சிலையை அவமதித்த மதவெறியர்களை கண்டித்தும், சிபிஐ மாநிலக்குழு அலுவலகத்தை அவதூறாக சமூக வலைதளத்தில் சித்தரித்தவரை கைது செய்யக் கோரியும், அண்மைக் காலமாக பத்திரிகையாளர்களை தாக்கி மிரட்டும் போக்கை கண்டித்தும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 11 சமூக செயல்பாட்டாளர்களை விடுதலை செய்யக்கோரியும் திருவாரூரில் சனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு க.கோ.கார்த்தி தலைமை வகித்தார்.
தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம், ஜூலை 21- நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகியவற்றில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தொட்டி இயக்குநர்கள் உள்ளிட்டோருக்கு, முதலமைச்சர் அறிவிப்பின்படி, ஊதிய உயர்வு அளித்தல், கொரோனா பரிசோதனை செய்தல், பாதுகாப்புக் கருவிகள் வழங்குதல், சிறப்புப்படிகள் அளித்தல் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை நகராட்சி அலுவலகம் மற்றும் நாகை மாவட்ட உள்ளாட்சி நிர்வாக அலுவலகங்கள் முன்பு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க நாகைக் கிளைத் தலைவர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். கூட்டுறவுத் துறை ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சு.மணி விளக்கவுரையாற்றினார். தூய்மைப் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கிராம செவிலியர்கள் போராட்டம்
நாகப்பட்டினம், ஜூலை 21- கொரோனா பரவலைத் தடுக்கத் தங்கள் உயிரைச் துச்சமென நினைத்துக் களப்பணியாற்றும் கிராம சுகாதார செவிலியர் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல், நோய்த் தொற்று ஏற்பட்டோருக்கு உயரிய சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் அனைவரும் கோரிக்கை அட்டை அணிந்து ஜூலை 21, 22 ஆகிய இரு நாட்கள் பணியாற்றுவதுடன் கோரிக்கை விளக்கப் போராட்டம் நடத்துமாறு, சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.பரமேஸ்வரி, மாநிலப் பொதுச் செயலாளர் பா.இராணி ஆகியோர் அறிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை நாகப்பட்டினத்தில், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன் கிராம செவிலியர்களுக்குக் கருப்புப் பட்டைகள் வழங்கி, கோரிக்கைப் போராட்டத்தைத் துவக்கி வைத்து பேசினார். சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பா.இராணி நன்றி கூறினார்.